Published:Updated:

`12 மாவட்டங்கள் பாதிப்பு; 6700 விசைப்படகுகள் நிறுத்தம்!'- நள்ளிரவில் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

`12 மாவட்டங்கள் பாதிப்பு; 6700 விசைப்படகுகள் நிறுத்தம்!'- நள்ளிரவில் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்
`12 மாவட்டங்கள் பாதிப்பு; 6700 விசைப்படகுகள் நிறுத்தம்!'- நள்ளிரவில் தொடங்கியது மீன்பிடி தடைக்காலம்

மீன் இனப்பெருக்கத்துக்காக 61 நாள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான மீனவர்கள் வேலையிழந்துள்ளனர்.

3,000-த்துக்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் உருவாகும் கடல்பகுதி வங்காள விரிகுடாவின் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரினைப் பகுதிகளாகும். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதி தொடங்கி கன்னியாகுமரியின் நீரோடி கிராமம் வரை உள்ள இந்தக் கடல்பகுதியில் ஆண்டுதோறும் இடைவிடாது மீன்பிடி தொழில் நடந்து வந்தது. இதனால் கடந்த பல வருடங்களாக இப்பகுதியில் உள்ள கடல்வளம் குன்றத் தொடங்கியது. இதன் விளைவாகக் கடல் வாழ் உயிரினங்களின் உருவாக்கம் குறைந்து போனது. இதே நிலை நீடித்தால் ஒரு கட்டத்தில் மன்னார் வளைகுடா பகுதியில் மீன்வளம் அறவே அழிந்து போகும் நிலை உருவாகும் என ஆராய்ச்சியாளர்களால் எச்சரிக்கை செய்யப்பட்டது. இதைத் தடுக்க மீன் உற்பத்திக் காலங்களில் கரையிலிருந்து 3 கடல் மைல்களுக்கு அப்பால் மீன்பிடிக்கச் செல்லுவதற்குத் தடை ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, தமிழக அரசு கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 45 நாள்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்க நடவடிக்கை எடுத்தது. இதன்படி பழவேற்காட்டிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி வரையிலான 1076 மைல் தூர கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 வரையிலான 45 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் தடை நாள்களின் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளாக 45 நாளில் இருந்து 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது.

இந்தக் காலங்களில் கரையிலிருந்து 3 கடல்மைல் தூரத்துக்கு அப்பால் மீன்பிடிப்பில் ஈடுபடும் இழுவைப் படகுகள் மற்றும் விசைப்படகுகள் மீன் பிடிக்கச் செல்லக்கூடாது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்ட பகுதிகளில் உள்ள சுமார் 6700 விசைப்படகுகள் மீன்பிடிக்க முடியாது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், ஏர்வாடி, தொண்டி ஆகிய பகுதிகளில் மட்டும் 1850 விசைப்படகுகள் மீன்பிடி தடை தொடங்கியதால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைக்காலங்களில் மீனவர்களுக்கு உதவித் தொகையாக வழங்கப்பட்டு வந்த 4,000 தற்போது ரூ.5,000-மாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு தொடங்கி ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. ஆண்டுதோறும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  தடைக்காலம் 61 நாள் மட்டும்தான். ஆனால், இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறல்கள், இயற்கை இடர்பாடுகள், போதிய மீன் பாடு இல்லாதல், வேலை நிறுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதே 70 முதல் 90 நாள்களாகச் சுருங்கிவிட்டது. இதனால் மீன்பிடி தொழிலை நம்பியிருக்கும் பல ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் பிடியில் வாடும் நிலையும் அதிகரித்து வருகிறது என்பதுதான் உண்மை.