Published:Updated:

தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்!

விவசாயிகள், பொதுமக்கள், காலிக்குடங்களுடன், கண்ணில் கறுப்புத்துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்!
தலைவிரித்தாடும் தண்ணீர்ப் பிரச்னை... தேனியில் தேர்தலைப் புறக்கணிக்கும் 152 கிராமங்கள்!

வைகை ஆற்றில் தண்ணீர் வந்தால்தான் குடிக்கக் குடிநீர் என்ற நிலையில், வருடத்துக்கு எப்போதாவது வைகையில் வரும் தண்ணீரையே நம்பியிருக்க வேண்டிய சூழலில் சிக்கித் தவிக்கிறார்கள், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி கிராம மக்கள். தங்களுக்கும், தங்களது பாசனப் பரப்புக்கும் தேவையான தண்ணீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்பது ஆண்டிபட்டி கிராம மக்களின் பல ஆண்டு கோரிக்கையாகும். அதை ஏற்றுக்கொண்ட அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., திப்பரவு அணைத்திட்டம் என்ற குடிநீர்த் திட்டத்தை ஆண்டிபட்டி கிராம மக்களுக்காகக் கொண்டுவந்தார்.

திப்பரவு அணைத்திட்டம் :

வைகை அணையிலிருந்து கால்வாய்மூலம், ஆண்டிபட்டியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்குத் தண்ணீர் கொண்டுசெல்வதே திப்பரவு அணைத்திட்டம். இதை எம்.ஜி.ஆர் செயல்படுத்தித் தருவதாக உறுதியளித்தார். அத்தோடு சரி, அப்படியே கிடப்பில் போடப்பட்டது திப்பரவு அணைத்திட்டம். அத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியும், அதனால் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைப்பதும், அதை அரசியல் கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இவ்வளவு ஆண்டுக்காலமாக நடந்துவந்தது. ஏன் அரசும், அரசியல் கட்சிகளும் இந்தத் திட்டத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன. இந்தத் திட்டத்தில் ஏதும் பிரச்னை இருக்கிறதா என ஆய்வு செய்த விவசாயச் சங்கங்கள், திப்பரவு அணைத்திட்டத்துக்கு மாற்றாக முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குப் பைப் மூலமாகத் தண்ணீர் கொண்டுவரும் புதிய திட்டத்தைப் பற்றி அரசுக்குத் தெரியப்படுத்தினர்.

முல்லைபெரியாறு முதல் ஆண்டிபட்டி :

ஆண்டிபட்டி பகுதி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ் விவசாயச் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர். அதன்மூலம், திப்பரவு அணைத்திட்டத்துக்குப் பதிலாக முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தைப் பொறியாளர்களின் உதவியுடன் திட்டவரைவைத் தயார் செய்தனர். அத்திட்டத்தினைச் செயல்படுத்துமாறு மாநில அரசுக்கும், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கும் கோரிக்கை வைத்தனர். இருந்தும் எந்தப் பதிலும் இல்லை.

தேர்தல் அறிக்கையில் இல்லை :

முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்கு 47 கிலோமீட்டர் தூரம் பைப் அமைத்து தண்ணீர் கொண்டுவந்தால், ஆண்டிபட்டியில் உள்ள 30 ஊராட்சிகளைச் சேர்ந்த 152 கிராமங்கள் பயன்பெறும். சுமார் 40-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிறையும். அதன்மூலம், பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு பாசன வசதி பெறும் என அரசுக்கும், அரசியல் கட்சிக்கும் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், வரும் நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையில் அதை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனாலும், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அத்திட்டம் பற்றிய எந்த வாக்குறுதிகளும் இடம்பெறவில்லை. இதனால் கொதித்த கிராம மக்கள் அனைவரும், தேர்தலைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக முடிவெடுத்துள்ளனர்.

தேர்தல் புறக்கணிப்பு :

கடந்த 21-ம் தேதி தமிழ் விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்றது. கூட்டத்தில், முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்தி, நடைபெற இருக்கும் நடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை 152 கிராம மக்களும் புறக்கணிக்க இருப்பதாகவும், விவசாயிகளின் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றிடவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து, வீடுகள் தோறும் கறுப்புக்கொடி கட்டப்பட்டது. இந்த நிலையில், கே.காமாட்சிபுரத்தில் கூடிய விவசாயிகள், பொதுமக்கள், காலிக்குடங்களுடன், கண்ணில் கறுப்புத்துணி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளுக்கு நாள் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சமாதானம் செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் :

மக்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காத அரசியல் கட்சிகளும் வேண்டாம், இந்தத் தேர்தலும் வேண்டாம் என ஒட்டுமொத்தமாக முடிவெடுத்திருக்கும் விவசாயிகளை எப்படிச் சமாதானம் செய்வது என அரசியல் கட்களும், அதன் சார்பாக ஆண்டிபட்டியில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களும் தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான், தேனிக்குள் நுழையும்போதே, “முல்லைபெரியாறிலிருந்து ஆண்டிபட்டிக்கு தண்ணீர் கொண்டுவருவேன்” என்று வாக்குறுதியை அவிழ்த்துவிட்டார், ஆண்டிபட்டி தி.மு.க வேட்பாளர் மகாராஜன். இனி அனைத்துக் கட்சிகளும் இதே வாக்குறுதியைக் கொடுக்கத்தான் போகின்றன. ஆனால், நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.