Published:Updated:

எத்தனை காலம்தான்!

எத்தனை காலம்தான்!
பிரீமியம் ஸ்டோரி
News
எத்தனை காலம்தான்!

எத்தனை காலம்தான்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

மிழ்நாட்டில் எந்தப் பக்கம் திரும்பினாலும் ‘தண்ணீர்... தண்ணீர்’ என்று பேச்சுதான் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ‘‘தண்ணீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்காகக் கேரளாவில் தண்ணீர் கேட்டுள்ளோம்; ஆந்திராவில் கொடுக்கச் சொல்லியிருக்கிறோம்; கர்நாடகாவில் நமது பங்கை வாங்குவோம்’’ என்று ஆட்சியாளர்கள் சாக்குப்போக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது ஆள்பவர்களும் சரி, ஆண்டவர்களும் சரி, தண்ணீர் குறித்த விஷயத்தில் தொடர்ந்து கோட்டைவிட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தமிழ்நாடு அடிப்படையில் மழைமறைவுப் பிரதேசம். தென்மேற்குப் பருவமழை எட்டித்தான் பார்க்கும். வடகிழக்குப் பருவமழை வந்தால்தான் உண்டு. இந்த இரண்டு பருவமழைக் காலங்களிலும் சராசரியாக 40 நாள்கள் மழை பெய்கிறது என்கிறது புள்ளிவிவரம். ஆண்டு மழை அளவு சராசரியாக 900 மி.மீ. ‘‘இந்த அளவு மழை கிடைப்பதே இயற்கை கொடுக்கும் கொடைதான். மழைநீரை முறையாக அறுவடை செய்தால் தண்ணீர்ப் பஞ்சம் தமிழ்நாட்டில் தலைதூக்கிப் பார்க்காது. சிலசமயம் பருவமழைப் பொய்த்துப்போனாலும், ஏற்கெனவே அறுவடை செய்து வைத்துள்ள மழைநீரை வைத்துச் சமாளிக்க முடியும்’’ என்கிறார்கள் நீரியல் நிபுணர்கள்.

ஆனால், நம்மிடம் மண்ணில் விழும் மழைநீரைச் சேமித்து வைக்க போதுமான கட்டமைப்பு வசதிகள் இப்போது இல்லை. நம் முன்னோர்கள் உருவாக்கி வைத்திருந்த ஏரி, குளம், கண்மாய்களை காலிச்செய்துவிட்டோம்; செய்துகொண்டிருக்கிறோம். இயற்கை நம்மீது கருணை கொண்டு மாரிப்பொழிந்தாலும், அதைப் பயன்படுத்தத் தவறிவருகிறோம். இதனால், வறட்சியும் வெள்ளமும் மாறி மாறி வருகின்றன.

வறட்சி ஏற்படும்போது மட்டும் தண்ணீர் குறித்து அக்கறையாகப் பேசுவதும், கோடிக்கணக்கில் திட்டங்கள் போடுவதும் வாடிக்கையாக இருக்கிறது. மக்களே முன்வந்து ஏரி, குளங்களைத் தூர்வார நினைத்தாலும், கமிஷன் கிடைக்காது என்பதற்காகச் சட்டதிட்டங்களைச் சொல்லி முட்டுக்கட்டைப் போடும் அவலமும் நடக்கிறது. கால்வாய்களைச் சீர்படுத்தினோம்; ஏரி, குளங்களைத் தூர்வார குடிமராமத்து திட்டத்தைக் கொண்டுவந்தோம் என்று அரசு தரப்பு மார்தட்டிச் சொல்கிறது. உண்மையிலேயே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, துட்டு வாராமல் தூர்வாரியிருந்தால், ஒரு காலத்திலும் தண்ணீர்ப் பஞ்சம் தமிழ்நாட்டில் உருவாக வாய்ப்பில்லை. இன்னும் எத்தனை காலம்தான் இப்படி ஏமாற்றுவார்கள். நாமும் எத்தனை காலம்தான் ஏமாந்து கொண்டிருப்போமோ!? 

-ஆசிரியர்