Published:Updated:

கொரோனா: படுக்கை இல்லை; ஆம்புலன்ஸில் உயிருக்கு போராடியக் குழந்தை - தாமதத்தால் உயிரிழந்த சோகம்!

ஆந்திரா
ஆந்திரா

ஆந்திராவில் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கை கிடைக்காததால் 1.30 மணி நேரமாக ஆம்புலஸில் காத்திருந்த ஒன்றரை வயதுக் குழந்தை தாமதத்தால் உயிரிழந்தது.

ஆந்திரா மாநிலம் விசாகபட்டினத்தை அடுத்த அச்சுதாபுரத்தை சேர்ந்தவர்கள் வீர பாபு (30) - உமா (23) தம்பதியர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஜான்விதா என்ற பெண் குழந்தை உள்ளது. குழந்தை ஜான்விதாவுக்கு கடந்த ஒரு வார காலமாக கடும் சளி மற்றும் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. ஆரம்பத்தில், அஜாக்கிரதையாக விட்ட பெற்றோர்கள், பின்னர் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் உடனடியாக விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

தனியார் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் குழந்தை ஜான்விதாவுக்கு அங்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. இருந்தாலும், மருத்துவர்கள் குழந்தைக்கு மிகுதியாகச் சளி மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் சந்தேகத்தின் பேரில் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதில் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதனையடுத்து, மருத்துவர்கள் குழந்தையை உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

குழந்தை ஜான்விதா
குழந்தை ஜான்விதா

பச்சிளம் குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் பதறிப்போன ஜான்விதாவின் பெற்றோர் அங்கிருந்து ஆம்புலன்ஸில் குழந்தையை ஏற்றிக்கொண்டு அருகிலுள்ள கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், கிங் ஜார்ஜ் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் ஆக்ஸிஜன் படுக்கைகள் அனைத்தும் நிரம்பி இருந்ததால் மருத்துவர்கள் ஜான்விதாவின் பெற்றோரிடம் படுக்கைகள் இல்லை என்று கூறிவிட்டனர். இதனால் படுக்கை கிடைக்கும் வரை ஆம்புலன்சிலேயே குழந்தையை வைத்துக் கொண்டு காத்திருந்தனர். மூச்சுத் திணறிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ஆம்புலன்சில் வைத்துக்கொண்டு சீக்கிரமாகப் படுக்கை கிடைத்து விடும், குழந்தையைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கையில் வீரபாபுவும் அவரின் மனைவியும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் காத்திருந்தனர்.

அவர்கள் காத்திருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று காண்போரைக் கலங்க வைக்கிறது. அந்த வீடியோவில், குழந்தை ஜான்விதாவின் தந்தை வீரபாபு குழந்தைக்கு ஆக்சிஜன் கிடைப்பதற்காக வாயில் பச்சை நிற பந்து ஒன்றினை வைத்து, காற்றுக்காக தொடர்ந்து அழுத்திக் கொண்டே இருக்கிறார். மனைவி உமா, ``யாராவது என் குழந்தையைக் காப்பாற்ற உதவி செய்யுங்க. எப்படியாவது என் குழந்தையைக் காப்பாற்றுங்கள். அவர்கள் (மருத்துவமனை ஊழியர்கள்) எங்களை நடு ரோட்டில் விட்டுவிட்டனர். தயவு செய்து காப்பாற்றுங்கள்" என்று கதறுகிறார்.

இணையத்தில் பதிவேற்றப்பட்ட குழந்தை ஜான்விதாவின் வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வந்த போதிலும் அந்த குழந்தைக்கு கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் படுக்கை மிகவும் தாமதமாகவே கிடைத்தது. சரியாக மதியம் 3.40 மணியளவில் ஆம்புலன்ஸில் இருந்து மிகவும் ஆபத்தான நிலையில் கிங் ஜார்ஜ் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு மருத்துவர்கள் 4.00 மணிக்குச் சிகிச்சையைத் துவங்கினர். ஆனால், ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு குழந்தை சரியாக 5.10 மணியளவில் கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துவிட்டதாக மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் தெரிவித்தார்.

குழந்தையின் பெற்றோர்
குழந்தையின் பெற்றோர்

குழந்தை உயிரிழந்ததை அடுத்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து அலட்சியமாகச் செயல்பட்டதாக மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், மருத்துவமனை டீன் மைதிலி குழந்தையின் மரணம் குறித்துக் கூறுகையில், ``மருத்துவர்கள் குழந்தைக்குச் சிறிது தாமதமாகச் சிகிச்சையை துவங்கியது உண்மை தான். ஆனால், 3.30 மணிக்கே சிகிச்சைக்குக் குழந்தையை அனுமதித்துவிட்டோம். மருத்துவர்களின் ஒரு மணி நேர சிகிச்சைக்கு பிறகே குழந்தை உயிரிழந்தது. எனவே தாமதமாகக் கொண்டு வந்ததால் குழந்தை உயிரிழக்கவில்லை, தீவிர மூச்சுத் திணறலால் தான் உயிரிழந்துவிட்டது' என்றார்.

பிள்ளையை பரிகொடுத்த பெற்றோர் கதறி அழுத காட்சி நம்மை கதிகலங்க வைக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு