Published:Updated:

பொன்னமராவதி வீடியோ விவகாரம் - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

மணிமாறன்.இரா
பொன்னமராவதி  வீடியோ விவகாரம் - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது
பொன்னமராவதி வீடியோ விவகாரம் - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

பொன்னமராவதியில், ஒரு சமூகத்தினரை மற்றொரு சமூகத்தினர் தவறாகச் சித்திரித்து வாட்ஸ் அப்பில் அவதூறு வீடியோ வெளியிட்ட விவகாரத்தில், 4 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்  கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், வீடியோவில் பேசிய மேலும் ஒரு முக்கிய நபரும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பொன்னமராவதி  வீடியோ விவகாரம் - மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது

ஒரு சமூகத்தினரை, மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தவறாகச் சித்திரிக்கும் வகையில் பேசி, வாட்ஸ் அப்பில் தீயாகப் பரவிய வீடியோவால், பொன்னமராவதியில் பெரும் வன்முறை ஏற்பட்டது. போலீஸார் விசாரணையில், சிங்கப்பூரிலிருந்து வீடியோவினைப் பதிவுசெய்து வெளியிட்டதாக, பட்டுக்கோட்டை அருகே கரிசல்காட்டைச் சேர்ந்த செல்வக்குமார் (34) சிங்கப்பூரிலிருந்து சென்னை வரவழைக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டார். செல்வக்குமார் கொடுத்த தகவலின் பேரில், பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வசந்த் (எ)வசந்தகுமார் (30), புதுக்கோட்டை வாராப்பூர் அருகே நெருஞ்சிப்பட்டியைச் சேர்ந்த சத்தியராஜ் (30), புதுக்கோட்டை அருகே மோசக்குடியைச் சேர்ந்த ரெங்கையா (45) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.

பொது அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பிற்குக் குந்தமாகச் செயல்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, 4 பேரும் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில்தான் வீடியோவில் பேசிய மேலும் ஒரு முக்கிய நபரான  புதுக்கோட்டை மாவட்டம் சித்தன்னவாசலைச் சேர்ந்த முருகேசன் (32) நேற்று (மே 9 -ம் தேதி) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பரிந்துரையின்படி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவதூறு வீடியோவில் ஒருபுறம் சத்தியராஜும் மறுபுறம் முருகேசனும் பேசியுள்ளனர். முருகேசன், சிங்கப்பூரிலிருந்து திருச்சி ஏர்ப்போர்ட் வரவழைக்கப்பட்டு, கடந்த 30 -ம் தேதியே போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், போலீஸார் தொடர் விசாரணையில், ஒரு வாரத்திற்குப் பிறகு    குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


 

Vikatan