Published:Updated:

புதுக்கோட்டையில் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நபர்; காலில் பாய்ந்த குண்டு - போராடி அகற்றிய அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டையில் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நபர்; காலில் பாய்ந்த குண்டு - போராடி அகற்றிய அரசு மருத்துவர்கள்
புதுக்கோட்டையில் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நபர்; காலில் பாய்ந்த குண்டு - போராடி அகற்றிய அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டை அருகே, நண்பர்கள் இருவருக்கிடையே நடைபெற்ற தகராற்றில், துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டதில் ஒருவருக்கு காலில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. காலில் பாய்ந்த குண்டுகளை 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் அகற்றி சாதனை படைத்தனர்.

புதுக்கோட்டையில் நண்பரை துப்பாக்கியால் சுட்ட நபர்; காலில் பாய்ந்த குண்டு - போராடி அகற்றிய அரசு மருத்துவர்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, திருக்கட்டளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (46). இவருக்கும் இவரது நண்பர் ஒருவருக்கும் இடையே நடைபெற்ற தகராற்றில், அந்த நண்பர் ஒற்றைக்குழல் துப்பாக்கியை எடுத்து ராஜேந்திரன் காலில் சுட்டுள்ளார். இதில், பலத்த காயமடைந்த ராஜேந்திரன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இடது காலில் பாய்ந்த குண்டுகள், தசையை ஊடுருவி கால் எலும்புக்குப் பக்கத்தில் இருந்தது தெரியவந்துள்ளது. உயிருக்கு ஆபத்து என்ற நிலையில், உடனே ஸ்கேன் பரிசோதனை செய்த மருத்துவர்கள், நவீன கருவிகொண்டு அகற்ற முடிவுசெய்தனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, ``ராஜேந்திரன் கடந்த 12 -ம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ராஜேந்திரனுக்கு முதலில் உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. காலில் 2 துப்பாக்கிக் குண்டுகள் இருப்பது தெரியவந்தது. குறிப்பாக, துப்பாக்கிக் குண்டுகள் உடல் திசுக்களின் வழியே நகர்ந்துகொண்டே இருக்கும் என்பதால், குண்டுகளை அகற்றுவது என்பது எளிதான காரியம் இல்லை. மிகவும் சவாலானது. தற்போது, துப்பாக்கிக் குண்டுகளை அகற்றுவதற்கு ஏற்ப அரசு மருத்துவமனையில் புதிய அதிநவீன கருவிகள் உள்ளன.  ராஜேந்திரனுக்கு  யூஆர்ம் என்னும் கருவி பயன்படுத்தப்பட்டது. இது, உடனுக்குடன் எக்ஸ்ரே எடுப்பதுபோல் கண்காணிக்கும். துப்பாக்கிக்குண்டு நகர்வதை இந்தக் கருவிமூலம் கண்டறிய முடியும். மேலும், இந்தக் கருவி எலும்புகளை இணைப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. சுமார் ஐந்தரை மணி நேர  போராட்டத்திற்குப் பிறகு, ராஜேந்திரன் கால்களில் இருந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்றினோம்” என்றனர் 
 துப்பாக்கிக் குண்டின் இயக்கத்தைக் கண்டறிந்து அகற்றிய எலும்பு மருத்துவர்கள் ராஜ்மோகன், சங்கர் மற்றும் மயக்க மருத்துவர் ரவிக்குமார் ஆகியோரை மருத்துக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் பாராட்டினார்.

இதுகுறித்து போலீஸாரிடம் கேட்டபோது,  'திருக்கட்டளையைச் சேர்ந்த ராஜேந்திரன், அவரது நண்பர் பாஸ்கர் இருவருக்கும் இடையே நீண்ட காலமாக சொத்துப் பிரச்னை இருந்துவந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 11 -ம் தேதி, பாஸ்கர் துப்பாக்கியால் ராஜேந்திரனை சுட்டுள்ளார். காலில் பட்ட குண்டுகள் தசைக்கு உள்ளே சென்றது. உடனே, ராஜேந்திரன் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார். பாஸ்கர் கைதுசெய்யப்பட்டுள்ளார். லைசென்ஸ் பெற்று துப்பாக்கி பயன்படுத்திவருகிறாரா... ராஜேந்திரனை துப்பாக்கியால் சுட்டது ஏன்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்" என்றார். ராஜேந்திரன் காலிலிருந்து துப்பாக்கிக் குண்டை எடுக்கும் வரையிலும் போலீஸார் ரகசியம் காத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.