Published:Updated:

`திருநாவுக்கரசர் பாதுகாப்புக்கு ஒருவர்கூட வரல!'- போலீஸை வசைபாடிய தி.மு.க பிரமுகருக்கு பளார்விட்ட இன்ஸ்பெக்டர்

`திருநாவுக்கரசர் பாதுகாப்புக்கு ஒருவர்கூட வரல!'- போலீஸை வசைபாடிய தி.மு.க பிரமுகருக்கு பளார்விட்ட இன்ஸ்பெக்டர்
`திருநாவுக்கரசர் பாதுகாப்புக்கு ஒருவர்கூட வரல!'- போலீஸை வசைபாடிய தி.மு.க பிரமுகருக்கு பளார்விட்ட இன்ஸ்பெக்டர்

கறம்பக்குடியில் அ.ம.மு.க தேர்தல் பிரசாரத்தின்போது, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர், தி.மு.க பிரமுகர் கன்னத்தில் ஓங்கி அறைந்ததால், தி.மு.க பிரமுகர் காயமடைந்தார். இன்ஸ்பெக்டரைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
  


புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி பகுதிகளில் திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சாருபாலா தொண்டைமான் பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் காளியப்பன் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அ.ம.மு.க நிர்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அ.ம.முக-வுக்கு எப்படி வரவேற்பு இருக்கிறது. என்ன நடக்கிறது என மாற்றுக் கட்சி பிரமுகர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்தப் பகுதியில் உள்ள டீக்கடை ஒன்றில் கறம்பக்குடி முன்னாள் தி.மு.க நகர துணைச் செயலாளர் சுப்பையா (68) மற்றும் தி.மு.க நிர்வாகிகள் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, சுப்பையா அங்கிருந்தவர்களிடம் நேற்று காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் நம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். பாதுகாப்புக்கு ஒரு போலீஸார் கூட வரவில்லை. ஆனால், இன்று சாருபாலா தொண்டைமான் பிரசாரத்துக்கு  இத்தனை போலீஸார் பாதுகாப்புக்கு வந்துள்ளனர் என்று போலீஸாரை சுப்பையா வசைபாடியதாகக் கூறப்படுகிறது.

அருகே நின்று இதைக்கேட்ட இன்ஸ்பெக்டர் காளியப்பன் முதியவர் என்றும் பாராமல், சுப்பையா கன்னத்தில் சரமாரியாக அடித்துவிட்டார். இதனால், சுப்பையா மயக்கம் அடைந்தார். இதைப்பார்த்த தி.மு.க நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் போலீஸாரைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி செல்வராஜ், போராட்டக்காரர்களைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால், போராட்டம் கைவிடப்பட்டது. தி.மு.க பிரமுகரை இன்ஸ்பெக்டர் கன்னத்தில் அடித்ததற்கு மன்னிப்புக் கோரியதாகவும் கூறப்படுகிறது.