Corona Live Updates: காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

15.7.2020 : கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணிக்கு இன்று காலை கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மற்றொரு ஆட்சியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் ஒரு லட்சத்தைக் கடந்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை!
தமிழகத்தில் இன்று மட்டும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,310 ஆக உயர்ந்தது. கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 68 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 2167 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மேலும் 1,291 பேருக்குத் தொற்று!
சென்னையில் மட்டும் இன்று 1,291 பேருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா நிலவரம்:
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,36,181 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 29,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 582 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,309 ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், தொற்றுப் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,92,032 ஆகவும் உயர்ந்துள்ளது. 3,19,840 பேர் இந்தியாவில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.