Published:Updated:

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கக்கோரி வழக்கு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்

சென்னை: காவிரி டெல்டா விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகை மாவட்டத்தை சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து வறட்சி நிவாரணம் வழங்குவதற்காக, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசின் வறட்சி நிவாரண உயர்மட்ட குழு தமிழகம் வந்தது.

##~~##
இந்த குழுவினர் கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை 3 நாட்கள் காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு செய்தனர். இந்த குழுவினர்களின் அறிக்கையின் அடிப்படையில், 3 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் 1 லட்சத்து 75 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே தற்போது நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
அதிலும் நெல்பயிர் விவசாயம் செய்தவர்களுக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்துள்ளது. காவிரி டெல்டா பகுதியில் 10 லட்சம் விவசாயிகள் உள்ளனர். ஆனால் 3 லட்சத்து 52 ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க மத்திய-மாநில அரசுகளுக்கு உத்தர விட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ்குமார் அகர்வால், நீதிபதி எம்.சத்திய நாராயணன் ஆகியோர், 'இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி' மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.