Published:Updated:

`அந்த நிகழ்ச்சியை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது!' - கண்கலங்கிய பெண் காவலர்

எஸ்.மகேஷ்
`அந்த நிகழ்ச்சியை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது!' - கண்கலங்கிய பெண் காவலர்
`அந்த நிகழ்ச்சியை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது!' - கண்கலங்கிய பெண் காவலர்

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலருக்கு, இன்ஸ்பெக்டர் தலைமையில் சக காவலர்கள் இணைந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். 

செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றும் பெண் காவலர் இலக்கியாவுக்கு, இன்ஸ்பெக்டர் இளங்கோவன் தலைமையில் வளைகாப்பு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில், இலக்கியாவின் உறவினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. தாலுகா காவல் நிலையம், டவுன் காவல் நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் காவலர்கள் மட்டுமே பங்கேற்று, விழாவை சிறப்பாக நடத்தினர். விழாவில், இன்ஸ்பெக்டர் இளங்கோவனின் காலில் பெண் காவலர் இலக்கியா விழுந்து ஆசிபெற்றார். அப்போது, அவரின் கண்கள் குளமாகின.  பெண் காவலருக்கு சக காவலர்களே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்திய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 பெண் காவலர் இலக்கியவிடம் பேசினோம். `` என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகில் உள்ள முட்டியாம் பூண்டி கிராமம். அப்பா சக்திவேல், விவசாயம் செய்துவருகிறார். நான், பி.சி.ஏ படித்துவிட்டு 2017-ம் ஆண்டு  காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். ஆயுதப்படையில் பணியாற்றிவிட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தேன். விழுப்புரத்தைச் சேர்ந்த ராசு என்பவருக்கும் எனக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. அவர், விழுப்புரத்தில் பணியாற்றுகிறார். நான் 9 மாத கர்ப்பிணியாக உள்ளேன். செங்கல்பட்டு பகுதியில் தங்கியிருந்து பணியாற்றிவருகிறேன்.

இந்தச் சமயத்தில், என் வீட்டுக்காரரின் அண்ணன் திடீரென இறந்துவிட்டார். இதனால், எனக்கு வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை. இந்தத் தகவல் இன்ஸ்பெக்டர் இளங்கோவனுக்குத் தெரியவந்ததும், காவல் நிலையத்தில் பணியாற்றுபவர்களிடம் அவர் கலந்து ஆலோசித்தார். அதன்பிறகு, எனக்கு சக காவலர்கள் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தத் திட்டமிட்டனர். அதன்படி நேற்று மதியம், சிறப்பாக எனக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என்னுடன் பணியாற்றும் காவலர்களே எனக்கு அனைத்து சடங்குகளையும் செய்தனர். அந்த நிகழ்ச்சியை என்னால் ஒருநாளும் மறக்க முடியாது. அதுதொடர்பாக செய்திகளும் வெளிவந்தன. ஒரு தினசரி பத்திரிகையில், குடும்பப் பிரச்னை காரணமாக எனக்கு காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நடத்திவைக்கப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அது தவறான தகவல். எனக்கும் என் கணவர் வீட்டினருக்கும் எந்தவித கருத்துவேறுபாடும் கிடையாது. தவறான செய்தியால் நான் கடும் மனவேதனையடைந்துள்ளேன். நாங்கள் சந்தோஷமாக இருக்கும் நேரத்தில், இந்தச் செய்தி என் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது. 

என் கணவரின் அண்ணன் சமீபத்தில் இறந்துவிட்டதால்தான், கணவர் வீட்டினர் யாரும் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இந்தத் தகவலை கேள்விபட்டதும், இன்ஸ்பெக்டர் இளங்கோவனும் சக காவலர்களும் சேர்ந்து வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்த ஆசைப்பட்டனர். தவறான செய்தியால் வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. காலையிலிருந்து போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவைத்துள்ளேன். நான் யாரிடமும் அப்படிச் சொல்லவில்லை. இன்ஸ்பெக்டர் சார்கூட வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வீட்டில் இருந்து யாரும் வரவில்லையா என்று கேட்டார். அவரிடம்கூட விவரத்தைத் தெரிவித்தேன்" என்றார். 

இன்ஸ்பெக்டர் இளங்கோவனிடம் பேசினோம். ``பெண் காவலர் இலக்கியா, 7 மாதங்களாக செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் பணியாற்றிவருகிறார். வீட்டில் நடந்த சோக சம்பவத்தால், அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தவில்லை என்று தகவல் எனக்கு தெரியவந்தது. உடனே நாங்கள் எல்லோரும் சேர்ந்து இலக்கியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினோம். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இலக்கியாவுக்கு காவல் நிலையமே, குடும்பம். இதனால், அந்தக் குடும்பம் சேர்ந்து வளைகாப்பை நடத்தி முடித்துவிட்டோம். இலக்கியாவின் குடும்பத்தில் நடந்த சோக நிகழ்வால் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு யாரும் கலந்துகொள்ளவில்லை" என்றார். 

செங்கல்பட்டு தாலுகா போலீஸார் கூறுகையில், ``புடவை, வளையல், விதவிதமான சாதம், மண்டபம் என அனைத்து ஏற்பாடுகளையும் செய்தோம். பெண் காவலர் இலக்கியாவுக்கு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வளையல் அணிவித்தார். இலக்கியாவுக்கு அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தார். வளைகாப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது'' என்றனர்.