Published:Updated:

`சாப்பிடும்போதெல்லாம் அதுதான் ஞாபகம் வருகிறது!' - மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை

`சாப்பிடும்போதெல்லாம் அதுதான் ஞாபகம் வருகிறது!' - மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை
`சாப்பிடும்போதெல்லாம் அதுதான் ஞாபகம் வருகிறது!' - மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை

திருவாரூர் மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்தவரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சிலர் மலத்தை வாயில் திணித்து சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஒருவரை கைது செய்துள்ள காவல்துறை, மற்ற இருவரைத் தேடி வருகிறது.

`சாப்பிடும்போதெல்லாம் அதுதான் ஞாபகம் வருகிறது!' - மன்னார்குடி கொல்லிமலைக்கு நடந்த கொடுமை

மதுரை வந்திருந்த பாதிக்கப்பட்ட கொல்லிமலை நம்மிடம் நடந்த சம்பவங்களை விவரித்தார்.``நான் மன்னார்குடி வட்டம் திருவண்டுத்துறையில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். சொந்தமாக செங்கல் சூளை நடத்தி வருகிறேன். கடந்த மாதம் 28-ம் தேதி, விடியற்காலையில் செங்கல் சூளையிலிருந்து டூவீலரில் திரும்பிக் கொண்டிருந்தபோது புன்னியூர் மண்டபத்தடி அருகே முத்து என்ற சக்திவேல் கட்டையால் அடித்து என்னை கீழே விழ வைத்தார். அவருடைய உறவினர்கள் ராஜேஷ், ராஜ்குமார் ஆகியோர் என் கையைப் பின்புறமாகக் கட்டி கன்னத்திலும் நெஞ்சிலும் மாறி மாறி உதைத்தார்கள். கட்டை, கற்களை வைத்தும் தாக்கினார்கள்.

`என்னை விட்டுடுங்க' என்று கெஞ்சியும் தாக்குதல் நடத்தினார்கள். என் சாதியைப் பற்றி இழிவாகப் பேசித் தாக்கினார்கள். அதற்குப்பின் ஒரு குச்சியில் மலத்தை எடுத்து வந்து என் வாய்க்குள் திணித்தார்கள். அருவருப்பு ஏற்பட்டு குமட்டியது. அதோடு மூவரும் என் வாயில் சிறுநீரைக் கழித்தார்கள். அப்போது பக்கிரிசாமி என்பவர் அந்தப்பக்கம் வந்ததால், மூவரும் ஓடிவிட்டனர்.

அதற்குப் பிறகு என் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிந்து ஊர்க்காரர்கள் வந்து, கோட்டூர் போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்று புகார் கொடுத்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டம் நடத்தியபின் கடந்த மாதம் 27-ம் தேதி மாலை 5 மணிக்கு எப்.ஐ.ஆர் போட்டார்கள். அதன்பின், திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தேன். எனக்கு நடந்தது யாருக்கும் நடக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட மூன்று பேர் மீதும் ஏகப்பட்ட வழக்குகள் உள்ளன. மூவரையும் மக்களே பிடித்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். ஆனால், சக்திவேலை மட்டும் கைது செய்துவிட்டு இருவரைத் தப்பிக்க விட்டனர். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லை. இப்போது என்னால் சாப்பிடும்போதெல்லாம் மலத்தை வாயில் திணித்ததுதான் நினைவுக்கு வந்து குமட்டுகிறது" என்று கண்ணீர் சிந்தினார். இப்பிரச்னையை மதுரை எவிடென்ஸ் அமைப்பு விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவியைச் செய்து வருகிறது.

இதுபற்றி பேசிய திருவாரூர் மாவட்ட எஸ்.பி. துரை, ``விடியற்காலை 2.30 மணிக்கு இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதற்கு முன்னர் இரு தரப்பினருக்கும் மணல் அடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே, முன்விரோதம் காரணமாக இருக்கலாம் எனவும் விசாரித்து வருகிறோம். ஏனெனில் கொல்லிமலையே, `எங்களுக்கும் அவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு முன்னர் தகராறு ஏற்பட்டுள்ளது' எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே பல்வேறு கோணங்களில் விசாரணையைத் துரிதப்படுத்தியுள்ளோம்.

இதுபோன்ற சம்பவங்கள் திருவாரூரை பொறுத்தவரை நடைபெற்றது இல்லை. சாதிரீதியான வன்கொடுமைகள் மலம்,சிறுநீர் போன்றவற்றை அருந்தச் சொல்லி வற்புறுத்தல்கள் செய்ததில்லை. தற்போது, சாதிய ரீதியான வன்கொடுமைகள் யாரேனும் நிகழ்த்தியது உறுதியானால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தேவைப்பட்டால் அவர்கள் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள்'' என எச்சரித்தார்.