Published:Updated:

தேனியில் முதன்முதலாக நடக்கும் கண்ணகி கோயில் திருவிழா ஆலோசனைக்கூட்டம்!

தேனியில் முதன்முதலாக நடக்கும் கண்ணகி கோயில் திருவிழா ஆலோசனைக்கூட்டம்!
தேனியில் முதன்முதலாக நடக்கும் கண்ணகி கோயில் திருவிழா ஆலோசனைக்கூட்டம்!

தமிழக கேரள எல்லையில், தமிழகப் பகுதியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோயில். பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான இக்கோவிலில் சித்ரா பௌர்ணமி நாளில் திருவிழா கொண்டாடப்படும். இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்காக வருடந்தோறும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். இந்த நிலையில், திருவிழா ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் முதன்முறையாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் இன்று (16.3.2019) நடைபெற இருக்கிறது.

கண்ணகி கோயிலுக்கு, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள பளியன்குடி மலைப்பாதை வழியாக 6.6 கிலோமீட்டர் நடந்து செல்லலாம் அல்லது கேரளாவின் குமுளியில் இருந்து 12 கிலோமீட்டர் ஜீப் பாதையில் செல்லலாம். திருவிழாவுக்காக முன்னேற்பாடுகளை, தேனி மாவட்ட நிர்வாகமும், கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகமும் இணைந்து மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், திருவிழாவுக்காக ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் கேரளாவின் தேக்கடியில் நடைபெறும். இதைத் தேனியில் நடத்த வேண்டும் என பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் பல வருடங்களாக வலியுறுத்திவந்தனர்.

இந்த நிலையில்,  கம்பம் நகராட்சி அலுவலகத்தில் கண்ணகி கோவில் திருவிழா ஆலோசனைக்கூட்டம் நடைபெற இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு அடுத்த நாள் கண்ணகி கோயில் திருவிழா நடைபெற இருப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதி உட்பட அடிப்படை வசதிகள் குறித்து இந்த ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், தமிழக கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளதால், நாடாளுமன்றத் தேர்தலில் இரட்டை வாக்களிப்புகளைத் தவிர்க்கும் பொருட்டும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.