Published:Updated:

`நீங்கள் அந்த சாலையில் போகலாம்!'- கையில் சீல் அடித்த நீதிபதி; அதிர்ச்சியில் காஷ்மீர் மக்கள்

`நீங்கள் அந்த சாலையில் போகலாம்!'- கையில் சீல் அடித்த நீதிபதி; அதிர்ச்சியில் காஷ்மீர் மக்கள்
`நீங்கள் அந்த சாலையில் போகலாம்!'- கையில் சீல் அடித்த நீதிபதி; அதிர்ச்சியில் காஷ்மீர் மக்கள்

காஷ்மீர் சாலையில் பயணிக்கும் மக்களின் கைகளில் முத்திரை குத்தப்பட்ட விவகாரம், கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை  தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ராணுவ வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் செல்லப்படுகின்றன. இந்தியாவில், நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவும் இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தாக்குதலைத் தவிர்ப்பதற்காக, ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல்  5 மணி வரை குறிப்பிட்ட சில சாலையில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. ஸ்ரீநகர், ஜவஹர் சுரங்கப்பாதை, பானிஹால் மற்றும் ரம்பன் வழியாக, பாரமுல்லாவிலிருந்து உதம்பூர் வரை இந்தத் தடை அமலுக்கு வந்தது. பொதுமக்கள், ஏதேனும் அவசரமாக இந்தச் சாலையில் பயணிக்க வேண்டும் என்றால், அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு, எதிர்க்கட்சிகள் தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, ‘ நேற்று வரை பாதுகாப்பாக இருக்கும் இந்த வழித்தடங்கள் ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் பாதுகாப்பு இல்லாமல் போய்விடுமா’ எனக் கேள்வி எழுப்பிருந்தார்.

முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி,  “எங்களின் முக்கிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் போக்குவரத்தை நீங்கள் எப்படிக் கட்டுப்படுத்தலாம்? மக்களை அவர்களின் சொந்த நிலத்தில் சிறைப்படுத்த நினைக்கும் செயல் இது” என கடுமையாகச் சாடியிருந்தார்.

இந்நிலையில்தான், உமர் அப்துல்லாவின் ட்விட்டர் பதிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தனது பதிவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவரின் கையில் உள்ளூர் நீதிபதியின் முத்திரை குத்தப்பட்டுள்ளது. அதில், ஸ்ரீநகர் சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

அந்தப் பதிவில், “ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அவர்களது நெடுஞ்சாலையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கையில் முத்திரை பதித்து எழுதப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது என எனக்குத் தெரியவில்லை. காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்க, மக்களின் கைகளில் முத்திரையா? இதுபோன்று மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆத்திரமூட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.