Published:Updated:

`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 

எஸ்.மகேஷ்
`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 
`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 
`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 

காதல்படுத்தும்பாடு என்று ஒருவரியில் இந்தச் சம்பவத்தைச் சொல்லிவிடலாம். ஆனால், காதலித்த பெண், திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்றபிறகும் அவருடன் வாழ வேண்டும் என்று காதலன் செல்போனில் ஏறி நடத்திய போராட்டத்தால் முதல் கணவரும் காவல்துறையினரும் அதிர்ச்சியடைந்தனர். 

சென்னையை அடுத்த திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா (பெயர் மாற்றம்). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் கவிதா, குழந்தைகளுடன் சில நாள்களுக்கு முன் மாயமாகினார். மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்துதரும்படி அவரின் கணவர் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் மாயமான மனைவி மற்றும் குழந்தைகளை கண்டுபிடித்து கணவரிடம் ஒப்படைத்தனர். அப்போது கணவருடன் வாழ விரும்பவில்லை, காதலனுடன் வாழ விரும்புவதாக கவிதா கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கு பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்தது. இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி விசாரணை நடத்தினார். காவல் நிலையத்தில் முரளி, கவிதா மற்றும் கவிதாவின் கணவர். கவிதாவின் அப்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆரம்பத்தில் முரளியுடன் செல்ல விரும்புவதாக கவிதா கூறினார். அப்போது சட்டப்படி அப்படிச் செல்ல முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர். 

`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``திருவள்ளூர் அருகே உள்ள பள்ளியில் படிக்கும் போது கவிதாவுக்கும் ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த முரளிக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்தக் காதல் விவகாரம் கவிதா வீட்டுக்குத் தெரிந்ததும் அவருக்கு வேறுஒருவருடன் திருமணம் செய்துவைத்தனர். அதன்பிறகு கணவருடன் கவிதா சில ஆண்டுகள் வாழ்ந்துவந்தார். இரண்டு குழந்தைகளுக்கும் தாயானார். 

இந்தநிலையில்தான் முரளியை கவிதா மீண்டும் சந்தித்துள்ளார். காதலர்கள் இருவரும் சந்தித்தபோது அவர்களுக்குள் மீண்டும் காதல் துளிர்த்தது. கவிதாவுக்காக முரளி திருமணம் செய்யாமல் காத்திருந்தார். இதையடுத்து இருவரும் போன் நம்பர்களை பகிர்ந்து  கொண்டனர். இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பதை கவிதா மறந்தார். அப்போதுதான் முதல் கணவரை விட்டுவிட்டு குழந்தைகளுடன் கவிதா முரளியுடன் சென்றுள்ளார். 

கவிதாவையும் அவரின் கணவர் மற்றும் முரளியையும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வரவழைத்தோம். கவிதாவுக்கு நாங்கள் புத்திமதி கூறினோம். அதோடு கவிதாவிடம் கணவருடன் செல்லலாம், இரண்டாவது பெற்றோருடன் செல்லலாம். மூன்றாவது காப்பகத்துக்குச் செல்லலாம் என மூன்று சாய்ஸ் கொடுத்தோம். ஆனால் அவர், பிடிவாதமாக இருந்தார். கவுன்சலிங்க்குப் பிறகு பெற்றோருடன் செல்ல விரும்புவதாக கவிதா கூறினார். 

`இப்படியும் ஒரு காதல் போராட்டம்' - அதிர்ச்சியில் முதல் கணவர் 

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஒரு கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், முரளியுடன் கவிதாவைச் சேர்த்து வைக்குமாறு எங்களிடம் கூறினார். அதற்கு நாங்கள் சட்டத்தில் இடமில்லை என்று கூறினோம். கவிதாவுடன் வாழவில்லை என்றால் முரளி செத்துவிடுவான் என்று அந்த வழக்கறிஞர் கூறினார். உடனே முரளிக்கும் நாங்கள் தேவையான கவுன்சலிங் அளிக்கிறோம் என்று வழக்கறிஞரிடம் கூறினோம். இந்தச் சமயத்தில் காவல் நிலையத்துக்குப் பின்பக்கத்தில் உள்ள செல்போன் டவரில் முரளி ஏறினார். மேலிருந்தபடியே கவிதாவுடன் தன்னைச் சேர்த்துவைக்கவில்லை என்றால் குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். 

இதையடுத்து முரளியிடம் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். அப்போதுதான் இன்ஸ்பெக்டர் சமயோஜிதமாக ஒரு நடவடிக்கை எடுத்தார். கவிதாவுக்கு போன் மூலம் முரளி செல்போனில் ஏறிய தகவலைத் தெரிவித்தார். உடனே அவரும் அங்கு வந்தார். முரளியைப் பார்த்த கவிதா டேய், எதற்கடா இப்படிச் செய்கிறாய், கீழே இறங்கி வா என்று கூறினார். அதன்பிறகு மனமாறிய முரளி, கீழே இறங்கி வந்தார். இதையடுத்து முரளியை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அங்கு அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முரளி, கூட்டுறவுத் துறையில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிவருகிறார். கவிதா, பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு வீட்டிலேயே இருக்கிறார். கவிதாவின் கணவர், டிரைவராகப் பணியாற்றுகிறார். கவிதாவுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்" 
என்றனர். 

 நேற்றிரவு நடந்த இந்தச் சம்பவத்தில் முரளி, செல்போன் டவரிலிருந்து குதித்து தற்கொலை செய்யும் மனநிலையிலேயே இருந்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஃப்ரான்வின் டேனி துரிதமாகச் செயல்பட்டு அவரைக் காப்பாற்றியுள்ளார். காதலன் சிறைக்குச் சென்றதைத் தடுக்க முடியாத கவிதா கண்ணீர்விட்டு கதறி அழுதார்.