
தொகுப்பு : ஆதலையூர் த.சூர்யகுமார்


வணக்கம் சுட்டி நண்பர்களே...
‘இந்தியாவின் தலைநகரம் புது டெல்லியாக இருக்கலாம்... ஆனால், நம் ஒவ்வொருவருக்கும் ஒரு தலைநகர் என்பது, அவரவர் பிறந்த ஊர்தான்’ என்கிறார் ஒரு பிரபல கவிஞர்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் அதே நேரம், நாம் பிறந்த மண்ணின், நம் ஊரின் வரலாற்றையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளும் அவசியத்தை நோக்கமாகக் கொண்டு உருவாக்கிவருவதுதான் இந்த இணைப்பிதழ். இதில், திருச்சி மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சாதனைகள், பிரபலங்கள் எனப் பல்வேறு தகவல்களைத் திரட்டிக்கொடுத்திருக்கிறோம். இது, உங்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை அளிக்கும். அத்துடன், பிரமாண்டமான போட்டியும் வைத்துப் பரிசும் அளித்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும் அல்லவா?
சேலம், சென்னை, தருமபுரி, மதுரை, கோவை, நெல்லை, விருதுநகர், புதுச்சேரி, மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இணைப்பிதழ்களைத் தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் நடத்திய போட்டிகளில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அந்தப் புத்தகத்துக்கும், நீட் தேர்வு போன்று OMR ஷீட் முறையில் நடத்தப்பட்ட தேர்வுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது.
‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்போல, எங்கள் மாவட்டத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளவும், வருங்காலத்தில் பல போட்டித் தேர்வுகளைக் குழப்பமின்றி எதிர்கொள்ளவும் இணைப்பிதழ் வழிவகுத்தது’ என மாணவர்கள் சொல்லியிருந்தனர். ஆசிரியர்களும், ‘எங்கள் மாணவர்களுக்குக் கிடைத்த இந்த நல்ல வாய்ப்பை, தமிழ்நாட்டின் மற்ற மாணவர்களும் பெற வேண்டும். உங்கள் பணி தொடரட்டும்’ என வாழ்த்தியிருந்தனர். அந்த வரவேற்பு கொடுத்த உற்சாகத்தில் தொடர்கிறோம்.
சென்னை, மதுரை, நெல்லை, மற்றும் கோவை ஆகியவற்றைத் தொடர்ந்து, இப்போது `திருச்சி 200' இன்ஃபோ புக் இதோ... உங்கள் கைகளில்.
அன்பு திருச்சி சுட்டிகளே... வாருங்கள் நம்மைச் சுற்றி உள்ளவற்றை அறிவோம்.
திருச்சிராப்பள்ளி பயோகிராஃபி
1. தமிழகத்தின் இதயம்
தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள மாவட்டம், திருச்சிராப்பள்ளி. தமிழகத்தின் நான்காவது பெரிய நகரம். சென்னைக்குத் தெற்கில் 336 கிலோமீட்டர் தூரத்திலும், கன்னியாகுமரிக்கு வடக்கில் 403 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. காவிரியின் டெல்டா பகுதிகள், திருச்சி மாவட்டத்திலிருந்தே தொடங்குகின்றன.
2. எப்படி வந்தது பெயர்?
‘மூன்று தலைகளைக்கொண்ட திரிசிரன் என்ற அரக்கன் (திரி-மூன்று, சிரம்-தலை) பூஜித்த இடம்' என்பதால், திருச்சிராப்பள்ளி பெயர் வந்தது என்கிறார்கள். திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டையில் காணப்படும் ‘சிரா’ என்னும் குகையில், சமணத் துறவிகள் தங்கியிருந்ததாக அந்தக் குகையில் உள்ள கல்வெட்டு கூறுகிறது. சிரா-துறவியின் பள்ளி. சிராப்பள்ளி, திரு என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என்றும் சொல்லப்படுகிறது.
3. இன்னொரு பெயர்க் காரணம்
தெலுங்கு மொழி அறிஞர் சி.பி.பிரவுன் என்பவர், சிறுத்த பள்ளி (சிறிய நகரம்) என்பதே திருச்சிராப்பள்ளி என்றானதாகவும், ஹென்றியூல் (Henry Yule) என்பவர், திரு-சிலா-பள்ளி (புனிதமான சிலைகளின் ஊர்) என்பதே திருச்சிராப்பள்ளி ஆனதாகவும் கூறுகிறார்கள்.
4. எல்லையில்லா எல்லை
தமிழகத்திலேயே அதிக மாவட்டங்களுடன் தனது எல்லையைப் பகிர்ந்துகொண்டிருப்பது, திருச்சி மாவட்டம்தான். திருச்சியைச் சுற்றி 10 மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன. அவை, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், சேலம் மற்றும் கரூர்.
புவியியல்
5. இனிய இருப்பிடம்
சேர்வராயன் மலை, பழநி மலை மற்றும் குன்றுகள் சூழ்ந்த சமவெளிப் பகுதியில் அமைந்துள்ளது, திருச்சிராப்பள்ளி மாவட்டம் முழுக்க முழுக்க சாகுபடி வயல்களால் சூழப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்.
6. திட்டமிட்டதும் திட்டமிடாததும்
திருச்சி நகரத்தின் மையப் பகுதியான மலைக்கோட்டைப் பகுதி, திட்டமிடாமல் உருவாக்கப்பட்டது. புதிதாக வளரும் புறநகர்ப் பகுதிகள், திட்டமிட்டு உருவாக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீரங்கம் பகுதியின் பல வீடுகள், சிற்ப சாஸ்திர விதிகளின்படி கட்டப்பட்டிருக்கின்றன.

7. ரேங்க்
தமிழ்நாட்டில் நான்காவது மிகப்பெரிய மாநகராட்சியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்தியாவில் 52-வது இடத்தில் உள்ளது. திருச்சி மாநகரப் பகுதியின் மக்கள்தொகை மட்டுமே 8.5 லட்சம் பேர். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மக்கள்தொகை 27,22,290. இந்து, இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, சமண மதங்களைச் சார்ந்தவர்கள் வாழ்கிறார்கள். தமிழ் தவிர, தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசுபவர்களும் இங்கு வசிக்கிறார்கள்.
8. திருச்சியின் இருப்பிடம்
திருச்சியின் தரைப்பகுதி பெரும்பாலும் சமவெளியாகவே இருக்கிறது. சில இடங்களில் அங்கொன்றும், இங்கொன்றுமாகக் குன்றுகள் காணப்படுகின்றன. இந்தக் குன்றுகளிலேயே உயரமான குன்றுதான் திருச்சி மலைக்கோட்டை.
9. திருச்சி லே-அவுட்
திருச்சியின் வடபகுதியில் தொழிற்பேட்டைகளும், குடியிருப்புகளும் நெருக்கமாக அமைந்திருக்கின்றன. நகரத்தின் தெற்குப் பகுதியிலும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன. மலைக்கோட்டைக்குள் அடங்கியுள்ள பழைய நகரம்தான் சரியாக திட்டமிடப்படாமல் அமைக்கப்பட்டது.
நிர்வாகம்
10. நகர நிர்வாகம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன. அபிஷேகபுரம், ஸ்ரீரங்கம், பொன்மலை, அரியமங்கலம் என நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால், சாலைகள் பராமரிப்பு, தெருவிளக்குகள், சுகாதாரம் பேணுதல், குடிநீர் விநியோகம் போன்ற பணிகளை எளிதாகச் செய்ய முடிகிறது. திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, துறையூர், துவாக்குடி ஆகியவை நகராட்சிகள்.
11. உள்ளாட்சி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மொத்தம் 14 ஊராட்சி ஒன்றியங்களும் 16 பேரூராட்சிகளும் உள்ளன. திருவெறும்பூர், அந்தநல்லூர், மணிகண்டம், மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, லால்குடி, புள்ளம்பாடி, மண்ணச்சநல்லூர், முசிறி, தொட்டியம், தாத்தையங்கார்பேட்டை, துறையூர், உப்பிலியாபுரம் ஆகியவை ஊராட்சி ஒன்றியங்கள். பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி, காட்டுப்புத்தூர், கூத்தப்பர், லால்குடி, மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், முசிறி, எஸ். கண்ணணூர், சிறுகனூர், தாத்தையங்கார்ப்பேட்டை, தொட்டியம், உப்பிலியாபுரம் ஆகியவை பேரூராட்சிகள்.
12. வட்டங்களும் கோட்டங்களும்
திருச்சி, லால்குடி, முசிறி ஆகிய மூன்று வருவாய் கோட்டங்களும், திருச்சி, மணப்பாறை, முசிறி, லால்குடி, துறையூர், ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர் ஆகிய 7 வட்டங்களும் உள்ளன.
காலநிலை
13. வானிலை அறிக்கை
கோடையில், ஜூன் மாதம் வரை வெயில் உக்கிரமாக இருக்கும். தென்மேற்குப் பருவக்காற்றால் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் மழை பெய்யும். வடகிழக்குப் பருவக்காற்றால் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மழை பெய்யும்.
14. குளிர் மாலை
தக்காண பீடபூமி பகுதியின் தென்பகுதியில் திருச்சி அமைந்திருப்பதால், பகல் பொழுது முழுவதும் வெப்பமாகவும், வறண்ட வானிலையுடனும் காணப்படும். மாலை நேரம் தொடங்கி, தென்மேற்குத் திசையிலிருந்து குளிர்காற்று, திருச்சியைக் குளிரச்செய்யும்.
15. மழைவிழும் மழை வனம்
கடலைவிட்டு தூரத்தில் இருப்பதால், திருச்சியில் மிதமான காலநிலை நிலவும். ஆண்டுக்கு 84 செ.மீ மழை பெய்கிறது. இது, மாநில சராசரியான 94 சென்டிமீட்டரைவிட கொஞ்சமே குறைவு. திருச்சியில் பனிப்பொழிவு குறைவுதான். குளிர் காலத்தில் மட்டும் பனியைப் பார்க்கலாம்.
16. திருச்சியின் தாகம்
தமிழ்நாடு நகர மற்றும் ஊரக திட்டச் சட்டம் 1974-க்கு இணங்க 1974 ஏப்ரல் 5ஆம் தேதி, திருச்சிராப்பள்ளி நகர திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. நகரத்துக்கு, காவிரி ஆற்றிலிருந்து கிட்டத்தட்ட 1,500 நிலத்தடி நீரேற்றிகள் மற்றும் 60 வழங்கல் நீர்த்தொட்டிகள் மூலமாகக் குடிநீர் வழங்கப்படுகிறது.

வரலாறு
17. தலைநகர் உறையூர்
திருச்சிராப்பள்ளி, மிகப் பழைமையான குடிகளைக்கொண்ட நகரம். கி.பி 300 ஆம் ஆண்டிலிருந்தே திருச்சி பற்றிய தெளிவான வரலாறு கிடைக்கிறது. கி.பி 300 முதல் 600 வரை, திருச்சி உறையூரைத் தலைநகராகக்கொண்டு சோழப் பேரரசு ஆட்சி நடத்தியது.
18. ஊரறிந்த ஆவணம்
கிரேக்க வரலாற்று ஆசிரியரான தாலமி, தனது ‘புவியியல்’ புத்தகத்தில் திருச்சி நகரைப் பற்றிக் குறிப்பிடுகிறார். திருச்சி அருகே 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கல்லணை, திருச்சியின் வரலாற்றுக்குச் சான்று. இதுதவிர, மாவட்டம் முழுவதும் நிறைந்திருக்கும் கோயில் கல்வெட்டுகள் மூலமும் திருச்சியின் வரலாற்றை அறியமுடிகிறது.
19. இடைக்காலத்தில் திருச்சி
திருச்சியில் பல்லவர்களின் ஆட்சி, முதலாம் மகேந்திரவர்மன் காலத்திலிருந்து தொடங்குகிறது. கி.பி 6 ஆம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட பல்லவர்கள், தங்களது வழக்கமான குடைவரைக் கோயில் கட்டும் பாணியைப் பயன்படுத்தி, பல கோயில்களைக் கட்டினார்கள்.
20. மீண்டு(ம்) வந்த சோழர்கள்
எட்டாம் நூற்றாண்டில், பல்லவர்களின் ஆட்சி திருச்சியில் வீழ்ச்சியடைந்தபோது, சோழர்கள் ஆட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தனர். இவர்களுக்கு, பிற்காலச் சோழர்கள் என்று பெயர். இவர்கள், 13ஆம் நூற்றாண்டு வரை திருச்சியை ஆட்சிசெய்தனர்.
21. பாண்டியர்கள் (வந்தார்கள் - வென்றார்கள்)
14ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்தது. கடைசியில் வந்த சோழ மன்னர்கள் பலவீனமாக இருந்தார்கள். இதைப் பயன்படுத்திக்கொண்ட பாண்டியர்கள், சோழ நாட்டின்மீது படையெடுத்து திருச்சியைக் கைப்பற்றினர். இவர்கள், 1216 முதல் 1311ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்தனர்.
22. மாலிக்காபூர் படையெடுப்பு
டெல்லியைத் தலைமை இடமாகக்கொண்டு ஆட்சி செய்துவந்தவர், டெல்லி சுல்தானிய மன்னர் அலாவுதீன் கில்ஜி. இவரது படைத் தளபதி தென்னிந்தியாவை நோக்கி படையெடுத்து, திருச்சியை 1311 ஆம் ஆண்டில் கைப்பற்றினார். திருச்சி நகரத்திலும், ஸ்ரீரங்கத்திலும் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் வரை திருச்சி,மதுரை நகரங்கள் டெல்லி சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தன.
23. சுல்தான்களின் வீழ்ச்சி
தென்னிந்தியாவை ஆட்சிசெய்வது டெல்லி சுல்தானியர்களுக்கு நடைமுறையில் சிரமமாக இருந்தது. அது மட்டுமல்லாமல், மதுரை சுல்தானிய அரசர்கள் பலம் மிகுந்தவர்களாக இல்லை. அதனால், 14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருச்சியில் சுல்தான்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்தது.
24. வீறுகொண்ட விஜய நகரப் பேரரசு
மதுரை சுல்தானியம் வீழ்ச்சியடைந்த பிறகு, திருச்சியை விஜய நகரப் பேரரசு கைப்பற்றியது. விஜய நகரப் பேரரசின் புகழ்பெற்ற இளவரசர் குமார கம்பண்ணர் 1371 ஆம் ஆண்டில், திருச்சியைத் தனது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார்.
25. திருச்சியின் மலர்ச்சி
திருச்சியை விஜயநகரப் பேரரசு கைப்பற்றிய பிறகு, நிர்வாக மாற்றங்களும் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டன. முந்தைய ஆட்சியில் இடிக்கப்பட்ட கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன. இன்னொரு புறம் அரசியல் மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருந்தன.
26. நாயக்கர்களால் விளைந்த நன்மை
விஜயநகரப் பேரரசின் கீழ் வியாபார முகவர்களாக இருந்த நாயக்கர்கள், தங்களை சுய அதிகாரம் பெற்றவர்களாக அறிவித்துக்கொண்டார்கள். 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மதுரை நாயக்கர்கள் வசம், திருச்சி வந்துவிட்டது. நாயக்கர்களின் சிறப்பான உள்ளாட்சி நிர்வாகத்தால், திருச்சி மேம்பட்டது.
27. தலைநகரமான திருச்சி
கி.பி 1529 முதல் 1564ஆம் ஆண்டு வரை திருச்சியை ஆண்ட விஸ்வநாத நாயக்கர்தான், தெப்பக்குளம் வெட்டி, திருச்சியைப் பாதுகாத்தார். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு மதில் அமைத்தார். இவருக்குப் பிறகு வந்த குமார கிருஷ்ணப்ப நாயக்கர், திருச்சியை மதுரை நாயக்க அரசின் தலைமை இடமாக மாற்றினார். மதுரை நாயக்கர் அரசுக்கு திருச்சி 1616-1634 ஆண்டு வரையிலும், பிறகு 1665-1736ஆம் ஆண்டு வரையிலும் தலைநகரமாகச் செயல்பட்டது.
28. சந்தா சாகிப்
மதுரை நாயக்க வம்சத்தின் கடைசி அரசியான மீனாட்சி, தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகு, கர்நாடக நவாப் சந்தா சாகிப் திருச்சியை ஆக்கிரமித்துக்கொண்டார். சந்தா சாகிப் திருச்சியை 1736 முதல் 1741ஆம் ஆண்டு வரை ஆட்சிசெய்தார்.
29. மராத்தியர்களிடம் மாறியது
1741 ஆம் ஆண்டு, மராத்தியர்கள் திருச்சிமீது படையெடுத்தனர். சத்ரபதி ஷாகு (Chatrapthi shahu) உத்தரவின் பேரில், படைத் தளபதி ராகுஜி படையெடுத்து வந்து, சந்தா சாகிப்பைத் தோற்கடித்து கைது செய்தார். 8 ஆண்டுகள் கைதியாக இருந்த சாகிப், சிறையிலிருந்து தப்பினார்.

30. லஞ்சம் கொடுத்து வஞ்சம்
1741 முதல் 1743 ஆம் ஆண்டு வரை திருச்சி, மராத்திய தளபதி முராரி ராவ் வசம் இருந்தது. ஹைதராபாத் நிஜாம், முராரி ராவுக்கு லஞ்சம் கொடுத்து திருச்சியைத் தன் வசமாக்கிக்கொண்டார். தன்னுடைய பிரதிநிதி, குவாஜா அப்துல்லாவிடம் (Khwaja Abdullah) திருச்சியின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தார்.
31. ஆங்கிலேயரின் ஆட்சி
மூன்று கர்நாடகப் போர்களின்போதும் இங்குமங்குமாகப் பந்தாடப்பட்டு, நிலையில்லாத அரசாங்கமே திருச்சியில் நிலவியது. கர்நாடகப் போரின் முடிவில், ஒருவழியாக கர்நாடகப் பகுதிகள் ஆங்கிலேயரின் கீழ் வந்தது. கர்நாடக ஆட்சியோடு இணைந்திருந்த திருச்சியும் ஆங்கிலேயரின் கீழ் வந்துவிட்டது.
32. திருச்சியின் வளர்ச்சி
கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின்போதும், ஆங்கிலப் பேரரசின் கீழ் திருச்சி வந்தபோதும், திருச்சி பெரிய வளர்ச்சியைக் கண்டது. இந்தியாவின் முக்கியமான நகரமாக திருச்சி வளர்ந்தது. 1871ஆம் ஆண்டு, ஆங்கில ஆட்சியில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டபோது, திருச்சியின் மக்கள் தொகை 76,530 பேர்.
33. எப்போதும் இரண்டு
ஆங்கிலேயர்கள் உருவாக்கிய சென்னை மாகாணத்தில் இரண்டாவது பெரிய நகரமாக இருந்தது திருச்சி. அப்போது முதல் இன்று வரை திருச்சி, தமிழகத்தின் இரண்டாவது தலைநகரமாகக் கருதப்படுகிறது.
34. திருச்சியின் முக்கியத்துவம்
திருச்சி, அப்போதைய சென்னை மாகாணத்தின் (Madras Presidency) முக்கியமான கேந்திரமாக இருந்தது. உதாரணம், தெற்கு ரயில்வே மண்டலத்தின் தலைமையிடமாக முதலில் திருச்சிதான் அறிவிக்கப்பட்டு செயல்பட்டுவந்தது. 1874ஆம் ஆண்டு முதல் சென்னைக்குத் தலைமையிடம் மாற்றப்பட்டது.
35. போராட்டக் களமான திருச்சி
சுதந்திரப் போராட்டங்களின்போது, தன்னை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டனர் திருச்சி மக்கள். மறியல் போராட்டங்களும் அறப் போராட்டங்களும் தொடர்ந்து நடந்தன. 1878ஆம் ஆண்டு நடந்த தெற்கு ரயில்வே மறியல் போராட்டம், பரவலான மக்கள் ஆதரவைப் பெற்றது.
36. வெள்ளையனே திருச்சியைவிட்டு வெளியேறு
பல்வேறு விதமான சுதந்திரப் போராட்டத்துக்கு மையமாகத் திகழ்ந்தது திருச்சி. 1930ஆம் ஆண்டு, மகாத்மா காந்தி தண்டி யாத்திரை நடத்தியதுபோது, ராஜகோபாலச்சாரியார் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தை திருச்சியில் தொடங்கி நடத்தினார்.
37. வெற்றிக்கொடி
போராட்டங்கள் போலவே, கடுமையான உழைப்புக்குப் பெயர் பெற்றவர்கள், திருச்சி மாவட்ட மக்கள். இந்தியா சுதந்திரமடைந்ததும், பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகம் எடுத்தது. 1941-1951ஆம் காலகட்டத்தில், 36.9 சதவிகித வளர்ச்சியை எட்டிப் பிடித்தது. பெல் தொழிற்சாலை திருச்சியில் தொடங்கிய பிறகு, பொருளாதார வளர்ச்சி இன்னும் வேகமெடுத்தது.
38. எம்.ஜி.ஆர். விரும்பிய மாற்றம்
தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ராமச்சந்திரன், திருச்சியின் ‘கேந்திர’ முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்தார். நிர்வாகச் செயல்பாடுகளை திருச்சியிலிருந்து மேற்கொள்ளலாம் என்பது அவரின் திட்டமாக இருந்தது. பின்னாளில் வந்த அரசுகள், அதைக் கைவிட்டன.
அரசியல்
39. சட்டமன்றமும் பாராளுமன்றமும்
தமிழ்நாட்டில் உள்ள 39 பாராளுமன்றத் தொகுதிகளில், திருச்சி 24ஆவது எண் கொண்ட தொகுதியாகும். திருச்சியில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதிதான் உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர்.
40. மணப்பாறை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி, மணப்பாறை. இத்தொகுதியில், மணப்பாறை நகராட்சியும் பொன்னம்பட்டி பேருராட்சியும் அடங்கியுள்ளது. மணப்பாறை தொகுதியில் அடங்கியுள்ள பிற முக்கியமான பகுதிகள் வெள்ளாளப்பட்டி, வேங்கைக்குறிச்சி, நல்லாம்பிள்ளை, மலையாண்டிப்பட்டி, புதுவாடி, திருநெல்லிப்பட்டி, பல்லக்குறிச்சி, அழகாபுரி மற்றும் செவந்தாம்பட்டி.
41. ஸ்ரீரங்கம்
திருச்சி மாநகராட்சியின் முதல் ஆறு வார்டுகள் ஸ்ரீரங்கம் தாலுகா பகுதிகள். சிறுகமணி பேரூராட்சி, மணப்பாறை தாலுகாவின் சில பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் வட்டத்தின் சில பகுதிகள் ஆகியன ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகள்.

42. திருச்சி மேற்கு
திருச்சி மாநகராட்சியின் வார்டுகள் 39 முதல் 42 வரையிலும், 44 முதல் 60 வரை உள்ள வார்டு பகுதிகள், திருச்சி மேற்கு சட்டமன்றப் பகுதியைச் சார்ந்தவை. இவை அனைத்தும் திருச்சியின் நகரப் பரப்புக்குள்ளேயே அடங்கிவிடுகின்றன.
43. திருச்சி கிழக்கு
திருச்சியின் நகரப் பகுதிக்குள் மாநகராட்சி வார்டுகள் 8 முதல் 26 வரையிலும், 33ஆவது வார்டு முதல் 35 வார்டு வரை, மேலும் 37, 38 மற்றும் 43 ஆகிய வார்டுகள் திருச்சி கிழக்கு தொகுதியின் கீழ் வருகின்றன.
44. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி
திருச்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி, திருவெறும்பூர். இத்தொகுதியின் எல்லைக்குள் பனையக்குறிச்சி, அரசங்குடி, கிளியூர் போன்ற ஸ்ரீரங்கம் தாலுகாவைச் சேர்ந்த பகுதிகளும், திருச்சி மாநகராட்சியின் வார்டுகள் 7, 27 முதல் 32 வரை மற்றும் 36 ஆகிய பகுதிகளும், திருவெறும்பூர் பேரூராட்சி, கூத்தப்பர் பேரூராட்சி, துவாக்குடி பேரூராட்சி போன்ற பகுதிகளும் வருகின்றன.
45. லால்குடி சட்டமன்றத் தொகுதி
லால்குடி சட்டமன்றத் தொகுதியின் சராசரி கல்வி அறிவு 81 சதவிகிதம். 86 சதவிகிதம் ஆண்களும் 76 சதவிகித பெண்களும் படித்தவர்கள்.
46. மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி
மண்ணச்சநல்லூர் தொகுதி, 2011ஆம் ஆண்டு தேர்தலின்போது, புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதியாகும். மண்ணச்சநல்லூர் தாலுகா முழுவதும் இத்தொகுதியின் கீழ் வந்துவிடுகிறது. தவிர, முசிறி வட்டத்தின் வேங்கை மண்டலம், மூவானூர், பெரமங்கலம், திண்ணக்கோணம், அய்யம்பாளையம் போன்ற ஊர்களும் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன.
47. முசிறி சட்டமன்றத் தொகுதி
2008ஆம் ஆண்டு, இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி மறு வரையறை உத்தரவின்படி, தொட்டியம் சட்டமன்றத் தொகுதியின் பகுதிகள் முசிறி சட்டமன்றத்தோடு இணைந்தன. தவிர, முசிறி தாலுகா முழுவதும், முசிறி சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகின்றன. மோருபட்டி, தாத்தையங்கார் பேட்டை, முசிறி ஆகிய பேரூராட்சிகள் இத் தொகுதியின் கீழ் உள்ளன.
48. துறையூர் சட்டமன்றத் தொகுதி
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு தனி (ரிசர்வ்டு) சட்டமன்றத் தொகுதி துறையூர். இத்தொகுதியின் எல்லைக்குள் துறையூர் தாலுகா முழுவதும் வந்துவிடுகிறது. தவிர, முசிறி தாலுகாவின் கோட்டத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினி மங்கலம் ஆகிய ஊர்களும் வருகின்றன.
49. திருச்சி பாராளுமன்றத் தொகுதி
திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் கீழ் திருவரங்கம், திருச்சிராப்பள்ளி மேற்கு, திருச்சிராப்பள்ளி கிழக்கு, திருவெறும்பூர், கந்தர்வகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. தொகுதி மறுவரையறைக்கு முன்னர் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் முசிறி, லால்குடி, ஸ்ரீரங்கம், திருச்சி-1, திருச்சி-2 திருவெறும்பூர் ஆகியவை. மறு சீரமைப்புக்குப் பின்னர் திருச்சி 1, 2 ஆகியவை திருச்சி கிழக்கு, மேற்கு என மாற்றப்பட்டன. கந்தர்வக்கோட்டைப் புதிதாக இணைந்தது.
போக்குவரத்து
50. சாலை வழிப் பயணங்கள்
தமிழக அரசின் மாநில போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டப் பேருந்துகள், திருச்சி மாவட்டத்தில் அதிக அளவு இயக்கப்படுகின்றன. திருச்சியில், மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் என இரண்டு பெரிய பேருந்து நிலையங்கள் செயல்படுகின்றன.
51. சாலையோரச் சோலை
திருச்சிராப்பள்ளி, பல தேசிய நெடுஞ்சாலைகளின் மையமாக இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை எண் 45, எப்போதும் பரபரப்பாகவும் நெரிசலாகவும் காணப்படும். சென்னை - திருச்சி மார்க்கத்தில் ஒரு நாள் இரவில் மட்டும் 10,000 லாரிகள் பயணிக்கின்றன. திருச்சியைக் கடந்துசெல்லும் பிற தேசிய நெடுஞ்சாலைகள், எண். எச்.67, 45 பி, 210 மற்றும் 227.
52. நீளும் சாலைகள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கிட்டத்தட்ட 715 கிலோமீட்டர் நீள சாலையைப் பராமரிக்கிறது. நகரில் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 4 லட்சம் இருசக்கர வாகனங்கள் பயணிக்கின்றன. ஒரு லட்சம் கார்களும், 15,000 சரக்கு போக்குவரத்து வாகனங்களும் இயங்குகின்றன. தவிர, ஒரு நாளைக்கு 2,000 இன்டர்-சிட்டி பேருந்துகள் திருச்சி மார்க்கமாக இயங்குகின்றன.
சுற்றுலா
53. டாப் செங்காட்டுப்பட்டி
திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஒன்றியத்தில் இருக்கிறது, டாப் செங்காட்டுப்பட்டி கிராமம். திருச்சியிலிருந்து 66 கிலோமீட்டர் தூரத்தில் தென்புற நாடு (Thenpura Nadu) பஞ்சாயத்தின் கீழ் வருகிறது, பச்சை மலைப்பகுதியின் பசுமையான டூரிஸ்ட் ஸ்பாட். செங்காட்டுப் பட்டி கிராமத்துக்கு ஒரு சில கிலோமீட்டருக்கு முன், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுற்றுலா பங்களா உள்ளது. அங்கிருந்து பார்த்தால், மலையில் சிதறிக் கிடக்கும் பாறைகளும், பசுமைப் புல்வெளிகளும் ரம்மியமாகக் காட்சியளிக்கும். இயற்கையைக் கண் குளிரக் கண்டு ரசிக்க விரும்புபவர்கள், டாப் செங்காட்டுப்பட்டிக்கு போய்வரலாம்.
54. பச்சைமலை
பச்சைமலை, தமிழ்நாட்டில் அதிகம் அறியப்படாத பகுதி. பசுமை மாறாக் காடுகளும், இலையுதிர் காடுகளும் நிறைந்த கிழக்குத்தொடர்ச்சி மலையின் பகுதி. பச்சைமலைக் காடுகளைப் பார்ப்பது, கண்களுக்கு மட்டும் குளிர்ச்சியாக இருக்காது. சலசலத்து ஓடும் ஆறுகள் காதுகளுக்கும் இனிமை கூட்டும். திருச்சியிலிருந்து மேற்கு, ஸ்ரீரங்கம் வழியாக துறையூர்-திருச்சி மெயின் ரோட்டில், சுமார் 86 கிலோமீட்டர் தூரத்தில் கொப்பம்பட்டிக்கு அருகில் அமைந்துள்ளது பச்சை மலைப்பிரதேசம். ‘பச்சைமலைப் பூவு, நீ உச்சிமலைத் தேனு’ என்று எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடியிருப்பாரே அந்த மலைதான். அதிகாலை அல்லது அந்தி சாயும் நேரத்தில் மலையேறிப் போனால், கூட்டம் கூட்டமாகத் திரியும் மான்களைப் பார்க்கலாம்.
55. மலையாள் பழங்குடிகள்
பச்சைமலையில் உள்ள மங்களம் அருவி, மயில் ஊத்து அருவி ஆகிய அருவிகளுக்குச் செல்லும் பாதை, ‘அழகான ராட்சசி’ மாதிரி கொஞ்சம் சிக்கலானதுதான். அப்படிப் போகும் வழியில் இந்தப் பச்சைமலையில் வாழும் மலையாள் (Malayall) பழங்குடி மக்களைப் பார்க்கமுடியும். மிக எளிமையான இயற்கைக்கு இடையூறு விளைவிக்காத இவர்களது வாழ்க்கை முறை மற்றவர்களுக்கு ஒரு பாடம். துறையூரிலிருந்து பயண வழிகள் உள்ளன.
56. பச்சைமலையில் - மலையேற்றப் பயிற்சி
பச்சைமலையில் மலையேற்றப் பயிற்சி (Trekking) மேற்கொள்வதற்கு வனத்துறை ஏற்பாடுகள் செய்திருக்கிறது. வழிகாட்டிகள் உதவியுடன் அரசடி (Arsadi) கீழ்க்கரை (Keel karai) மற்றும் மூலக்காடு பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மலையேற்றப் பயிற்சிசெய்யலாம்.

57. காட்டு வழிப் பயணம்
மலையேற்றப் பயிற்சி (Trekking) போலவே, பச்சைமலைக் காட்டில் காட்டு வழிப் பயண நடைக்கு (Jungle Trekking) தமிழ்நாடு வனத்துறை விரிவான ஏற்பாடுகளைச் செய்திருக்கின்றது. இது ஒரு புதுமையான அனுபவம். சுற்றுப்புறச்சூழல் அறிவை வளர்க்கவும், இயற்கை வளம் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் இந்தப் பசுமை நடை பயணம் உதவும். காட்டை ரசித்தபடி 5 கிலோமீட்டர் தூரம் கடந்துசெல்வதற்கு 2 மணி நேரம் ஆகிவிடும்.
58. கோரையாறு அருவி
பச்சைமலையில் உள்ளது கோரையாறு அருவி. சுமார் 25 அடி உயரத்திலிருந்து கொட்டும் கோரையாறு அருவிக்குச் செல்லும் பாதைகள், கொஞ்சம் கஷ்டமானதுதான். வனத்துறையின் அனுமதியோடுதான் போகவேண்டும். பெரம்பலூரிலிருந்து கிருஷ்ணாபுரம் வழியாகத் தொண்டமான்துறைக்குப் போய், அங்கிருந்து அய்யர்பாளையம் வழியாகப் பச்சைமலை அடிவாரத்தில் உள்ள கோரையாறு கிராமத்துக்குச் செல்லவேண்டும். இங்குதான் கோரையாறு அருவி உள்ளது.
59. எருமைப்பள்ளி அருவி
செங்காட்டுப்பட்டியிலிருந்து, பச்சைமலை செல்லும் சாலையில் உள்ளது எருமைப்பள்ளி அருவி. பெரிய மங்கலம், சின்ன மங்கலம் போன்ற மலைக் கிராமங்களைத் தாண்டி, சுமார் 150 அடி மலைச்சரிவில் இறங்கினால்தான் இந்த அருவியைப் பார்க்க முடியும். சத்தமில்லாமல் கொட்டும் அருவி.
60. பசுமைப் போர்த்திய பச்சைமலை சாலை
உப்பிலியாபுரம் மெயின் ரோட்டிலிருந்து சோபனாபுரத்தைக் கடந்தால், சில மீட்டர் தூரத்தில் பச்சைமலை மலையேற்றம் தொடங்கிவிடும். அதற்குப் பிறகு, இரண்டு பக்கங்களிலும் சிலுசிலு காற்றை வாரியிறைக்கும் பச்சைக் காடுகள்தான். அடுத்தடுத்து வரும் 14 கொண்டை ஊசி வளைவுகள், பச்சைமலைக் காட்சிமுனை என இந்தச் சாலை முழுவதும் அழகு கொள்ளைகொள்ளும்.
61. கொடும்பாளூர்
திருச்சி மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. திருச்சியிலிருந்து 42 கி.மீ தூரத்தில் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பும் இடம் என்பதால், தேவையான போக்குவரத்து வசதி உள்ளது. கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வேளிர்கள் கட்டிய மூவர் கோயில், கொடும்பாளூருக்குச் சிறப்பு சேர்க்கிறது. மூன்று கோயில்களில் தற்போது இரண்டு மட்டுமே இருக்கின்றன.
62. புளியஞ்சோலை
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் எல்லைக்குள் வரும் புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி, மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்று. கொல்லிமலை அடிவாரத்தில் கொட்டும் இந்த நீர்வீழ்ச்சி, திருச்சியிலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்த்தியான, பசுமையான காடுகளால் சூழப்பட்டதால், புளியஞ்சோலை நீர்வீழ்ச்சி மனதில் எழுச்சியை ஏற்படுத்தும்.
63. மில்லேனியம் பார்க் - திருச்சி மான் பூங்கா
புத்தாயிரம் பூங்கா, திருச்சிராப்பள்ளி பாரத மிகு மின் நிறுவன வளாகத்தில் அமைந்துள்ளது. திருச்சி மக்களுக்கு அழகிய பொழுதுபோக்குப் பூங்கா. இது, ஓய்வுபெற்ற பெல் (BHEL) ஊழியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. வார நாள்களில் மாலை நேரங்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு வரைக்கும் திறந்திருக்கும். உள்ளே பறவைகள் பெட்டகம், மான் கூட்டவெளிகள் இவற்றுடன் குட்டி ரயிலும் இருக்கிறது.
64. வண்ணத்துப்பூச்சி பூங்கா
திருச்சி மாவட்டத்தில் உள்ள சுட்டிகளுக்கான சுற்றுலாப் பகுதிகளில் ஒன்று, வண்ணத்துப்பூச்சி பூங்கா. ஸ்ரீரங்கத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ளது. காவிரி மற்றும் கொள்ளிடம் கரையில், இயற்கை அழகுக்கு மேலும் அழகுச் சேர்க்கும் வகையில் காற்றில் படபடக்கிறது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்கா இது. எட்டு கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

65. நட்சத்திர வனம்
வண்ணத்துப்பூச்சி பூங்காவில் இயற்கை இசை மீட்டுகிற இன்னோர் இடம் ,நட்சத்திர வனம். இங்கு, ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள். 12 ராசிகளோடு தொடர்புடைய மரங்களையும் இங்கு வளர்க்கிறார்கள். உங்கள் ராசிக்கு ஏற்ற மரத்தை இலவசமாக நடலாம்.
66. பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு
சில ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ்நாட்டில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மட்டும்தான் பிரபலம். இப்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், திருச்சிக்கு அருகே உள்ள பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன.
67. ஆடிப்பெருக்கு
காவிரி வளம்கொழிக்கும் திருச்சி மாவட்டத்தில், ஆடிப்பெருக்கு விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணம் நடக்க வேண்டிக்கொள்ளும் இளம் பெண்கள், காவிரிக் கரையில் ஆடிப்பெருக்கின்போது நீராடினால் நல்லது என்ற நம்பிக்கை. ஆடிப்பெருக்கின்போது திருச்சி மாவட்டம் முழுவதும் காவிரிக்கரை களைகட்டும்.
68. அம்மா மண்டபம் படித்துறை
ஸ்ரீரங்கத்தில் உள்ளது அம்மா மண்டபம் படித்துறை. ஆடிப்பெருக்கு திருவிழாவின்போது, அதிகமான மக்கள் கூடி காவிரியை வழிபடுகிறார்கள். ஆண்டுதோறும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் நம்பெருமாள், அம்மா மண்டபம் படித்துறைக்கு வந்து, காவிரி நதிக்கு சீர்வரிசை வழங்குவதாக ஐதீகம்.
69. உலகப் போர் நினைவுச் சின்னம்
திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு எதிரில், முதல் உலகப் போர் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. இது, திருச்சி போர் வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. திருச்சியிலிருந்து சுமார் 302 வீரர்கள் ஆங்கிலேய-இந்திய ராணுவத்தின் சார்பாகப் பங்கேற்றனர். இதில், 41 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அந்தப் படை வீரர்களின் நினைவாக, ஒரு பெரிய கடிகாரத்தை அரசாங்கமே அமைத்தது. இந்த நினைவுச் சின்னத்தை `கடிகார கோபுரம்' என்றே கூறுகிறார்கள்.
70. கொலு மண்டபம்
நாயக்க அரசியான ராணி மங்கம்மாள், கி.பி.1700ஆம் ஆண்டு, மலைக்கோட்டைக்கு அருகில் கொலு மண்டபத்தைக் கட்டினார். இது, மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரால் 1666 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பகுதியாக இருக்கிறது. இது, 1999ஆம் ஆண்டில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது.
71. திருச்சி கன்டோன்மென்ட்
திருச்சியின் நகரப் பகுதியில் உள்ள ஒரு ஏரியாதான் கன்டோன்மென்ட். கன்டோன்மென்ட் என்பது பிரெஞ்சு மொழி வார்த்தை. படைப் பிரிவுகள் முகாமிட்டிருக்கும் பகுதி என்பது இதன் பொருள். கர்நாடகப் போரின்போது பிரெஞ்சுப்படைகள் இங்கு முகாமிட்டிருந்ததால், இப்பெயர் அமைந்துவிட்டது. இப்பகுதியில், நிறைய ஹோட்டல்கள், தபால் நிலையங்கள், சுற்றுலா அலுவலகங்கள் உள்ளன. திருச்சி ரயில்வே ஜங்ஷனும் கன்டோன்மென்ட் பகுதியில்தான் உள்ளது.
72. சத்திரம் பேருந்து நிலையம்
திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையம். மெயின் கார்டு கேட் (Main Guard Gate) பேருந்து நிலையம் இதுதான். 1979ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது. அருகில் உள்ள சின்னையா பிள்ளை சத்திரம் என்பதிலிருந்தே சத்திரம் பேருந்து நிலையம் என்ற பெயர் வந்தது. திருச்சி மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிக்கு இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
73. மத்தியப் பேருந்து நிலையம்
திருச்சிராப்பள்ளி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 2,200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒரு லட்சம் பயணிகள் பயன்படுத்துகின்றனர். திருச்சி ஜங்ஷனிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது மத்தியப் பேருந்து நிலையம். இங்கிருந்து திருச்சி விமான நிலையம், 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

74. திருச்சி ஆம்னி பஸ் ஸ்டாண்டு
திருச்சியில், இரண்டு பேருந்து நிலையங்கள் இருந்தாலும், சென்னை, கோவைக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் நிற்க இடமில்லாமல் இருந்தது. சமீபத்தில், மத்தியப் பேருந்து நிலையம் அருகில் ரயில்வே துறைக்குக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டு, ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
75. ரசிக ரஞ்சனி சபா
இந்தியாவின் பழைமையான கலை சபைகளில் ஒன்று, திருச்சி ரசிக ரஞ்சனி சபா. 1914ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரசிக ரஞ்சனி சபாவுக்கான கட்டடத்துக்கு 1935ஆம் ஆண்டு திருச்சியின் அப்போதைய கலெக்டர் குக் (Cook) அடிக்கல் நாட்டினர். 1974ஆம் ஆண்டு தமிழ் இசை நாடக மன்றத்தின் விருதுபெற்றது. ஒவ்வொரு கோடையிலும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்குத் தலைசிறந்த நாடக நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களால் நாடகப் பயிற்சி வழங்கப்படும். இது, திருச்சியின் மேற்கு போல்வார்டு (West Boulevard) சாலையில் உள்ளது.
76. மகாத்மா காந்தி திருச்சி வருகை
திருச்சியில் உள்ள காந்தி மார்க்கெட், மகாத்மா காந்தியால் 1927ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. 1917ஆம் ஆண்டு முதல், காந்தியடிகள் ஐந்து முறை திருச்சிக்கு வந்திருக்கிறார். திருச்சி இந்திரா காந்தி கல்லூரியில் இருக்கும் பூவரச மரங்களை ‘காந்தி மரம்’ என்றே அழைக்கிறார்கள். இந்த மரத்தடியில் அமர்ந்து காந்தியடிகள், ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உரை நிகழ்த்தியிருக்கிறார். அதனால், இந்த மரத்தை இன்று வரை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள்.
77. திருச்சி வானொலி நிலையம்
இந்தியாவில் முதன்முதலில் தொடங்கப்பட்ட ஆறு வானொலி நிலையங்களில் திருச்சி வானொலி நிலையமும் ஒன்று. 1939 மே 16-ல், அப்போதைய சென்னை மாகாண முதல்வர் ராஜாஜியால் இந்த நிலையம் தொடங்கப்பட்டது. திருச்சி வானொலி நிலையம், பாரதிதாசன் சாலையில் உள்ளது. 2001 ஆம் ஆண்டு ரெயின்போ பண்பலை தொடங்கப்பட்டது. 25 லட்சம் நேயர்களைக் கொண்டுள்ளது.
78. ராணி மங்கம்மாள் மகால்
திருச்சியை ஆண்ட பல குறுநில மன்னர்கள், பேரரசுகள், தங்களுக்கான அடையாளத்தை விட்டுச் சென்றிருக்கின்றனர். அவை இன்னும் திருச்சியின் பெருமையை உரக்கச் சொல்லிவருகின்றன. அப்படி ஒரு வரலாற்றுச் சின்னம்தான், ராணி மங்கம்மாள் மகால். இதைக் கட்டியவர், மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர். இப்போது, இங்கு அருங்காட்சியகம் செயல்பட்டுவருகிறது. திருச்சி மலைக்கோட்டைப் பகுதியில் உள்ளது.
நதிகள்
79. பாய்ந்தோடும் காவிரி
தமிழகத்தின் மிக முக்கிய ஆறான காவிரி, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இரு கிளைகளாக பிரிந்து வடக்குப் பகுதி கொள்ளிடம் ஆறாகவும், தெற்குப் பகுதி காவிரி ஆறாகவும் சுமார் 125 கி.மீ. வரை பாய்கிறது. திருச்சியின் மொத்த பரப்பளவான 4,40,383 ஹெக்டேரில் 98,739 ஹெக்டேர் இறவை பாசனத்திலும், 66,652 ஹெக்டேர் மானாவாரியிலும் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இதில், திருச்சி, இலால்குடி, முசிறி கோட்டங்களில் சுமார் 51,000 ஹெக்டேர் பரப்பளவு காவிரி பாசனம் மூலம் பயனடைகிறது.
80. நதி நனைக்கும் பூமி
திருச்சி மாவட்டத்தை வளங்கொழிக்கவைப்பது காவிரி ஆறு. காவிரியுடன் அய்யாறு, அமராவதி, நொய்யாறு, மருதையாறு, வெள்ளாறு போன்றவை வந்துசேர்கின்றன. இதனால், திருச்சி மாவட்டம் நீர்வளம் நிரம்பியுள்ளது. இவை, சாகுபடிக்குப் பெரும்பங்காற்றுகின்றன.
81. குடமுருட்டி ஆறு
காவிரியின் துணை நதி. ஐந்து புனித நதிகள் சேரும் திரு. ஐ ஆறு (திருவையாறு) என்ற ஊர் தஞ்சாவூரில் உள்ளது. அந்த ஐந்து ஆறுகளில் குடமுருட்டி ஆறும் ஒன்று. இந்த நதி, தேவாரத்தில் கடுவாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாராயண தீர்த்த சுவாமிகள், இந்நதிக்கரையில் முக்தி அடைந்ததாக நம்பப்படுகிறது.
82. அரசலாறு
இதுவும் காவிரியின் கிளை ஆறுதான். காவிரி ஐந்து ஆறுகளாய்ப் பிரிகிறது. அதில் ஒன்று, அரசலாறு. கும்பகோணம் வழியாகச் சென்று, காரைக்காலில் வங்க கடலில் கலக்கிறது. இந்த ஆறு கடலில் கலக்கும் இடத்தில், காரைக்கால் ஆற்றுத் துறைமுகம் உள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன், அதிக அளவு வணிகம் நடைபெற்றது. பொன்னியின் செல்வன் நாவலில் அரசலாறு பற்றி நிறைய தகவல்களை எழுதியிருக்கிறார் நாவலாசிரியர், கல்கி.
83. சின்னாறு
திருச்சி மாவட்டத்துக்குகு நீர்வளம் சேர்க்கும் நதிகளில் ஒன்று சின்னாறு. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில், வேப்பந்தட்டை அருகே எறையூர் என்ற இடத்தில் சின்னாற்றின் குறுக்கே நீர்த்தேக்கம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. நீர்த்தேக்கம், பெரம்பலூர் மாவட்ட எல்லையில் அமைந்திருக்கிறது. சின்னாறு நதி மூலம் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 716 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
84. வெண்ணாறு
காவிரி ஆற்றின் துணை நதிகளில் ஒன்று, வெண்ணாறு. வெண்மையான ஆறு என்பது வெண்ணாறாக மாறிவிட்டது. திருச்சி மட்டுமல்லாமல், தஞ்சாவூர் மாவட்ட விவசாயத்துக்கும் தாகம் தீர்க்கும் நதி. சோழர் காலத்தில் நீர் போக்குவரத்துக்காக இந்த ஆறு பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
85. உய்யக்கொண்டான் ஆறு
மேட்டூர் அணைக்கும் கல்லணைக்கும் இடையில் காவிரியிலிருந்து பிரிந்து ஓடுகிறது உய்யக் கொண்டான் ஆறு. இந்த ஆறு, ஸ்ரீரங்கம் தாலுகாவில் சிறுகமணி, பெருகமணி, பேட்டைவாய்த்தலை, ராமநாதநல்லூர், மல்லியம்பத்து ஆகிய ஊர்களின் வழியாகச் செல்கிறது. திருச்சி மாநகரப் பகுதியில் அரியமங்கலம், காட்டூர், பாப்பாக்குறிச்சி வழியாகப் பாய்கிறது. நேரடியாக 24,757 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. நெல், கரும்பு, வாழை, மஞ்சள், வெற்றிலை ஆகியவை பயிரிடப்படுகின்றன.
ஷாப்பிங்
86. மாம்பழச் சாலை
திருச்சியில் நிறைய சில்லறை வர்த்தக கடைகளும், மொத்த வியாபார கடைகளும் உள்ளன. அடுத்தது, மாம்பழச்சாலை. ஸ்ரீரங்கத்தில் பூக்கடை பஜாரும் மண்ணச்சநல்லூரில் அரிசி கடைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
87. மகாத்மா மார்க்கெட்
திருச்சியில் ஷாப்பிங் செய்ய நாம் போகவேண்டிய ஓர் இடம், காந்தி மார்க்கெட். திருச்சி நகரத்தின் இதயப் பகுதியில் அமைந்த பெரிய கடை வீதி இது.

88. பெரிய, சின்னக்கடை வீதி
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலை ஒட்டிசெல்லும் சின்னக்கடை வீதி. திருச்சியில் ஷாப்பிங் செய்ய இன்னும் ஒரு பெரிய ஏரியா. துணிக் கடைகளும், ஜவுளிக் கடைகளும் அணி வகுத்து நிற்கும் அழகிய தெரு. ஷாப்பிங் செய்து களைத்துப் போய்விட்டால், சாப்பிடுவதற்கு ரெஸ்டார ன்டுகளும் உள்ளன.
89. திருச்சிராப்பள்ளி கன்டோன்ட்மென்ட் பகுதியில், வில்லியம்ஸ் சாலையில் உள்ளது ஃபெமினா ஷாப்பிங் மால். பரபரப்பான திருச்சி நகர மக்களின் தேவையை ஒரே இடத்தில் பெற்றுக்கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ள மால். வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் பலவும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது.
90. விமானம் பற பற...
திருச்சி விமான நிலையம், ஒரு சர்வதேச விமான நிலையம். நகரத்திலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில், தேசிய நெடுஞ்சாலை எண் 336ல் உள்ளது ஐ.எஸ்.ஓ. 9001 - 2008 சான்றிதழ் பெற்றது. 2002 அக்டோபர் 4-ல், சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய விமான நிலையம் இது.
91. அரசு அருங்காட்சியகம்
ராணி மங்கம்மாள் மகால் அருகில் உள்ளது, அரசு அருங்காட்சியம். திருச்சியின் இதயப் பகுதியான சூப்பர் பஜாருக்கு அருகில் உள்ள பாரதிதாசன் நகர் அருகில் அமைந்துள்ளது. கல்லாகிய உருவங்கள் (Fossils) கற்கால ஆயுதங்கள், மகாவீரர், கௌதம புத்தர், சிற்பங்கள் ஆகியவை இந்த அருங்காட்சியத்தில் பார்வையாளர்களை அதிகம் கவரும் அம்சம்.
92. பண்பாட்டுக் கலைகளை விளக்கும் சிலைகள்
திருச்சி அருங்காட்சியகம் வேறு வகையிலும் சிறப்புப் பெற்றது. பச்சைமலையில் வாழும் பழங்குடியினரின் பொருள்களுக்கு என்று தனிப்பிரிவு இருக்கிறது. வேறு அருங்காட்சியகங்களில் பார்க்க முடியாத அரிதான பொருள்களைத் தேடிப்பிடித்து சேர்த்துள்ளார்கள். தமிழர் பண்பாட்டுக் கலைகளை விளக்கும் சிலைகளும் இதில் அடக்கம்.
93. குழந்தைகளை குணமாக்கும் கோயில்
திருச்சி காவிரிக்கரையில் அமைந்துள்ளது, குணசீலம் கோயில். மனநிலை பிறழ்ந்த குழந்தைகளை இந்தக் கோயிலுக்கு அழைத்துச்சென்று 48 நாள்கள் தங்கியிருந்தால், அவர்கள் குணமடைவார்கள் என்பது நம்பிக்கை.
94. வெட்டவெளி சாமி
திருச்சி உறையூரில் இருக்கிறது, வெக்காளியம்மன் கோயில். தமிழகத்தின் முக்கியமான அம்மன் கோயில்களில் ஒன்று. அம்மனுக்கு மேற்கூரை கிடையாது. உலகில் உள்ள அனைவருக்கும் வசிப்பதற்கு வீடு கிடைக்கும் வரையில் எனக்கு மேற்கூரை வேண்டாம் என்று வெக்காளியம்மன் ஒரு பக்தரின் கனவில் தோன்றி கூறியதாகவும், அதன்படி வெக்காளியம்மன் இதுவரை மேற்கூரை இல்லாமல் வெட்டவெளியில் இருப்பதாகவும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
95. பேட்டை செய்த கோட்டை
மலைக்கோட்டை அடிவாரத்தில் இருக்கும் தெப்பக்குளம், குறிப்பிடத்தக்கது. தெப்பத் திருவிழாவை அடுத்து, மக்கள் ஏராளமாகக் கூடிவிடுவார்கள். இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சிக்கு அடிகோலிய ராபர்ட் க்ளைவ், இந்தத் தெப்பக்குளத்துக்கு அருகில்தான் குடியிருந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் அமைக்கப்படுவதற்கு இந்தக் கோட்டை பெரும் பங்காற்றியிருக்கிறது.
96. அதிசயமான அணை
கரிகால் சோழனால் கட்டப்பட்டது. இன்றிலிருந்து 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி முதல் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. காவிரியின் குறுக்கே கட்டப்பட்டு தண்ணீர் தேக்கப்பட்டு, விவசாயம் செழிக்க கரிகாலன் செய்த சாதனை இது. பட்டினப்பாலை பொருநர் ஆற்றுப்படை உள்ளிட்ட பல சங்க இலக்கிய நூல்களில் கல்லணையின் பெருமை குறிப்பிடப்பட்டுள்ளது.
97. கல்லணை 2
கல்லணை கட்டிய தொழில் நுட்பம் இன்றுவரை ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 40 முதல் 60 அடி. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு. 2000 ஆண்டுகளாக தண்ணீரை தேக்கிவைத்திருப்பது அதிசயமான ஒன்று. இது மட்டுமல்லாமல், 1839ஆம் ஆண்டு அணையின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது.
98. ஆபத்தைத் தடுக்கும் அணை
மேலணை, 1836ஆம் ஆண்டு கொள்ளிடம் பிரியும் இடத்தில் கட்டப்பட்டது. இதனால், மேலணைப் பகுதியில் காவிரி இரண்டாகப் பிரிவதற்கு முன் கிடைக்கும் தண்ணீரைக் கட்டுப்படுத்தி, டெல்டா பிரதேச சாகுபடிக்கு சீராக வழங்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெள்ளம் வரும்போது, இந்த மேலணையின் வழியாக விநாடிக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு, கொள்ளிடம் வழியாகப் போய்விடும். இதனால், பெருவெள்ளத்திலிருந்து கல்லணை காப்பாற்றப்படுகிறது.
99. கடலைத் தொடாத மீன்கள்
திருச்சி கடற்கரை மாவட்டம் இல்லை. மீனுக்கு என்ன செய்வது? ஸ்ரீரங்கம், லால்குடி, எஸ்.ஆடுதுறை, கொடலைக் கருப்பூர், மேல மாயனூர், திருமழப்பாடி, வடுக நாகம்பட்டி ஆகிய இடங்களில் மீன்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த ஒவ்வோர் ஊரிலும் மீனவர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. பிடிக்கப்படும் மீன்கள் கெடாமல் இருக்க, குளிர்பதன அமைப்புகளும் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

100. கண்டுபிடிக்கப்பட்ட கனிமங்கள்
திருச்சி மாவட்டத்தில் கனிமப் பொருள்கள் அதிகமாகக் கிடைக்கின்றன. இரும்பு, மாக்னசைட், பாஸ்பேடிக் நோடுல்ஸ் போன்றவை மாவட்டத்தின் பல இடங்களில் கிடைக்கின்றன. மேலும் வீடு கட்ட உதவும் கருங்கல் அதிகமாகக் கிடைக்கிறது.
101. ஸ்ரீரங்கத்து இசை
ஸ்ரீரங்கம் சிறந்த வைணவத் தலம் என்பது எல்லோருக்கும் தெயும். வேறு வகையிலும் புகழ்பெற்றது ஸ்ரீரங்கம். சங்கீத இசைக் கருவிகள் செய்யும் பல குடும்பத்தினர், இவ்வூரில் வாழ்ந்துவருகிறார்கள். உள்நாட்டு வியாபாரத்துக்கு இங்கிருந்து இசைக் கருவிகள் செல்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளும் வாங்கிச் செல்கின்றனர். தவிர, பனை ஓலைப் பொருள்களும் இங்கு அதிகம் செய்யப்பட்டு விற்பனையாகின்றன.
102. திருச்சி பர்மா பஜார்
திருச்சியின் அடையாளங்களில் ஒன்று, பர்மா பஜார். திருச்சி தெப்பக்குளத்தைச் சுற்றி அமைந்திருக்கும் இந்த பஜாரில், வெளிநாட்டுப் பொருள்கள் விற்கப்படுகின்றன. தெப்பக்குளத்துக்கு வடக்குத் திசையில் 1765ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கிறிஸ்துவ தேவாலயம் ஒன்று உள்ளது.
103. மலைக்கோட்டை வீதி
மலைக்கோட்டைக்கு அருகில் உள்ள கடைவீதியில் துணி வியாபாரம், பாத்திர வியாபாரம், நகை வியாபாரம், புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் போன்றவை உள்ளன. திருச்சியில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் பகுதி இது.
கல்வி
104. ஐ.ஐ.எம் - ஐ.ஐ.ஐ.டி
11ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, இந்தியாவின் பல நகரங்களில் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டன. 2011-12 ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஐந்து மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் திருச்சி ஐஐஎம்-யும் ஒன்று. 2013ஆம் ஆண்டு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ‘இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி’ நிறுவனம் திருச்சியில் தொடங்கப்பட்டது.
105. தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம்
திருச்சி சோமரசம்பேட்டையில் செயல்பட்டுவருகிறது, தேசிய வாழை ஆய்வு நிறுவனம். 1993ஆம் ஆண்டு, இந்திய விவசாய ஆய்வு மையத்தால் (ICAR) நிறுவப்பட்டது. வாழை உற்பத்தியைப் பெருக்கவும், புதிய தொழில் நுட்பங்களைப் புகுத்தவும் இந்நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேம்படுத்தப்பட்ட ஆய்வுக் கூடங்கள் மற்றும் இளம் விஞ்ஞானிகளால் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
106. கல்வி நிறுவனங்கள்
திருச்சி மாவட்டத்தில் 45 கலை அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. 40 பாலிடெக்னிக் கல்லூரிகள், 13 கல்வி நிறுவனங்கள் மேலாண்மைப் படிப்பை வழங்குகின்றன. அரசு சட்டக் கல்லூரியும் இங்குள்ளது. 35 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
107. பிற கல்வி நிறுவனங்கள்
திருச்சியில் செயல்படும் ஜமால் முகம்மது கல்லூரி, குறிப்பிடத்தக்க கல்லூரிகளில் ஒன்று. அன்பில் தர்மலிங்கம் விவசாயக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 1989ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. 1966ஆம் ஆண்டு, திருச்சியில் பிஷப் ஹீபர் கல்லூரி தொடங்கப்பட்டது.
108. கல்விக் கண் திறந்த திருச்சி
ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே, திருச்சி சிறந்த கல்வி மையமாகச் செயல்பட்டுவருகிறது. திருச்சியில் இன்று இயங்கிவரும் புகழ்பெற்ற செயின்ட் ஜோசப் கல்லூரி, 1846ஆம் அண்டு நாகப்பட்டினத்தில் தொடங்கப்பட்டது. பிறகு, 1883ஆம் ஆண்டில் திருச்சிக்கு மாற்றப்பட்டது. இந்தியாவின் மிகப் பழைமையான கல்லூரிகளில் ஒன்று. இந்தியாவின் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தொன்மைச் சான்றிதழ் (ஹெரிடேஜ் ஸ்டேட்டஸ்) பெற்ற கல்லூரி, எஸ்.ஜே.சி எனப்படும் செயின்ட் ஜோசப் கல்லூரி.
109. தலைவர்களைத் தந்த கல்லூரி
1792ஆம் ஆண்டு கட்டப்பட்ட செயின்ட் ஜோசப் பேராலயத்துடன் இணைந்த செயின்ட் ஜோசப் கல்லூரி, இந்திய அளவில் புகழ்பெற்றது. ஆர். வெங்கட்ராமன், ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம் ஆகிய இரண்டு ஜனாதிபதிகளை இந்தியாவுக்குத் தந்த கல்லூரி இது. தெப்பக்குளம் அருகில் உள்ளது.

110. பாரதிதாசன் பல்கலைக்கழகம்
திருச்சியில் செயல்படும் பாரதிதாசன் பல்கலைக்கழகம், 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகள் அனைத்தும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக இணைப்புடன் இயங்குகின்றன.
111. ராஜாஜி காசநோய் மருத்துவமனை
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலையில் அமைந்துள்ளது, ராஜாஜி காசநோய் மருத்துவமனை. திருச்சி மருத்துவக் கல்லூரியுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனை. காசநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
112. ஜான் வெஸ்ட்ரி பள்ளி
திருச்சி கன்டோன்ட்மென்ட் பகுதியில் உள்ள ஜான் வெஸ்ட்ரி பள்ளி, ஆங்கிலோ-இந்தியன் மேனிலைப் பள்ளியாகும். தென்னிந்திய திருச்சபையால் நடத்தப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழைமையான பள்ளிகளில் ஒன்று. 250 ஆண்டுகளாகச் செயல்படுகிறது. 1763ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
113. மருத்துவக் கல்லூரி
திருச்சியில் செயல்படும் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி, இந்திய மருத்துவ கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றது. ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பெரிய மிளகுப்பாறை என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் முப்பதுக்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. 3 ஆண்கள் விடுதிகளும், 3 பெண்கள் விடுதிகளும் உள்ளன.
114. பெரியார் ஈ.வே.ரா கல்லூரி
திருச்சியில் செயல்படும் தன்னாட்சித் தகுதிபெற்ற (Autonomous) அரசு கலைக் கல்லூரி, ஈ.வே.ரா கல்லூரி. 1965ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் பக்தவத்சலம் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. இருபாலர் பயிலும் இக்கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இணைவுபெற்று செயல்பட்டுவருகிறது.
115. தேசியக் கல்லூரி
திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது, தேசியக் கல்லூரி. திருச்சியில் செயல்படும் பழைமையான கல்லூரிகளில் ஒன்று. 1919ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட, அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும். முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் சி.ரெங்கராஜன் ஆகியோர் இக்கல்லூரியின் மாணவர்கள்.
116. ஹோலி கிராஸ் கல்லூரி
திருச்சிராப்பள்ளியில் செயல்படும் பெண்களுக்கான கல்லூரி. 1923ஆம் ஆண்டு, பெண்களுக்கு உயர் கல்வி அளிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டது. புத்தூரில் செயல்படும் கிறிஸ்துவ சகோதரிகள் (Sisters of the Cross) அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் செயல்படும் பழைமையான கல்லூரிகளில் ஒன்று.
117. முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்லூரி
கலை அறிவியல் கல்லூரிகளில் தேசிய அளவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை அறிமுகப்படுத்திய பெருமை, திருச்சியில் இரண்டு கல்லூரிகளைச் சாரும். ஒன்று, செயின்ட் ஜோசப் கல்லூரி. இன்னொன்று, நேரு மெமோரியல் கல்லூரி. 1983ஆம் ஆண்டிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை பட்ட வகுப்பில் அறிமுகப்படுத்தியது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் முதன்முதலாக டேட்டா-சயின்ஸ் பாடத்தை 2017-2018ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
118. சீதாலட்சுமி ராமசாமி கல்லூரி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் பெண்களுக்கான கல்லூரி இது. 1951ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் செயல்படுகிறது. கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்ட வகுப்புகள் நடைபெறுகின்றன.
119. பொன்விழா கண்ட நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி
1964ஆம் ஆண்டு, திருச்சியில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி தொடங்கப்பட்டது. மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்வி நிறுவனம். பொறியியல், கணிதம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இளங்கலைப் பட்டம், முதல் முனைவர் பட்டம் வரை வழங்கப்படுகிறது. 2014ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட பொன்விழாவில், அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார்.
நீர்ப்பாசனம்
120. கொள்ளிடம்
கொள்ளிடத்தை ஆங்கிலத்தில் கொலரூன் (Coleroon) என்றே குறிப்பிடுகிறார்கள். காவிரியின் கிளை நதி. காவிரியிலிருந்து தண்ணீரை முகந்துகொண்டு, தஞ்சாவூர் டெல்டா பாசனத்துக்குச் செல்கிறது. ஸ்ரீரங்கத்தில் காவிரியிலிருந்து பிரியும் கொள்ளிடம், ஸ்ரீரங்கத்தை ஆறுகளுக்கு நடுவே உள்ள தீவாக மாற்றுகிறது.
121. சத்தான சாகுபடி
திருச்சி மாவட்டத்தில் மண்வளம், நீர்வளம், கால நிலை, மனித வளம், சந்தைகள் எல்லாம் தேவையான அளவில் இருக்கின்றன. அதனால்தான், திருச்சி மாவட்டம் விவசாய பூமியாக இருக்கிறது. நெல், சோளம், கம்பு, மக்காச் சோளம் ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன. முக்கியமாக, துவரம் பருப்பு அதிகம் விளைவிக்கப்படுகிறது. நிலக்கடலை, வெங்காயம் ஆகியவையும் சில இடங்களில் பயிரிடப்படுகின்றன.
தொழில்கள்
122. வடிமனைத் தொழிற்சாலை (?)
திருச்சியில், வடிமனை மற்றும் வேதிப் பொருள்கள் தொழிற்சாலை, செந்தண்ணீர் புரத்தில் 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இங்கு அசிட்டால்டிஹைடு, அசிட்டிக்காடி, அசிட்டிக் அன்ஹைட்ரைட் மற்றும் ஈதைல் போன்றவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. திருச்சிராப்பள்ளி இந்தியாவின் ‘ஆற்றல் திறன் மற்றும் கட்டுருவாக்கத் தொழில் தலைநகரம்’ (Energy Equipment & Fabrication Capital of India) என்று அழைக்கப்படுகிறது.
123. தொழில்மயமான திருச்சி
திருச்சி மண்டலத்திலிருந்து ஏற்றுமதியாகும் மென்பொருள்களின் ஆண்டு வருமானம், 26.21 கோடி. தவிர, 2010 டிசம்பர் மாதம், 60 கோடி ரூபாய் செலவில் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
124. படைக்கலத் தொழிற்சாலை
திருச்சி படைக்கலத் தொழிற்சாலை (OFT), இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் படைக்கலத் தொழிற்சாலைகள் வாரியத்தின் கீழ் இயங்கும் தொழிற்சாலை. இந்தியாவில் இதுபோன்று 41 படைக்கலத் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. திருச்சி படைக்கலத் தொழிற்சாலையை 1966 ஜூலை 3ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தொடங்கிவைத்தார்.
125. படைக்கலத் தொழிற்சாலை II
திருவெறும்பூருக்கு அருகில், சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் துப்பாக்கித் தொழிற்சாலை இயங்குகிறது. மத்திய அரசின் ராணுவத்துறை கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இந்திய ராணுவத்துக்குத் தேவையான பலவகைத் துப்பாக்கிகள் இங்கு தயாராகின்றன. தீவிர பாதுகாப்பு மிக்க பகுதி இது.
126. உதிரிப்பாகம் உற்பத்தி
திருச்சி என்ஜினீயரிங் எக்யூப்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்குப் பெயர்பெற்றது. பொன்மலையில் உள்ள (Golden Rock Railway Workshop) ரயில் தொழிற்சாலை, தனது மூன்று உற்பத்தி அலகுகள் மூலம் ரயில் உதிரிப்பாகங்களைத் தயாரித்துத் தருகிறது. ஆரம்பத்தில், நாகப்பட்டினத்தில் செயல்பட்டுவந்த இந்தத் தொழிற்சாலை, 1928-ல் திருச்சி பொன்மலைக்கு மாற்றப்பட்டது.
127. தோலும் சுருட்டும்
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, திருச்சியில் பதப்படுத்தும் தொழில்களும், சுருட்டுத் தொழில்களும் ஆதிக்கம் செலுத்திவந்தன. ஆண்டுக்கு 12 கோடி சுருட்டுகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. பதப்படுத்தப்பட்ட தோல்கள் இங்கிலாந்துக்கு ஏற்றுமதிசெய்யப்பட்டன.
128. எல்லாத் தொழிலும் தெய்வம்
திருச்சியில், பெரும்பாலும் அனைத்துவிதமான தொழிற்சாலைகளும் இருக்கின்றன. கரும்பு ஆலைகள், உணவுப் பொருள் தயாரிப்புகள், பருத்தி ஆடை நெசவகங்கள், மரச்சாமான்கள் தயாரித்தல், காகிதம், தோல் பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்கள், ரப்பர், ரசாயனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் என வெரைட்டியான தொழில்களின் நகரமாகத் திகழ்கிறது திருச்சி.
129. டாலடிக்கும் செயற்கை வைரம்
மாவட்டத் தொழில் மையத்தின் திருச்சி நகரின் சில பகுதிகளில், செயற்கை வைரத் தொழிற்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக, செயற்கை வைர தொழில் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 40,000 தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இங்கு தயாரிக்கப்படும் வைரங்களை ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா மாநிலங்கள் அள்ளிக்கொள்கின்றன.
130. பெரிய தொழிற்சாலை
பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் என்பதன் சுருக்கமே பெல் (BHEL). தமிழகத்தின் மிகப்பெரிய தொழிற்சாலை இது. இத்தொழிற்சாலையில், கொதிகலன்கள் (Boiler) தயார் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. இதனால், அந்நியச் செலவாணி அதிகம் கிடைக்கிறது. திருவெறும்பூரிலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
131. சிக்குபுக்கு ரயில்
தென்னிந்திய ரயில்வேயின் தெற்கு வட்டத்துக்கு திருச்சிதான் தலைமை இடம். தெற்கு ரயில்வேயின் மீட்டர் கேஜ் பிரிவு தொழிற்சாலை, திருச்சியிலிருந்து 4 கிலோமீட்டர் கிழக்கே பொன்மலையில் உள்ளது. விழுப்புரத்தில் இயங்கிவந்த தொழில் பிரிவும் இணைக்கப்பட்டு, தற்போது நவீனப்படுத்தப்பட்டுள்ளது.
132. சிந்தாமணி
மலைக்கோட்டை மாநகரின் முக்கியமான அடையாளங்களில் ஒன்று, சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடி. மெயின் கார்டு கேட்டுக்கு அருகில் உள்ள இந்த நிறுவனம், நகரத்தின் பல பகுதிகளிலும் கிளை நிறுவனங்களை நடத்துகிறது. திருச்சியின் முக்கியமான பேருந்து நிறுத்தம் சிந்தாமணி.
133. சுருட்டு
சங்க காலத்திலிருந்தே உறையூர் மக்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். உறையூரின் இன்னொரு முக்கியத் தொழில், சுருட்டு தயாரிப்பு. உறையூரில் தயாரிக்கப்படும் சுருட்டுகள் உலகப் புகழ்பெற்றவை. உறையூரின் சுருட்டுத் தொழிலை ‘புவிசார் குறியீடு’ பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில், தேவாங்க செட்டியார் சமூகத்தினரும், சௌராஷ்ட்ரா சமூகத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருக்கின்றனர்.
விளையாட்டு
134. அண்ணா ஸ்டேடியம்
திருச்சியில் இருக்கும் அண்ணா ஸ்டேடியம், திருச்சியின் முக்கியமான விளையாட்டு மைதானம். ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், அத்லெட்டிக் டிராக், பேட்மின்டன் கோர்ட், நீச்சல் குளம் உள்ளிட்டவை இந்த ஸ்டேடியத்தில் இருக்கின்றன. உள் அரங்க விளையாட்டுகளும் விளையாடலாம். இங்கேயே அத்லெட்டிக் வீரர்களுக்கான விடுதியும் செயல்படுகிறது.
135. கிரிக்கெட் அசோசியேஷன்
திருச்சியில் செயல்படும் திருச்சி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷனோடு சேர்ந்து செயல்படும் இந்த கிளப், பள்ளி மற்றும் கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளை ஒருங்கிணைத்து, இளம் வீரர்களை அடையாளப்படுத்துகிறது. முதல் தரமான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்துகிறது.

136. மன்னார்புரம் அகாடமி
திருச்சிராப்பள்ளி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன், 2008-2009ஆம் ஆண்டு, தனது பொன்விழாவைக் கொண்டாடியது. திருச்சி மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இருக்கும் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட அசோசியேஷன், நகரின் வேறு சில இடங்களிலும் கிரிக்கெட் பயிற்சி அகாடமியை நிறுவியது. அப்படி திருச்சியின் புறநகரில் ஆரம்பிக்கப்பட்ட மன்னார்புரம் அகாடமி, சிறப்பாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துவருகிறது.
137. மற்ற விளையாட்டுகள்
திருச்சி மாவட்ட அளவில் கால்பந்து, டென்னிஸ், வாலிபால் போன்ற விளையாட்டுகளுக்கு தனித்தனியாகப் பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. விளையாட்டுக் குழுக்களும் நிறைய செயல்படுகின்றன. அவ்வப்போது தேசிய அளவிலான போட்டிகளையும் நடத்துகின்றன.
138. வாக்கி-ஹாக்கி
திருச்சி மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு ஹாக்கி விளையாட்டும், கிரிக்கெட் ஆட்டமும் இரண்டு கண்கள் மாதிரி. நிறைய ஹாக்கி வீரர்களை உருவாக்கியிருக்கிறது திருச்சி மாவட்டம். ஃபெடரேஷன் கோப்பை ஹாக்கி போட்டிக்காக ‘மும்பை இந்தியன்’ அணியில் விளையாடிய சார்லஸ் கார்னிலியஸ் (Charles Cornelivs) லெஸ்லி பெர்னாண்டஸ் ( Leslie Fernandez) ராஜகோபால் சதீஷ் ஆகிய மூன்று பேரும் திருச்சி மாவட்டத்துக்காரர்கள்.
கலைகள்
139. உச்சிப் பிள்ளையார்
திருச்சி மலைக்கோட்டையில் இருக்கும் கணபதியைத்தான் உச்சிப் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். மலைக்கோட்டையின் உயரம் 83 மீட்டர். உலகத்திலேயே மிகப் பழைமையான பாறை என்று இந்த மலையைச் சொல்கிறார்கள். அதாவது, கிட்டத்தட்ட 400 கோடி ஆண்டுகள் பழைமையான மலை என்கிறார்கள் புவியியல் அறிஞர்கள். உச்சியில் இருக்கும் பிள்ளையாரைப் பார்க்க 344 படிகள் உள்ளன.
140. லலிதாங்குரப் பல்லவ கிருஹம்
திருச்சி தாயுமானவர் கோயிலிலிருந்து உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு பிரியும் வழியில், மலைச்சாரலில் லலிதாங்குரப் பல்லவ கிருஹம் என்ற குடைவரை இருக்கிறது. மகேந்திரவர்ம பல்லவனின் பட்டப் பெயரான லலிதாங்குரனின் பெயரில் இந்தக் குடைவரை அழைக்கப்படுகிறது. ஏழாம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட இந்தக் குடைவரையில், பல வரலாற்றுத் தகவல்கள் பொதிந்துகிடக்கின்றன.
141. கீழ்க் குடைவரைக் கோயில்
திருச்சி மலையின் தென்மேற்கு மூலையில் உள்ளது, கீழ்க் குடைவரைக் கோயில். மலையின் சரிவில் தெற்கு நோக்கி உருவாக்கப்பட்டுள்ளது. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்தக் குடைவரைக் கோயில். குடைவரையின் முன், கல்லால் விட்டங்கள் அமைத்திருக்கிறார்கள். இந்த விட்டங்களின் நுனியில் பூதகணங்கள் செதுக்கப்பட்டுள்ளன. பல்லவர்களின் குடைவரை கலைக்கு இந்த ‘கீழ்க் குடைவரை’ மேலும் ஓர் எடுத்துக்காட்டு.
142. சிலிர்க்கும் சிற்பக்கலை
சிற்பக்கலை, கல்வெட்டுகள், குடைவரைகள் ஆகியவை திருச்சி மாவட்டத்தில் அதிகம் காணப்படுகின்றன. அதற்கு உதாரணம், திருப்பைஞ்ஞாலி கிராமம். இக்கிராமத்தில், ஞாலி என்று ஒரு கோயில் உள்ளது. இக்கோயிலின் பிராகாரத்தில் மேற்கு நோக்கி குடைவரை உருவாக்கப்பட்டிருக்கிறது. இங்குள்ள பல கடவுளர்களின் திருவுருவங்கள், பாறையைச் செதுக்கி நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
143. உய்யக்கொண்டான் கோயில்
திருச்சி மாவட்டம் உய்யக்கொண்டான் நதிக்கரையில் உள்ள பழம்பெரும் சிவாலயம் இது. தேவாரத்தில் இந்தக் கோயில் பற்றிய பாடல்கள் உள்ளன. 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயில். லிங்க வடிவத்தில் உள்ள சிவபெருமானின் பெயர், உய்யக்கொண்டான். அம்பாளின் பெயர் அஞ்சனாக்ஷி அம்மன்.
ஊரும் பேரும்
144. புள்ளம்பாடி
திருச்சி மாவட்டத்தில் லால்குடி தாலுகாவில் இருக்கும் புள்ளம்பாடி, கொள்ளிடத்தின் துணை நதியான நந்தியாற்றுக் (Nandhiyaru) கரையில் அமைந்திருக்கிறது. 950 ஆண்டுகள் பழைமையான சிதம்பரேஸ்வரர் கோயிலும், புள்ளம்பாடி அணையும் (Pullambadi Dam) குறிப்பிடத்தக்கவை.
145. சமயபுரம்
திருச்சியிலிருந்து 12 கிலோமீட்டர் வடக்குத் திசையில் உள்ளது, சமயபுரம். திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சமயபுரத்தில், பிரபலமான மாரியம்மன் கோயில் உள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயில் இருக்குமிடம், கண்ணனூர், கண்ணபுரம், விக்ரமபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
146. நவல்பட்டு - தொழில்நுட்ப நகரம்
திருச்சி மாவட்டத்தில், திருச்சி நகரத்தை ஒட்டியுள்ள ஊர் நவல்பட்டு. திருச்சி மாவட்டத்தின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்குதான் உள்ளன.
147. கல்லக்குடி
திருச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு பேரூராட்சி கல்லக்குடி. இப்பகுதியில், டால்மியா சிமென்ட் தொழிற்சாலை இருந்ததால், ‘டால்மியாபுரம்’ என்று அழைக்கப்பட்டுவந்தது. இதைக் கல்லக்குடி என்று மாற்றுவதற்காக (முன்னாள் முதல்வர்) கலைஞர் கருணாநிதி தலைமையில் பெரிய போராட்டம் நடந்தது. இதனால், கல்லக்குடி பெயர் பிரபலமாகிவிட்டது.
148. ஏராகுடி
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் இருக்கும் ஒரு சிறிய நகரம், ஏராகுடி. ஆண்களைவிட பெண்களின் விகிதம் அதிகம். விவசாயப் பணியிலேயே ஈடுபடுவதால், கல்வியறிவு குறைந்துதான் இருக்கிறது. அதாவது, ஏராகுடியின் கல்வியறிவு 59 சதவிகிதம். சோளமும் நெல்லும் அதிகம் பயிரிடுகிறார்கள். நீர் மேலாண்மை சிறப்பாக மேற்கொள்ளப்படும் தமிழகத்தின் மிகச் சில ஊர்களில் ஏராகுடியும் ஒன்று. பருவ காலங்களில் ஏரிகளில் முறையாக நீர் சேமிக்கப்படுகிறது. வெள்ள காலங்களில் உபரிநீர் வெளியேற ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
149. சிக்கதம்பூர்
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள ஊராட்சி, சிக்கதம்பூர். துறையூர் சட்டமன்றத் தொகுதியின் கீழும், பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியின் கீழும் வருகிறது. இந்த ஊராட்சியின் கீழ் ஒட்டம்பட்டி, ஒட்டம்பட்டிபுதூர், சிக்கதம்பூர் பாளையம், சேர்வைக்காரன்பட்டி ஆகிய கிராமங்கள் அடங்கியுள்ளன. திருச்சியிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. துறையூரிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
150. பொன்மலை
திருச்சி மாநகராட்சியின் 4 மண்டலங்களின் ஒன்று, பொன்மலை. இங்கு, பொன்மலை ரயில்வே பணிமனை இருக்கிறது. பொன்மலையின் பெரும்பகுதி ரயில்வே பணிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதன் அருகில், கல்கண்டார் கோட்டை, பொன்மலைப்பட்டி, கீழக்குறிச்சி ஆகிய ஊர்கள் உள்ளன. 1926ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சந்தை, பொன்மலையில் இன்றும் புகழ்பெற்று விளங்குகிறது.
151. பாலக்கரை
திருச்சி அருகில் உள்ள மக்கள் நெருக்கம் மிகுந்த குடியிருப்புப் பகுதி. குடிசை வாழ் மக்களும் இங்கு இருக்கிறார்கள். திருச்சி நகரத்தின் தென்பகுதியில் உள்ளது பாலக்கரை. பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்றும் பாலக்கரையில் உள்ளது. பெரிய கடை வீதி, காந்தி மார்க்கெட் பகுதிகள் பாலக்கரை அருகில் உள்ளன.
152. ஆக்ஸ்ஃபோர்டும் கிராஃப்போர்டும்
திருச்சி நகரத்தின் ஒரு பகுதிதான் கிராஃப்போர்டு. இந்த ஊரின் உண்மையான பெயர் கிராப்பட்டி. ஆங்கிலேயர் வாயில் கிராப்பட்டி என்ற பெயர் நுழையவில்லை. எனவே, ஆக்ஸ்ஃபோர்டு லெவலுக்கு கிராஃபோர்டு என்று மாற்றிவிட்டார்கள். திருச்சி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கிராஃபோர்டைச் சுற்றி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையின் குடியிருப்புகள், ரயில்வே குடியிருப்புகள் உள்ளன.
153. வைரிச் செட்டிபாளையம்
திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் இருக்கிறது வைரிசெட்டிபாளையம். துறையூரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரம். திருச்சி மாவட்டத்தின் ஓர் அழகிய கிராமம். இதன் வடக்கே கொல்லிமலையால் சூழப்பட்டிருக்கிறது. அரசாங்கத்தால் பாதுகாக்கப்பட்ட காடுகள் (Reserved forests) வைரிசெட்டிபாளைத்தில் உள்ளன.

154. மெயின்கார்டு கேட்
திருச்சியில் உள்ள ‘மெயின் கார்டு கேட்’ பகுதி, நகரத்தின் முக்கியமான பரபரப்பான பகுதி. திருச்சி மலைக்கோட்டை காம்ப்ளக்ஸின் முக்கியமான நுழைவாயில்தான் மெயின் கார்டு கேட். இந்தக் கோட்டையின் நுழைவாயில் பகுதி இருந்த ஏரியாவுக்கே பெயராகிவிட்டது. திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் மெயின் கார்டு கேட்டுக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது.
155. தொட்டியம்
திருச்சி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி தொட்டியம். இது, காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள வளமான பகுதி. இந்த ஊரில் வாழை அதிகமாகப் பயிரிடப்படுவதோடு, நெல்லும் வெற்றிலையும் முக்கிய பயிர்களாக உள்ளன. திருச்சிக்கு வட மேற்கில் 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
156. தாத்தையங்கார் பேட்டை
திருச்சி மாவட்டத்தின் பேரூராட்சி, தாத்தையங்கார் பேட்டை (Thathiengarpet) முசிறி தாலுகாவில் அமைந்துள்ளது. சுமார் 15,000 பேர் வசிக்கிறார்கள்.
157. கம்பரசம்பேட்டை
திருச்சி மாவட்டத்தில் கந்தநல்லூர் ஒன்றியத்தில் அமைந்துள்ள ஊராட்சி, கம்பரசம்பேட்டை. ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. திருச்சி பாராளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. கூடலூர், மல்லாச்சிபுரம், பெரியார் நகர், கம்பரசம்பேட்டை ஆகிய 4 ஊர்களும் கம்பரசம்பேட்டை ஊராட்சியின் கட்டுப்பாட்டில் வருகின்றன.
158. சோமரசம்பேட்டை/தாயனூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகாவில் உள்ள மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள், சோமரசம்பேட்டை மற்றும் தாயனூர். சோமரசம்பேட்டையில் சுமார் 10,000 பேர் வசிக்கிறார்கள். இங்கு 85 சதவிகிதத்துக்கும் கூடுதலாக கல்வியறிவு பெற்றவர்கள் உள்ளனர். தாயனூர் ஊராட்சியின் கீழ் 7 கிராமங்கள் அமைந்துள்ளன. தாயனூர் சந்தை என்றே தனியாக ஓர் ஊர் இருக்கிறது. தவிர, கீழபுரம், கீழ்க்காடு, மேலக்காடு, தாயனூர் ஆகிய ஊர்கள் தாயனூர் ஊராட்சியின் கீழ் வருகின்றன.
159. கூத்தப்பார்
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி, கூத்தப்பார். திருச்சியிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. கல்லணையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம். சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி செய்யப்பட்டிருக்கிறது.
160. காஜா மலை
திருச்சி நகரத்துக்கு அருகில் இருக்கக்கூடிய சிறிய ஊர், காஜாமலை. அருகில் உள்ள குன்றின் பெயரிலேயே இந்த ஊர் அழைக்கப்படுகிறது. பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்து தங்கியிருந்த சூஃபி (Sufi) முஸ்லிம் துறவி. காஜா சையத் அகமது ஷா அவுலியா (Khwaja Syed Ahmed Shah Avlia), இம்மலையிலிருந்து உபதேசங்கள் வழங்கியதால், காஜா மலை என்ற பெயர் வந்தது. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி மையம் இங்குசெயல்படுகிறது.
161. மூலக்காடு
திருச்சி மாவட்டம், துறையூர் ஒன்றியத்தில் உள்ளது, மூலக்காடு. கோம்பை பஞ்சாயத்தின் எல்லைப் பகுதிக்குள் வருகிறது. திருச்சிக்கு வடக்கே 55 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள அழகிய கிராமம். மூலக்காட்டுக்கு மேற்குப் புறத்தில்தான் உப்பிலியாபுரமும், அதையடுத்து பச்சைமலைக்காடுகளும் தொடங்குகின்றன.
162. திருப்பராய்த்துறை
திருச்சி மாவட்டத்தில் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள காவிரிக்கரை கிராமம், திருப்பராய்த்துறை. திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையும், திருச்சி-பாலக்காடு இருப்புப் பாதையும் திருப்பராய்த்துறை வழியாகச் செல்கின்றன. இந்த ஊரில் பராயத்துறை நாதர் கோயிலும், சுவாமி சித்பவானந்தர் அமைத்த ராமகிருஷ்ண தபோவனமும் உள்ளன. திருச்சியிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது.
163. சிறுகமணி
திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி சிறுகமணி. காவிரியால் செழிப்படையும் ஊர்களில் ஒன்று. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில், பெருகமணிக்கும்-காவல்கார பாளையத்துக்கும் இடையில் அமைந்திருக்கிறது.
164. பேட்டைவாய்த்தலை
பட்டவாய்த்தலை என்றும் அழைக்கப்படும் கிராமம், திருச்சி மாவட்டத்தில் உள்ள வசதிகள் மேம்படுத்தப்பட்ட கிராமங்களுள் ஒன்று. 2015ஆம் ஆண்டு தூய்மையான கிராமமாக அறிவிக்கப்பட்ட பெருமைக்குரிய ஊர். திருச்சி-கரூர் சாலையில், திருச்சியிலிருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
165. துவரங்குறிச்சி
பெரும்பாலும் துவரங்குறிச்சியை, தொவரங்குறிச்சி என்றே உச்சரிக்கிறார்கள். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சின்ன நகரம். திருச்சியிலிருந்து 48 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. துவரங்குறிச்சி மலையில் அரிய தகவல்களைத் தரும் கல்வெட்டுகள் உள்ளன.
166. துவாக்குடி
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ஒரு நகராட்சி. துபாய்க்குடி என்று முன்னர் அழைக்கப்பட்டதாகவும், அதுவே மருவி துவாக்குடி என்று ஆகிவிட்டதாகவும் கூறுகிறார்கள். துவாக்குடி நகராட்சியில் படித்தவர்களின் எண்ணிக்கை 73 சதவிகிதம் பேர். தமிழ்நாட்டுக்கான தேசிய தொழில்நுட்பக் கழகம் துவாக்குடியில் அமைந்துள்ளது.
167. அன்பில்
‘அன்பில்’ என்பது லால்குடிக்கு அருகில், கொள்ளிடம் நதிக்கரையில் உள்ள அழகிய கிராமம். முக்கியமான அரசியல் தலைவர்களை தமிழகத்துக்குத் தந்த ஊர். தி.மு.க-வை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான ‘அன்பில்’ தர்மலிங்கம் பிறந்த ஊர். இவர், தமிழக அமைச்சரவையில் அமைச்சராகவும் பணியாற்றியவர். ஜங்கமராஜபுரம், மங்கம்மாள்புரம், கீழன்பில் ஆகிய 3 கிராமங்களும் இணைந்து அன்பில் என்றே அழைக்கப்படுகிறது.
168. தென்னூர்
எப்போதும் பிஸியாக வியாபாரம் நடக்கும் திருச்சியின் நகரப் பகுதிகளுள் ஒன்று, தென்னூர். மகாத்மா காந்தி மார்க்கெட் அருகில் அபிஷேகபுரம் மண்டலத்துக்குள் இருக்கிறது. இங்கு, தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சார சபாவின் கிளை அமைந்திருக்கிறது.
169. முசுகுண்டன் ஆண்ட முசிறி
திருச்சி மாவட்டத்தின் ஒரு பேரூராட்சி முசிறி. இப்பகுதியை ஆண்ட சோழ மன்னர் முசுகுண்டன் (Musukundan) பெயரில், முசுகுண்டபுரி என்று அழைக்கப்பட்டது. இப்போது அது முசிறி ஆகிவிட்டது. முசிறியிலிருந்து (காவிரியைக் கடந்து) 2 கிலோமீட்டர் போனால் குளித்தலை. பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது.
170. முன்னேற்ற பாதையில் துறையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தாலுகா துறையூர். ஆரம்பத்தில் பேரூராட்சியாக இருந்த துறையூர், 1970ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாகவும், 1998ல் இரண்டாம் நிலை நகராட்சியாகவும், 2008ஆம் ஆண்டு தேர்வுநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தமிழகத்தின் மத்தியப் பகுதியாக இருப்பதால், பல நகரங்களை இணைக்கும் மையமாகத் திகழ்கிறது.
171. லால்குடி
லால்குடி என்பது உருது வார்த்தை என்றால் நம்ப முடிகிறதா? 'லால்' என்றால், சிவப்பு என்று பொருள். ‘குடி’ என்றால், கோபுரம். ‘செங்கோபுரம்’ என்பதே லால்குடி என்பதன் பொருள். லால்குடி, திருச்சி மாவட்டத்தின் ஒரு தாலுகா. 1952ஆம் ஆண்டு லால்குடி சட்டமன்றத் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
172. மணப்பாறை மாடுகட்டி
உழவு மாடுகளுக்குப் பெயர்பெற்ற ஊர். இன்றைக்கும் மணப்பாறை மாடுகளுக்கு மார்க்கெட்டில் ஏக டிமாண்ட். `மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி, வயக்காட்டை உழுதுபோடு செல்லக்கண்ணு' என்ற பாடல், ஒரு காலத்தில் செம ஹிட். உழவுத் தொழில்தான் முக்கியமான தொழில். அடுத்தபடியாக மணப்பாறைக்குப் பெருமை சேர்ப்பது, முறுக்கு.
173. சமயபுரம் பூக்கள்
சமயபுரம் பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம், மாரியம்மன் கோயில். இது மிகவும் பிரசித்திபெற்ற கோயில். மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பகுதியில் உள்ளது. இந்த ஊரைப் பற்றி தெரியாத விஷயங்களில் ஒன்று, அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்படுகின்றன, இரண்டாவது, 1752ஆம் ஆண்டு, கர்நாடகப் போரில் திருச்சி முற்றுகையிடப்பட்ட போது, பிரான்ஸ் நாட்டுப் படைகள் இங்கு முகாம் அமைத்துச் செயல்பட்டன.
174. முக்கொம்பு
முக்கொம்பூர் என்பதுதான் சரியான பெயர். அதுவே மருவி, முக்கொம்பு என்றானது. திருச்சி மாவட்டத்தின் பொழுதுபோக்கு இடம். இங்கு காவிரி இரண்டாகப் பிரிந்து, காவிரி என்றும் கொள்ளிடம் என்றும் பெயர் பெறுகிறது. ஆற்றுக்குள் சிறிது தொலைவில் தூண்களை நிறுத்தி, அதன் மேல் தங்குவதற்கு அறைகள் கட்டி, வாடகைக்கு விடுகின்றனர். சினிமா ஷூட்டிங்குகளும் இங்கு எடுக்கப்படுகின்றன.
175. வண்ணங்கள் பூசும் நகரம்
திருச்சியிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இலுப்பூர். சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த குடும்பங்கள், இந்த ஊரில் நெசவுத் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த ஊரில், கைக்கோனார் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் குறிப்பிடத்தக்க அளவு வசிக்கின்றனர். இவர்கள், துணிகளுக்குச் சாயம் போடும் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர்.
176. கிளாம்பில் - தி கிரேட்
திருச்சிக்கு வடகிழக்கில் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கிளாம்பில். 2,000 ஆண்டு வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கிநிற்கும் கோயில்களும் சிற்பங்களும் இவ்வூரில் அதிகம் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெறும் பங்குனித் திருவிழா விமரிசையானது.
177. லால்குடி கொழுந்து வெத்தல
திருச்சிக்கு வடகிழக்கில் உள்ள முக்கியமான ஊர் லால்குடி. திருச்சி மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க வியாபாரப் பகுதி. வாழைமரங்கள் அதிகம் வளர்க்கப்படுகின்றன. வெற்றிலையும் அதிகமாக விளைகிறது. அதனால், வாழையும் வெற்றிலையும் இங்கிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
178. முத்தரசநல்லூர்
திருச்சிக்கு வடமேற்கில் 6 கிலோமீட்டர் தொலைவில் கரூர் சாலையில் உள்ளது. விவசாயம்தான் இங்கு முக்கியத் தொழில். முற்காலத்தில் முத்தரசர் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டதால், முத்தரசநல்லுர் ஆகிவிட்டது. வாழை, கரும்பு, வெள்ளரி, உளுந்து ஆகியவை பயிரிடப்படுகின்றன. 1753ஆம் ஆண்டில், இப்பகுதியில் ஆங்கிலேயரின் பிரெஞ்சுக்காரர்களுக்கும் கர்நாடகப் போர் நடைபெற்றது.
179. பிராட்டியூர்
திருச்சியின் புறநகர்ப் பகுதியாக இருந்து, நகர வளர்ச்சியின் வேகத்தில் திருச்சி மாநகரத்தில் வந்து விட்ட ஊர். முன்பு, தேர்வு நிலைப் பேரூராட்சியாக இருந்தது. மண்டல போக்குவரத்து அலுவலகம் (எண். TN - 45) இங்கு செயல்படுகிறது. ரெட்டை மலையில் உள்ள ஒண்டி கருப்பன் சாமியை வழிபட மதுரையிலிருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் வருகிறார்கள்.
180. பிச்சாண்டார் கோயில்
திருச்சிக்கு வடக்கில் 6 கிலோமீட்டர் தூரத்தில், கொள்ளிடத்தின் வடகரையில் அமைந்தள்ளது பிச்சாண்டார் கோயில். ஸ்ரீரங்கத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு விவசாயமே முக்கியத் தொழில். மண்ணச்சநல்லூர் தாலுகாவில் அமைந்துள்ளது. இவ்வூரில் உள்ள பெருமாள் பாண்டுரங்கன். தென் பண்டரிபுரம் என்றும் இவ்வூரை பக்தர்கள் அழைக்கிறார்கள்.
181. திருவெறும்பூர்
திருச்சிக்கு வடகிழக்கில் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, திருவெறும்பூர். மத்திய அரசு நிறுவனமான பாரத் கனரக தொழிற்சாலை இங்குதான் உள்ளது. துப்பாக்கித் தொழிற்சாலை இந்த ஊருக்கு அருகில் இருக்கிறது. போர்கள் நடந்த காலத்தில், திருவெறும்பூர் சிறந்த போர்க்களமாக இருந்திருக்கிறது. பழைய பெயர் எறும்பேஸ்வரம்.
182. உறையூர்
சங்க காலத்திலும் சங்க காலத்துக்குப் பிறகும், சோழ நாட்டின் தலைநகராகக் கொண்டு 15 சோழ அரசர்கள் ஆட்சிசெய்திருக்கிறார்கள். அப்படியென்றால், உறையூரில் உறைந்திருக்கும் வலிமையை நாம் உணர்ந்துகொள்ள முடியும். 2000 ஆண்டுகளாக இந்த ஊரின் பெயர் உறையூர் என்றே இருப்பது, உள்ளபடியே சிறப்புதான். கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் போன்றோர் உறையூருக்கு வருகை புரிந்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது.
183. உறையூரின் புதிய முகம்
உறையூர், கடல் மட்டத்துக்கு மேல் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது. தற்போது, திருச்சி மாநகராட்சியின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இங்கு புதிய குடியிருப்புகள் பெருகிவிட்டதால், உறையூரின் சங்க கால முகம் மாறிவிட்டது. உறையூருக்கும் தென்னூருக்கும் இடையே தில்லை நகர், சாலை நகர், நெசவாளர் காலனி ஆகிய முக்கிய பகுதிகள் வந்துவிட்டதால், பரபரப்பான பகுதியாக மாறிவிட்டது.

184. மலைக்கவைக்கும் கோட்டை
திருச்சி மாநகரத்தின் மையப் பகுதியில் இருக்கும் மலைக்கோட்டை, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இடம். 16ஆம் நூற்றாண்டில், விசுவநாத நாயக்கரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு வலிமையாக்கப்பட்டது. லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோட்டையில், திருச்சி மலைக்கோட்டையின் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த அளவுக்குச் சிறப்பானது.
ஆன்மிகம்
185. வயலூர் முருகன் கோயில்
திருச்சி மாவட்டத்தின் முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்று, வயலூர் முருகன் கோயில். திருச்சியிலிருந்து மேற்கே 9 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் இங்கு அருள் வழங்கியதாகவும், அருணகிரி நாதர் திருப்புகழ் எழுத அதுவே தூண்டுகோலாக அமைந்ததாகவும் கருதப்படுகிறது.
186. அன்பில் ஆலந்துறை
கொள்ளிடம் நதிக்கரையில், லால்குடிக்கு அருகே அன்பில் கிராமத்தில் இருக்கிறது, சத்தியவாகீஸ்வரர் கோயில். அன்பில் ஆலந்துறை கோயில் என்றும், அன்பில் சத்தியவாகீஸ்வரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. மூலவர் சிவபெருமான். சோழர் கால கட்டடக்கலையை வெளி உலகுக்கு உணர்த்தும் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
187. சின்னமலையில் பெரிய சாமி
திருச்சிராப்பள்ளிக்கு தென்மேற்கே, 4 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிற திருக்கற்குடியில், ஒரு சிறிய மலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் உள்ள சிவன் கோயிலை உச்சிநாதர் கோயில் என்று அழைக்கிறார்கள். 1000 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவ மன்னன் நந்திவர்மன், இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாகக் கோயிலின் கல்வெட்டு கூறுகிறது. இம்மலையை உய்யக்கொண்டான் பெருமலை என்று அழைக்கிறார்கள்.

188. அப்பரும் சம்பந்தரும்
லால்குடி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கிழக்கில் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சத்தியாகிரீஸ்வரர் ஆலயத்தில் ஓர் ஆச்சர்யம், இங்குள்ள விநாயகர் விக்ரகம். இந்த விநாயகர், தெற்கு நோக்கி தனது காதுகளால் கூர்ந்து கேட்டபடி அமர்ந்திருக்கும் வகையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.. அப்பர் மற்றும் சம்பந்தர் இந்தக் கோயிலைப் பற்றி பாடல்கள் பாடியிருக்கின்றனர்.
189. சிலந்தி கட்டிய கோயில்
திரு ஆனைக்காவில் உள்ள சம்புகேஸ்வரர் கோயிலில் ஆச்சர்யங்கள் அதிகம். இக்கோயிலின் கருவறையில் நீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருக்கிறது. முதல் பிறவியில் இறைவனை பூஜை செய்துவந்த சிலந்தி, அடுத்த பிறவியில் கோச்செங்கன் சோழனாகப் பிறந்து, இந்தக் கோயிலைக் கட்டியதாகக் கூறுகிறார்கள். இக்கோயில் மதில், திருநீறை கூலியாகக் கொடுத்துக் கட்டியதால், 'நீறிட்டான் மதில்' என்று அழைக்கப்படுகிறது.
190. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில்
பெருமாளுக்கு உரிய 108 கோயில்களில் முக்கியமான கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் திருக்கோயில். இதில் 7 பிராகாரங்கள் உள்ளன. 21 கோபுரங்கள் உள்ளன. கி.பி.14ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.17ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு அரச மரபுகளால் கட்டப்பட்டது. காவிரி ஆற்றுக்கும் கொள்ளிடத்துக்கும் இடையே அமைந்த ஆற்றுத் தீவில், திருச்சியிலிருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.
191. காவல் காக்கும் பெண் தெய்வம்
திருச்சிக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில், உறையூரில் உள்ளது செல்லாண்டி அம்மன் கோயில். ஊரின் காவல் தெய்வமாக அய்யனார், கருப்பசாமி போன்ற தெய்வங்கள்தான் இருக்கும். ஆனால், இங்கு காவல் தெய்வமாக செல்லாண்டியம்மன் இருப்பது இவ்வூரின் சிறப்பு. வைகாசி மாதத்தில் 6 நாள்கள் அம்பாளுக்கு விழா எடுக்கப்படுகிறது.

192. தானாகத் தோன்றிய ஈஸ்வரன்
திருச்சி - உறையூர் சாலையில் உள்ளது, தான்தோன்றீஸ்வரர் கோயில். பெரிய ராஜகோபுரம் இல்லாததால், அந்த அளவுக்கு கவனம் பெறவில்லை. ஆனாலும், காலத்தாலும் வரலாற்றாலும், சிறப்புப் பெற்ற கோயில். இவ்வூர், தான்தோன்றீஸ்வரம் என்று அழைக்கப்படுகிறது.
193. சூசையப்பர் கோயில்
திருச்சி அருகே உள்ள பொன்மலையில் உள்ளது, புனித சூசையப்பர் ஆலயம். கிறிஸ்தவ அறக்கட்டளையாகச் செயல்பட்டுவரும் இந்த ஆலயத்தின்கீழ் 12 சிறிய கிறிஸ்தவ ஆலயங்கள் செயல்படுகின்றன. மேலும், 8 பள்ளிகளும் சில ரெசிடென்ஷியல் பள்ளிகளும் செயல்படுகின்றன.
194. உலக ரட்சகர் ஆலயம்
திருச்சி மாவட்டம் காட்டூரில் உள்ளது, உலக ரட்சகர் ஆலயம். ஆன்மிக, கல்விப் பணிகளில் ஈடுபட்டுவரும் இக்கோயில் அறக்கட்டளையின் கீழ், 8 சிறிய கோயில்கள் உள்ளன. 5 பள்ளிகளும், சில ரெசிடென்ஷியல் பள்ளிகளும் இந்த ஆலயத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன.
195. அந்தோணியார் ஆலயம்
திருச்சி அருகே உள்ள இலுப்பூரில் உள்ளது, புனித பதுமை அந்தோணியார் ஆலயம். இந்த தேவாலயத்துடன் இணைந்து 11 சிறு கோயில்கள் உள்ளன. மேலும், இந்தத் தேவாலயத்தின் கட்டுப்பாட்டில் ஒரு நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது.
196. நத்தர் ஒலி தர்கா
திருச்சி மாநகரத்தின் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய வழிபாட்டுத்தலம், நத்தர் ஒலி தர்கா. தென்னிந்தியாவில் உள்ள இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் சிறப்பான கட்டடக் கலை அமைப்பைக் கொண்டது. திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரிக்குப் பின்னால் அமைந்திருக்கும் இந்த தர்கா, ஆற்காடு நவாப் சந்தா சாகிப்பால் கட்டப்பட்டது.
197. ஐந்து நிறங்களில் அமர்ந்த சாமி
திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறையூரில் உள்ளது, பஞ்சவர்ண நாதர் கோயில். திருமுத்தீஸ்வரம் என்றும், கோழியூர் என்றும் இவ்வூரை குறிப்பிடுகிறார்கள். இந்தக் கோயிலின் ஒவ்வொரு பூஜை காலத்திலும் ஒவ்வொரு வண்ணத்தில் இறைவன் காட்சிதருவதால், பஞ்சவர்ண நாதர் என்று அழைக்கப்படுகிறார்.
ஆளுமை மனிதர்கள்
198. சர்.சி.வி.ராமன்
இயற்பியலுக்கான நோபல் பரிசுபெற்ற சர்.சி.வி. ராமன் பிறந்த மாவட்டம், திருச்சி என்பது மாவட்டத்துக்குப் பெருமை. 1888 நவம்பர் 7ஆம் தேதி, திருவானைக்காவில் பிறந்தார். இயற்பியலில் இவர் கண்டுபிடித்த ராமன் விளைவுக்குதான் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு, பாரத ரத்னா விருதும், 1957ஆம் ஆண்டு, லெனின் அமைதிப் பரிசும் பெற்றார்.
199. எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வாலி
நவீன தமிழ் இலக்கியத்தில் தனக்கென புதுப்பாதை அமைத்துக்கொண்டவர். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பத்துக்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களையும், நாடகங்களையும் எழுதியுள்ளார். தமிழ் வார மாத இதழ்களில் சிந்தனையைத் தூண்டும் பல்வேறு தொடர்களை எழுதிவந்தார். பாரத் எலெக்ரானிக்ஸ் லிமிடெட்டில் எஞ்ஜினீயராகப் பணிபுரிந்த இவர்தான், இன்று நாம் பயன்படுத்தும் ‘ஓட்டு போடும் எந்திரத்தை’க் கண்டுபிடித்தார். இவர் பிறந்தது ஸ்ரீரங்கத்தில்.
வாலிபக் கவிஞர் என்று புகழப்பட்டவர் வாலி. திருச்சி ஸ்ரீரங்கம்தான் பிறந்த இடம். இயற்பெயர் ரங்கராஜன். 5 தலைமுறை நடிகர்களுக்கு பாடல் எழுதியவர். 5 தலைமுறை இசையமைப்பாளர்களோடு பணியாற்றியவர். 15,000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியிருக்கிறார். பத்மஸ்ரீ விருதைப் பெற்றவர்.

200. லால்குடி ஜெயராமன்
கர்னாடக வயலின் இசைக் கலைஞர், லால்குடி ஜெயராமன். 2001ஆம் ஆண்டு, இந்திய அரசின் பத்ம பூஷன் விருதுபெற்றவர். எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் டி.என்.கிருஷ்ணன் ஆகியோருடன் இணைந்து இசைக் கச்சேரிகள் நடத்தி புகழ்பெற்றவர். இவருடைய மகன் லால்குடி ஜி.ஜே.ஆர். கிருஷ்ணன், மகள் லால்குடி விஜயலட்சுமி ஆகியோரும் லால்குடி ஜெயராமன் வழிவந்த இசைக் கலைஞர்கள்.


உதவி: ஞா.சக்திவேல் முருகன், கே.ஆர்.ராஜமாணிக்கம்
படங்கள்: என்.ஜி.மணிகண்டன், தே.தீட்ஷித்
நன்றி: தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை