Published:Updated:

`எங்களைத் தாக்காதீர்கள்!'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

எம்.திலீபன்
`எங்களைத் தாக்காதீர்கள்!'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
`எங்களைத் தாக்காதீர்கள்!'- பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

"உங்களது விருப்பு வெறுப்பு மற்றும் சாதி உணர்வுக்காக எங்களைத் தாக்காதீர்கள். நாங்கள் தாக்கப்பட்டால், எங்களை கேட்பதற்கு இந்த சமூகத்தில் யாருமில்லை" என்று பொன்பரப்பியில் செய்தியாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து வாயில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில், வாக்குப்பதிவு அன்று இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு தரப்பினரின் 20-க்கும் மேற்பட்ட  வீடுகளின் ஓடுகள் சேதப்படுத்தப்பட்டன. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் கலைவாணனை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கொலை வெறித் தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு கண் பாதிக்கப்பட்ட கலைவாணன் தீவிர சிகிச்சைப் பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 இந்நிலையில், செய்தியாளரைத் தாக்கியவர்களைக் கைதுசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, அரியலூர் மாவட்ட       செய்தியாளர்கள் சார்பில், அண்ணா சிலை அருகில் வாயில் கறுப்புத்துணி கட்டி நூதன போராட்டம் நடைபெற்றது.   அப்போது, "செய்தியாளர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய, மாவட்ட காவல் துறை மற்றும்   மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வகையான சம்பவம் மீண்டும் நடைபெறாமல் தடுக்க உரிய   பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என முழக்கம் எழுப்பப்பட்டது. இதில், அரியலூர் மாவட்டத்தில்   உள்ள தொலைக்காட்சி மற்றும் நாளிதழ் செய்தியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

 இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜராஜன் பேசுகையில், "தமிழகம் முழுவதும் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவது தொடர் கதையாகிக்கொண்டிருக்கிறது. பொன்பரப்பியில் நடந்த கலவரத்தில், அனைத்துக் கட்சியினர் மற்றும் சமூகப் போராளிகள் எல்லோரும் வரிந்துகட்டிக்கொண்டு அறிக்கை மற்றும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனம் செய்யும் நீங்கள்,

அரியலூரில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்டு கண் எழும்பு ஃப்ராக்ஸராகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஒரு பத்திரிகையாளன் தாக்கப்பட்டு கண்பார்வை மீண்டும் வருமா வராதா என்று தெரியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எந்த அரசியல் கட்சிகயோ, சமூகப் போராளியோ குரல் கொடுத்திருக்கிறார்களா.  பத்திரிகையாளராக இருப்பது எங்கள் தவறா? உங்களது கட்சி வளர வேண்டும் என்றால் நாங்கள் தேவை. நீங்கள் எங்கு சென்றாலும் உங்களைப் பின்தொடர்ந்து உங்களைப் புகழ்ந்து செய்தி போட வேண்டும். ஆனால், எங்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் நீங்கள் வாய் திறக்க மாட்டீர்கள்.

ஒரு பத்திரிகையாளனை அவனது வீட்டில் வந்து பாருங்கள். அப்போது தெரியும் அவனின் நிலைமை. இப்போது பாதிப்படைந்த நிருபர் கலைவாணன், கையில் பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவருகிறார். தயவு செய்து சொல்கிறோம், உங்களது விருப்பு வெறுப்பு மற்றும் சாதி உணர்வுக்காக எங்களைத் தாக்காதீர்கள். நாங்கள் தாக்கப்பட்டால்,கேட்பதற்குக்கூட இந்த சமூகத்தில் யாருமில்லை" என்று ஆதங்கத்தோடு முடித்தார்.