Published:Updated:

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

Published:Updated:
தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

நாகரிகம் எப்போது தோன்றும்? வளமும் செழிப்புமான வாழ்க்கை ஓரிடத்தில் நீண்ட நெடுங்காலத்திற்குத் தொடர்ந்து நிலைக்குமானால் அங்கே நாகரிகம் தோன்றும். பண்பாடு வளரும். எந்நேரமும் உயிரைக் கையில்பிடித்தபடி ஓடிக்கொண்டே இருந்தாலோ, மறுநாள் வாழ்க்கைக்கு எவ்வித உறுதிப்பாடும் இல்லையென்றாலோ அங்கே நாகரிகம் தோன்றுவதில்லை. அம்மக்களின் வாழ்க்கை நிலையாமையில் உழன்று பதைபதைப்புடனே நகரும். அதனால்தான் நீடித்த நிலைத்த செழிப்பான வாழ்க்கைக்குக் கட்டியம் கூறிய ஆற்றங்கரையோரத்தில் நாகரிகங்கள் செழித்தன. பேராற்றங்கரைகளில் தோன்றி வளர்ந்த பேருயிர்கள் நாம்.

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

இன்றைக்கு நம் வாழ்வு என்றைக்குமில்லாத முன்னேற்றங்களை விரைந்து அடைந்துவிட்டது. அது மேலும் மேலும் தன்னைப் புதுமைப்படுத்திக்கொண்டே மேம்படுத்திக்கொண்டே செல்கிறது. நம் நாகரிகத்தின் உயர்விளைச்சல் என்று மாநகரங்களைக் கூற வேண்டும். கூடி வாழ்தல் என்பதுதான் குமுகாயத்தின் தலையாய இயல்பு. கூடி வாழத் தொடங்கியபோது தோன்றியவையே ஊர்கள். பன்னிலைப்பட்ட மக்கள் ஓரிடத்தில் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் உதவியாய் வாழ்ந்த முதலிடம் நம் ஊர். ஓர் ஊரானது சிறப்பும் பொலிவும் பெருக்கமும் அடைந்து நகரம் ஆகிறது. ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்வரை ஒரு நகரமானது ஊர்ப்புறத்தன்மையோடு விளங்கியது. வேளாண்மை விளைபொருள்களின் சந்தை கூடுமிடமாக, பண்டங்கள் கைம்மாற்றப்படும் இடமாக நம் நகரங்கள் திகழ்ந்தன. தொழிற்போக்குகள் முதன்மையான பிறகு நகரங்கள் வளரத் தொடங்கின. சிற்றூர்கள் வேளாண்மையின் நிலையாமையோடு போராடிக்கொண்டிருக்கையில் நம் நகரங்கள் எத்தகைய வலுக்குறைவையும் பொருட்படுத்தாமல் வளரத் தொடங்கின. தமிழ்நாட்டில் இன்றைய மாநகரங்களின் பெருவளர்ச்சி விழிகளை விரிய வைக்கின்றது. அதிலும் தலைநகரமான சென்னையின் வளர்ச்சியானது கூட்டல் நிலையிலிருந்து பெருக்கல் நிலைக்குப் போய்விட்டது. உலகப் பெருநகரங்களோடு ஒப்பிடத்தக்கவாறு வளர்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இத்தகைய மிகை வளர்ச்சிப் போக்கில் நம் நகரங்கள் எத்தகைய இடர்ப்பாடுகளைச் சந்திக்கும் என்று எண்ணிப் பார்த்திருக்கிறேன். அணு உலை வெடிப்பு, அணுக்கதிர் வீச்சு ஆகிய கொடிய காரணங்களால் செர்னோபில் என்னும் பெருநகரம் கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது. அதை விளக்கும் காணொலிகளை இணையத்தில் பார்க்கலாம். முகலாய மன்னர் அக்பர் தம்முடைய புதிய தலைநகரத்தை பதேபூர் சிக்ரியில் அமைத்தார். கட்டுமானக் கலையின் உயர்முடியில் திகழுமாறு பார்த்து இழைத்துக் கட்டப்பட்ட அந்நகரம் வாழ்வதற்குத் தகுதியின்றிக் கைவிடப்பட்டது. காரணம் என்ன? பகைவர்களின் படையெடுப்புகளிலிருந்து தற்காத்துக்கொள்ள முகமது பின் துக்ளக் தம் தலைநகரத்தைத் தில்லியிலிருந்து தேவகிரிக்கு இடம் மாற்றினார். அந்தத் தலைநகரத்து இடமாற்றமும் துன்பத்தில் முடிந்தது. இதற்கும் காரணம் என்ன? பதேபூர் சிக்ரி அக்பரின் தலைநகரமாக நிலைக்க முடியாமைக்கும் தேவகிரி துக்ளக்கின் தலைநகராக விளங்க முடியாமைக்கும் ஒரே காரணம்தான். தண்ணீர்! வேறு வழியின்றி நதிக்கரையோரத்துத் தலைநகரங்களுக்கே அம்மன்னர்கள் திரும்பிச் சென்றனர். பதேபூர் சிக்ரியில் தண்ணீர் கிடைப்பதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தபோதும் வறட்சிக் காலத்தில் ஒரு சொட்டு நீர்கூடக் கிடைக்கவில்லை. தேவகிரியிலும் இதே கதைதான்.

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

பெருக்கமடைந்த நம் நகரங்களும் அவ்வாறு வாழ இயலாத சூழலுக்குத் தள்ளப்படக்கூடும். அதற்கு முதற்காரணமாக எரிநெய்ப் பற்றாக்குறையே அமையும் என்று கருதினேன். ஒரு நகரத்தின் அடுப்புகள் எரிவளியினால் எரிகின்றன. ஊர்ப்புறத்தில் இன்றைக்கும் சிறுபான்மையாகவேனும் விறகு வைத்து அடுப்பெரிக்கும் பழக்கம் உள்ளது. ஆனால், நம் நகரங்களின் அடுப்புகளுக்கு எரிவளியே வேண்டும். நகர வாழ்க்கைக்கு எரிவளிப் பற்றாக்குறை ஏற்பட்டால் பெரிய தடுமாற்றம் ஏற்படும் என்று நினைத்தேன். குவைத் கைப்பற்றப்பட்டபோது எண்ணெய்ச் சந்தை இயக்கம் முற்றாக நின்றது. அப்போது எரிநெய்ச்சாவடிகளில் ஆயிரக்கணக்கான வண்டிகள் அணிவகுத்து நின்றது பலர்க்கும் நினைவிருக்கும்.

எரிநெய், எரிவளி, மின்சாரம் என்னும் மூவகை ஆற்றல்வளங்களும் நம் நகரங்களை இயக்குகின்றன. அவற்றில் ஏதேனும் ஒன்று இனிக் கிட்டாதாயின் நம் நகரங்கள் வாழத் தகுதியற்றதாகும் என்று நினைத்தேன். ஆனால், இந்தச் சந்தைப் பொருளாதாரத்தில் எல்லா அரசுகளும் விழிப்படைந்து அவற்றை முறையாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்படியாகத் தொடர்ந்து பார்த்துக்கொள்கின்றன. அவற்றைப் பெறுவதற்காக விளைநிலங்களைக்கூடச் சூறையாட முனைகின்றன. அவற்றுக்கும் பின்னொரு காலத்தில் தட்டுப்பாடு வரும் என்றாலும் இப்போதைக்குக் கவலைப்பட ஒன்றுமில்லை. எரிவளிப் பயன்பாட்டுப் பழக்கம் நகரங்களில் மட்டுமன்றி நாடெங்கும் பரவலாக்கப்பட்டுவிட்டது.

இன்றைக்கு நம் நகர வாழ்க்கையின்மீது ஏற்பட்டிருக்கும் தலையாய அச்சுறுத்தல் தண்ணீர்ப் பற்றாக்குறைதான். தண்ணீருக்குப் போதாமை ஏற்படும் என்பதை முந்திய தலைமுறையினர் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள். தண்ணீரில்லை என்பது வேளாண்மை மட்டத்தில்தான் ஓர் இடையூறாகப் பார்க்கப்பட்டதே தவிர, வாழ்க்கைத் தேவைக்கு அது கிட்டாத நிலைமை ஏற்படும் என்றெண்ணிப் பார்த்திருக்கமாட்டார்கள். ஆனால், இன்றைய நிகழ்பாடு (எதார்த்தம்) அது. மக்கள் தொகைப் பெருக்கத்திற்கேற்ப உணவுப் பொருள் விளைச்சலைப் பெருக்கிக்கொண்டாலும் தண்ணீர் மேலாண்மையை முற்றாகத் தோற்றுவிட்டு நிற்கிறோம். நகரங்கள் தண்ணீர்ப் பற்றாக்குறையால் காய்ந்து வாடுகின்றன. இந்நிலை தொடருமானால் நம் பெருநகரங்கள் வாழத் தகுதியில்லாத நிலையை எட்டலாம்.

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

வரலாற்றுக் காலத்திலும் நாம் பட்ட துயரங்கள் பலவற்றுக்குப் பெருமழையும் வெள்ளமுமே காரணங்கள். மொகஞ்சாதாரோ ஹரப்பாவினைப்போல கொடுமணலில் நம் தடயங்கள் மண்ணுக்கடியில் கிடக்கின்றன. இன்று நீர்ப்போக்கின்றிச் சாக்கடையாய் ஓடு நொய்யலாறு அன்று பெருக்கடுத்து வந்து அவ்வூரை மூழ்கடித்திருக்கின்றது. ஐரோப்பியர்கள் இந்நாட்டினைச் சுற்றிப் பார்த்துவிட்டு ``இது ஆறுகள் கரையுடைத்துப் பாய்ந்து உருவாக்கிய சதுப்பு நிலங்களால் ஆன நாடு” என்று குறிப்பெழுதியிருக்கிறார்கள். இங்கே ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குச் செல்வதற்கு `எல்லாப் பருவங்களிலும் வெள்ளப் பாய்வுடைய ஆறுகள்’ பெருந்தடைகளாக இருக்கின்றன என்றெழுதினார்கள். மாதம் மும்மாரி பொழிந்தது. காட்டுவளம் மிக்கிருந்தது. தண்ணீரை வெளியேற்றுவதுதான் வேலையாக இருந்ததேயன்றித் தண்ணீர் இல்லா நிலையில்லை. பருவநிலைச் சுழற்சியால் வந்த பஞ்சங்கள் இந்நிலத்தின் இயற்கையல்ல. வளங்களின்  பகிர்மானமின்மையும் ஐரோப்பியச் சுரண்டல்களால் ஏற்படுத்தப்பட்ட ஏழ்மையும்தான் அக்காலத்தின் துயரங்கள்.

நமக்கு மழையின் அருமை தெரியும். திருக்குறள் தொடக்கத்திலேயே வான்சிறப்பு கூறப்படுகிறது. நம்முடைய சமவெளிகள் ஏரி குளங்களால் ஆனவை. மன்னர்களின் ஆட்சியில் ஏரி குளங்கள் கண்மாய்கள் தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டன. நீர் மேலாண்மை மிகச்சிறந்த தரத்தில் விளங்கியிருக்கிறது. வீட்டுக்கு வருபவர் யாராயினும் நீர்கொடுத்து வரவேற்கும் பண்பாட்டினர் நாம். நீர்நிலைகள் தொடர்பான ஆக்கங்கள் யாவும் அறச்செயல்கள். அதைக் கெடுக்கும் யாவும் கொடிய பாவச்செயல்கள். இப்படியிருந்த பண்பாட்டினர்தான் இன்று ஒரு குடம் தண்ணீருக்காக மணிக்கணக்கில் நடக்கின்றனர். தண்ணீர் வண்டி வருமென்று தவங்கிடக்கின்றனர். நெகிழிக்குடவரிசை நீண்டு நீண்டு செல்கிறது. அடுக்ககங்கள் நீரின்றி விழிக்கின்றன. ``இப்பல்லாம் தண்ணி பிரச்னை…. வராதீங்க…” என்று உறவினர்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது சென்னையின் இற்றைநாள் நிலை.

``சென்னைக்குத்தான் இந்நிலை… எங்கள் ஊரில் பரவாயில்லை” என்று யாரும் சொல்ல முடியாது. சென்னைக்கு இன்று ஏற்பட்டது நாளை ஒவ்வொரு நகரத்திற்கும் ஏற்படலாம்.

நாம் ஓரிடத்தில் வாழ்கிறோம் என்றால் நமக்குரிய உணவும் நீரும் அந்நிலத்தில் கிடைக்க வேண்டும். நமக்குரிய நீர் நம் தலைக்கு மேலிருந்து மழையாய்ப் பெய்ய வேண்டும். நம் வாழ்க்கைக்குரிய தொழில்கள் அவ்விடத்திலேயே நடக்க வேண்டும். நமக்கான கல்வி, விளையாட்டு, மகிழ்ச்சி அனைத்திற்குமான வாய்ப்புகள் அவ்விடத்திலேயே கொட்டிக்கிடக்க வேண்டும். அதற்குப் பெயர்தான் தன்னிறைவு. அதுதான் தற்சார்பு.

தண்ணீர்... இது தற்காலிகப் பிரச்னையல்ல; மனிதகுலத்தின் முன் இருக்கும் மாபெரும் சவால்!

நமக்கான அரிசி நம்மைச் சுற்றியுள்ள நிலத்திலிருந்து விளையாமல் கோதாவரிக் கரையிலிருந்து வருகின்றது என்றால் நாம் உணவில் இன்னொரு நிலத்தைச் சார்ந்தவர்கள் ஆகிறோம். கோதாவரிக் கரை அரிசிக்கு மாற்றாக நாம் எதனையேனும் மிகையாக விளைவித்துத் தராவிட்டால் நாம் காலப்போக்கில் நலிவடையலாம். கோதாவரி அரிசி வரத்து நின்றுவிடுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள், வேறு ஏற்பாடுகளும் இல்லை என்று வைத்துக்கொள்ளுங்கள், நம் நிலத்தில் அரிசிப் பற்றாக்குறை தலைவிரித்து ஆடும். அதற்குப் பெயர்தான் பஞ்சம். நம் நிலத்தில் நெல் விளையவில்லை, ஆனாலும் பண்டமாற்றினைப் போன்ற ஒரு வணிக முறை இருப்பதால்தான் கோதாவரிக்கரை அரிசி நம் இல்லாமையைப் போக்குகிறது. அதுவே தொடரும் என்று சொல்ல முடியாது. கோதாவரிக்கரை அரிசி நமக்குக் கிடைப்பது ஒரு தற்காலிக நிலை. நாளைக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இறக்குமதிப் பொருளாதாரத்தின் நிலையாமை இது. அதனால்தான் காவிரிக் கழிமுகமாம் தஞ்சை நெற்களஞ்சியத்தைப் பாதுகாத்துக்கொள்ளப் போராடுகிறோம்.  

அரிசி என்பதற்கு மாற்றாகத் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள். நீங்கள் பருகவேண்டிய, பயன்படுத்த வேண்டிய, விளைச்சலுக்கு வேண்டிய தண்ணீர் உங்களுடைய சுற்றுப்புறத்திலேயே கிடைக்க வேண்டும். ஊர்ப்புற வாழ்வில் அவ்வாறு கிடைத்தது. ஓர் ஊருக்கு வேண்டிய தண்ணீர் அவ்வூரின் ஏரி, குளம், கண்மாய்களில் தேங்கிக் கிடந்தது. பெய்யும் மழைநீரை வடிகாலமைத்து ஏரி குளங்களில் தேக்கிக்கொண்டார்கள். ஆறு மாதங்களுக்கு அந்தத் தண்ணீர் தாட்டும். பிறகு ஊற்று, கிணறு என்று தோண்டிக்கொண்டார்கள். ஏரி குளங்களில் தேக்கப்பட்ட நீரின் நிலத்தடிப் பெருக்கம் போதாக்காலத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏரி, குளம், கண்மாய் வற்றியபோது கிணறு ஊறியது. எல்லா வளங்களும் அளவாகப் பயன்படுத்தப்பட்டன. பற்றாக்குறை ஏற்படவில்லை. பஞ்சத்திற்கு வழியே இல்லை. எடுக்கப்பட்டது, மீண்டும் நிறைக்கப்பட்டது. நம்முடைய தொழில்கள் என்பவை உழவும் நெசவும் கைத்தொழில்களும்தாம். அவற்றையும் அவ்வூரிலேயே பார்த்துக்கொள்ள முடியும். கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், மணவிழாக்கள், சாவூர்வலங்கள் என யாவும் ஊர்ப்புற வாழ்வில் ஒன்றோடொன்று பின்னிக் கிடந்தன.

எப்படி நாம் உண்பதற்குக் கர்நாடகத்திலிருந்தும் ஆந்திரத்திலிருந்தும் அரிசி வருகிறதோ அவ்வாறே நாம் குடிப்பதற்கான தண்ணீரும் குடிநீர்த் திட்டங்கள் வழியாகத்தான் வருகிறது. அங்கேயே நம் தற்சார்பு செத்துவிட்டது. அரிசி வருவது எப்படி இறக்குமதியோ அவ்வாறே தண்ணீரும் குடிநீர்த் திட்டங்கள் வழியாக இறக்குமதிதான் செய்யப்படுகிறது. சென்னைக்கான தண்ணீர் வீராணம் ஏரியிலிருந்து தருவிக்கப்படுகிறது என்றால் அது இறக்குமதியல்லாமல் வேறென்ன? தலைக்காவிரியில் நீர்பொய்த்தால், கர்நாடகத்தோடு காவிரிப் பிணக்கு என்றால், மேட்டூர் அணை வற்றிக்கிடந்தால் சென்னைக்குச் செல்லும் குடிநீருக்கு இடையூறு ஏற்படும். கோயம்புத்தூர் மாநகரத்திற்குரிய தண்ணீர் சிறுவாணி ஆற்றிலிருந்தும் பில்லூர் அணையிலிருந்தும் பவானி ஆற்றிலிருந்தும் எடுக்கப்படுகிறது. நீலமலைத் தொடர்களில் மழையில்லை எனில் கோவைக்குக் குடிநீர்ப் பஞ்சம் ஏற்படும். நீர் இறக்குமதி முறைகளில் ஒரு கண்ணி அறுந்தால் அந்நீர்த்திட்டத்தால் பயனடையும் நகரம் நரகமாகிவிடும். இவை அனைத்துமே காலங்கடத்தும் ஏற்பாடுகள். கண்துடைப்பு முயற்சிகள். நமக்கான தண்ணீரை நம் நிலவரம்புக்குள்ளேயே தேக்கிக்கொள்ளாவிட்டால், நம் நிலத்தடியில் சேர்த்துக்கொள்ளாவிட்டால் எதிர்காலத்திற்கு எவ்வித உறுதியுமில்லை.  

இதற்கு என்ன தீர்வு?

நம் தண்ணீரைத் தரும் ஒரே கொடையாளி வானம்தான். மழைதான். நம் தேவைக்கு வேண்டிய மழைப்பொழிவு இருக்கிறது. முப்புறமும் கடலால் சூழப்பட்ட தீபகற்ப நிலப்பரப்பானது புவியியலின்படி மிகுமழைப் பொழிவினைப் பெறவல்லது. அவ்வளவு மழையும் பொழிகிறது. பெறப்படும் மழைநீர் மொத்தமும் நிலத்துக்குள் இறங்க வேண்டும். நீருக்கும் நிலத்திற்கும் இடையே உள்ள தொடர்பினைக் கட்டடங்களாகவும், தார்ச்சாலைகளாகவும், பூசப்பட்ட தரைகளாகவும் மாற்றிவிட்டோம். பெய்யும் மழைநீர் மண்ணுக்குள் இறங்க வழியில்லாமல் வழிந்தோடிச் சென்று கடலில் விரைந்து கலக்கிறது. இருப்பிலிருந்த நிலத்தடி நீரினை முடிந்தவரை உறிஞ்சி எடுத்துவிட்டோம். இப்போது நிலத்தடிச் சேர்மானமாக இருந்த மொத்த இருப்பும் தீர்ந்துவிட்டது. தொடர்ந்து நிலத்தடி நீர் மழையினால் நிறைக்கப்பட்டவில்லை. காலடியில் இருந்த நீரிருப்பு மறைந்துவிட்டது. ஆழ்குழாய் ஊற்றுகள் தூர்ந்துவிட்டன. நாம் வாழுமிடத்தில் நீர்நிலைகள் இல்லை. அவை காக்கப்படவில்லை. அவற்றைத் தொடர்ந்து நிலப்பயன்பாட்டுக்குக் கொணர்ந்து அழித்துவிட்டோம். ஆறுகள் காக்கப்படவில்லை. நீர்நிலைகளுக்குரிய நீர்வரத்துகள் தடுக்கப்பட்டன. அவை தூர்வாரப்படவில்லை. நீர்வளங்கள் அனைத்தும் மொத்தமாய்ச் சூறையாடப்பட்டன. இன்று குடிப்பதற்கும் நீரில்லை. மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவுப் பஞ்சத்திற்கு ஆட்பட்டிருக்க வேண்டிய நாம் அவற்றிலிருந்து தப்பித்தோம். ஆனால், தண்ணீர்ப் பஞ்சத்தைக் குறித்த எவ்வறிவும் பெறாமல், இருந்தும் நடைமுறைப்படுத்தாமல் நம்மை நாமே கழுத்திலிட்டு இறுக்கிக்கொண்டோம்.

முன்னெப்போதுமில்லாமல் நம் கண்முன்னேயே ஆயிரக்கணக்கான மரங்கள் அறுத்துக் கொல்லப்பட்டன. கொல் என்னும் வினையையே இங்கே பயன்படுத்த விரும்புகிறேன். ஒரு வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கவில்லை நாம். ஆனால், ஒரு வீட்டுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்துகிறோம். நிலமெங்கும் சூடேறி அனலடிக்கிறது. வீட்டு நிலத்திற்குள் ஒரு குடம் மழைத்தண்ணீர் இறங்கமுடியாதபடி விலையுயர்ந்த ஓடுகளைக்கொண்டு பாவி வைத்துக்கொண்ட பாதகர்களாயிற்றே நாம். தண்ணீர் எங்கிருந்து வரும்?

இப்போதேனும் விழிப்புற்றால் நல்லது. மண்ணில் விழும் ஒவ்வொரு துளியும் மண்ணுக்குள் இறங்க வேண்டும். ஒரு குடியிருப்பில் அவ்வாறு நீர் வெளியேற நேர்ந்தால் அருகிலேயே குளத்திற்குள் தேங்கும்படி நீர்நிலைகளை அமைக்கலாம். ஏக்கர் கணக்கில் அமைத்தால்தான் குளம் என்றில்லை. நாற்பதுக்கு நாற்பது அடியில் அமைந்தாலும் குளம்தான். குடியிருப்பு மனைப்பிரிவுகளில் ஒதுக்கப்பட்ட பொதுப்பயன் மனைகளில் குளங்களை அமைக்கலாமே. தேங்கியது போக மிஞ்சிப் பெருகும் நீர் வெளியேறட்டும். நீர்வழித்தடங்கள் அனைத்தையும் புதுப்பித்து வேலியிடல் வேண்டும். அண்மையில் கேரளத்திற்குச் சென்றபோது முண்டகாயம் நகரத்தில் ஆற்றங்கரைக்கு வேலியிட்டிருந்தார்கள். நகரத்துச் சாக்கடைகள் யாவும் நிலத்தடிச் சாக்கடைகளாக மாற்றப்பட்டால் பல சீர்கேடுகள் மாறும். கேரளத்து ஆற்றினைப்போல ஆற்றங்கரைகளில் வேலியிட்டால் நகர்புகும் ஆறுகளின் தூய்மை காக்கப்படும். எவ்வளவுதான் களங்கப்பட்டிருந்தாலும் ஒரு வெள்ளப்பெருக்கு அவ்வாற்றினைப் பளிங்குபோல் கழுவி மீட்டெடுத்துவிடும். கடந்த வெள்ளத்தில் கூவமும் அடையாறும் புது நதிகள்போல் நன்னீரால் ஓடினவே. ஊர்ப்புற நீர்நிலைகள் பெருமழை ஏந்தும் கிண்ணங்களாகட்டும். இம்முயற்சியில் ஒவ்வொருவரும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டால் பழைய நீர்வளத்தை நாம் மீட்டுவிட முடியும். மீண்டும் நம் நகரங்கள் பசுஞ்சோலைகளாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism