
‘மது’ கடவுளின் தேசம் எனக் கூறப்படும் கேரளாவில் உணவு திருடியதாக கூறி அடித்துக்கொல்லப்பட்ட பழங்குடியின இளைஞர். பாலக்காடு பகுதியில் இருந்த வனத்தில் உள்ள குகைகளில் அவர் வசித்து வந்துள்ளார். வனத்தில் இருக்கும் அவர் இரவில் வந்து உணவுகளைத் திருடுவதாகக் கூறி அகாலியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் மதுவை கட்டிவைத்து அடிக்கும்காட்சி சமூகவலைதளத்தில் பரவியது. இந்தத் தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நடந்தது 2018 பிப்ரவரி 22-ம் தேதி.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 16 பேரைக் கைது செய்தனர். பிப்ரவரி 23-ம் தேதி உடற்கூறு ஆய்வு செய்வதற்காக மதுவின் உடல் அகாலியில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. பிணவறையில் சகோதரன் சடலமாக இருக்க கனத்த இதயத்தோடு காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்த மதுவின் சகோதரி சந்திரிகா நேர்முகத் தேர்வுக்காகச் சென்றார். எதிர்பாராத மரணம் இது. இயற்கையோ, நோயோ அந்த 27வயது இளைஞனின் உயிரைப் பறிக்கவில்லை. குறிப்பிட்ட சிலரின் வன்முறையில் மது மரணித்தான். சகோதரன் இறந்த துக்கத்தோடு காவலர் தேர்வு, பயிற்சி போன்றவற்றை சந்திரிகா எதிர்கொண்டார். மது மரணித்து ஓராண்டு ஆகிவிட்டது. சந்திரிகா இன்று காவலராகிவிட்டார். தன் சகோதரனுக்கு இந்தப் பணியை சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்,

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

Photo Credit: @TheKeralaPolice
கேரளாவில் இருக்கும் பழங்குடியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த ஆண்டுதான் 74 இளைஞர்களுக்கு காவல்துறையில் பணி வழங்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்றவை நடத்தப்பட்டன. இதில்தான் மதுவின் சகோதரி கலந்துகொண்டு தேர்வாகினார். கடந்த ஆறு மாதங்களாக இவர்கள் அனைவரும் காவலர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்று வந்தனர். இன்றுடன் அவர்களது பயிற்சி நிறைவுபெற்றது. இன்று காலை 7 மணியளவில் இதற்கான நிறைவு விழா நடைபெற்றது. மதுவின் சகோதரியுடன் இன்னும் 24 பெண்கள் காவலர்களாகத் தேர்வாகியுள்ளனர். பாலக்காடு, மலப்புரம், வயநாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் இதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் முதுகலைப் படிப்பும், 7 பேர் இளங்கலைப் படிப்பும் முடித்துள்ளனர். இருவர் பி.எட் படித்துள்ளனர். 30 பேர் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் 10-ம் வகுப்பை நிறைவு செய்துள்ளனர்.சந்திரிகா மற்றும் மதுவின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள கேரள போலீஸ், அவர் காவலர் பணியில் இணைந்ததைத் தெரிவித்துள்ளது.