Published:Updated:

`என் தாய் குணமாவாரென்று எனது இதயம் சொன்னது!' - 28 வருடங்களுக்குப் பின் தாயின் குரலைக் கேட்ட ஓமர்

ராம் பிரசாத்
`என் தாய் குணமாவாரென்று எனது இதயம் சொன்னது!' - 28 வருடங்களுக்குப் பின் தாயின் குரலைக் கேட்ட ஓமர்
`என் தாய் குணமாவாரென்று எனது இதயம் சொன்னது!' - 28 வருடங்களுக்குப் பின் தாயின் குரலைக் கேட்ட ஓமர்

''அம்மா நீங்க என்னை நேசிக்கிறீர்களா... ஆம். ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த ஓமருக்கும் அவரது தாயுக்கும் இடையே நடந்த இந்த உரையாடல்களை எளிதில் கடந்துவிட முடியாது. 4 வயதில் தான் கேட்ட தாயின் குரலை 28 வருடங்கள் கழித்து இப்போதுதான் கேட்கிறார் ஓமர். 1991-ம் ஆண்டு, ஐக்கிய அமீரகத்தைச் சேர்ந்த முனிரா (Munira Abdulla), தனது 4 வயது மகனுடன் செல்லும்போது விபத்தில் சிக்கினார். முனிராவுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அது, அவரை கோமா நிலைக்குத் தள்ளியது. ஓமர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட முனிராவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. சிகிச்சைக்குப் பணமில்லாமல், அவரது குடும்பம் தவித்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட ஐக்கிய அமீரகத்தின் இளவரசர், முனிராவுக்கான மருத்துவச் செலவுகளை ஏற்றார். ஜெர்மன் மருத்துவமனைகளில், கடந்த 28 வருடங்களாகத் தனது நாள்களை நகர்த்திவந்துள்ளார் முனிரா. எப்படியும் தனது தாய் கோமாவில் இருந்து திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தார் ஓமர். அந்த 4 வயது சிறுவனுக்கு, தற்போது 32 வயதாகிவிட்டது.  

கடந்த வாரம் நாளிதழ்களில் தலைப்புச் செய்தியானார் ஓமர். 28 ஆண்டுகளாக கோமாவில் இருந்த முனிரா, மகனின்  குரலைக் கேட்டு கண்விழித்தார். ஓமரும் அவரது தாயும் உரையாடும் வீடியோவை ஸ்கை நியூஸ் அரேபியே என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஜெர்மன் மருத்துவமனையில், தனது தாய் இருந்த வார்டுக்குச் செல்லும் ஓமர், அவரது படுக்கை அருகே மண்டியிட்டு அமர்கிறார். ஓமரின் வருகையை அடுத்து, அவரை நோக்குகிறார் முனிரா. ''அம்மா என்னை நேசிக்கிறீர்களா'' என ஓமர் கேட்க. ''ஆம்'' என்கிறார் அவரது தாய். ''நான் உங்களை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்'' என்கிறார், புன்னகைக்கிறார். ''நாளை எந்த ஆடையை அணிய விரும்புகிறீர்கள்... சிவப்பு நிறமா அல்லது பச்சை நிறமா'' என்று கேட்க. ''பச்சை'' என அவர் கூறுகிறார். ''நாம் இருவரும்                                 குர்ஆன் வாசிக்கலாமா...'' என்கிறார். தாயும் மகனும் கட்டியணைத்து தங்களது அன்பைப் பரிமாறிக்கொண்டனர்.

ஓமர் பேசுகையில், “ இதுதான் நம்பிக்கை. நான் ஒருபோதும் அதனை இழக்கவில்லை. உங்கள் அன்புக்குரியவர்கள் மீதான உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் இழக்காதீர்கள். நம்பிக்கைக்கு எனது தாய் வாழும் உதாரணம். இளவரசரின் உதவி இல்லை என்றால், எனது தாய் மீண்டும் பேசியிருக்க மாட்டார்.  மருத்துவர்கள் உட்பட நிறையப் பேர் ஏதேதோ சொன்னார்கள். எனது தாய் குணமடைவார் என்று எனது இதயம் சொன்னது. நீங்கள் நேசிக்கும் நபர்கள் நோய்வாய்ப்பட்டால், அவர்கள்மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள்”என்றார்.