Published:Updated:

`வாழ்க்கைத் துணை கிடைப்பதில் சிக்கல்! - ராணுவ வீரர்களுக்கு பிரத்யேக மேட்ரிமோனியல் இணையதளம் #ITBP #NowAtVikatan

15.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

இணைய தளம்
இணைய தளம்
15 Dec 2019 9 PM

துணை ராணுவப்படை வீரர்களுக்கு பிரத்யேக மேட்ரிமோனியல் இணையதளம் #ITBP

துணை ராணுவப் படைப்பிரிவான இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவு (ITBP), வீரர்களுக்கென பிரத்யேக மேட்ரிமோனியல் இணையதளம் தொடங்கியிருக்கிறது. ஐடிபிபியால் நிர்வகிக்கப்படும் இந்த இணையதளத்தை, துணை ராணுவப் படை வீரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 9ம் தேதி தொடங்கப்பட்டது இந்த இணையதளம். வேலைப்பளு உள்ளிட்ட காரணங்களால் வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் சிக்கலை எதிர்க்கொள்ளும் துணை ராணுவப் படை வீரர்களுக்கு உதவும் வகையில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக ஐடிபிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

15 Dec 2019 9 PM

உலக அழகியின்  ‘நச்’ பதில்

டோனி ஆன் சிங்
டோனி ஆன் சிங்

உலக அழகி 2019 போட்டி லண்டனில் நவம்பர் 20-ம் தேதி தொடங்கியது. இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இறுதிப்போட்டி நேற்று இரவு நடந்தது. இதில் ஜமைக்காவை சேர்ந்த டோனி ஆன் சிங் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அப்போது பேசிய, டோனி ஆன் சிங், “ எனது அம்மாவை மிகவும் நேசிக்கிறேன். அவர் தான் என்னுடைய பலம், ஆதரவாளர், ரசிகர், உற்ற தோழி எல்லாமே”என பதிலளித்தார். உலகில் அவருக்கு மிகவும் முக்கியமானது எது என்ற கேள்விக்கு, `தாய்’ என விடை அளித்திருந்தார். 23 வயதான டோனி ஆன் சிங் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

15 Dec 2019 1 PM

இந்தியா பேட்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்கியுள்ளது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. டாஸுக்கு பிறகு பேசிய கோலி, ``முதலில் பேட் செய்ததில் மிகவும் மகிழ்ச்சி. பிட்ச் உலர்ந்து இருப்பதால் முதலில் பேட் செய்யதான் விரும்பினோம். வெஸ்ட் இண்டீஸ் ஆபத்தான அணி. அவர்களை நாம் லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. மனீஷ் பாண்டே, மாயங்க் அகர்வால், சாஹல் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இன்று விளையாடவில்லை" எனக் கூறியிருக்கிறார்.

15 Dec 2019 1 PM

மெரினாவில் குவிந்த 200 அஸ்ஸாம் இளைஞர்கள்!

அஸ்ஸாம் இளைஞர்கள்
அஸ்ஸாம் இளைஞர்கள்

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அஸ்ஸாமில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் தற்போது சென்னை மெரினாவில் அஸ்ஸாம் இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர். குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மெரினா கடற்கரையில் போராட முயன்ற அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். எனினும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பியபடியே இருந்தனர். பின்னர் வேன்களில் ஏற்றி அவர்களை திருப்பி அனுப்பினர் போலீஸார். இதற்கிடையே, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அசாம் இளைஞர்கள் போராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

15 Dec 2019 1 PM

சச்சின் சந்திக்க விரும்பிய நபர் கண்டுபிடிப்பு!

சச்சின் சந்திக்க விரும்பிய நபர்
சச்சின் சந்திக்க விரும்பிய நபர்

சென்னையில் ஒரு டெஸ்ட் போட்டியின்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்த சச்சின் டெண்டுல்கரை சந்தித்த ஹோட்டல் ஊழியர் அவர் பயன்படுத்தும் எல்போ கார்டு தொடர்பாக ஆலோசனை வழங்கியுள்ளார். அதை ஏற்ற சச்சின் தன் எல்போ கார்டில் மாற்றம் செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆனால் தற்போது அந்த ஊழியரைச் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தார் சச்சின். அதன்படி அந்த ஊழியர் சென்னையை அடுத்துள்ள பெரம்பூரைச் சேர்ந்த குருபிரசாத் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

15 Dec 2019 12 PM

ஆவணங்களை ஒப்படைத்தார் பொன்.மாணிக்கவேல்!

முன்னாள் சிலைகடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் சிலைகடத்தல் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசிடம் ஒப்படைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ஆவணங்களை சமர்ப்பிக்காததால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தற்போது அரசிடம் ஆவணங்களை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

15 Dec 2019 9 AM

தேக்கம்பட்டியில் தொடங்கிய யானைகள் முகாம்!

மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் யானைகள் முகாம் தொடங்கியுள்ளது. இன்று முதல் 48 நாள்கள் நடக்கும் யானைகள் நல்வாழ்வு முகாமில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் இருந்து 28 யானைகள் அழைத்துவரப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை 'ஜெயமால்யதா' , கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோயில் கல்யாணி யானை, ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலைச் சேர்ந்த 17 வயதான யானை ராமலட்சுமி என 28 யானைகள் தேக்கம்பட்டி வந்துள்ளன. இன்று காலை யானைகளை குளிப்பாட்டி உணவுகள் கொடுக்கப்பட்டதுடன் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

15 Dec 2019 8 AM

சிபிஐ-க்கு மாற்றம்!

பாத்திமா
பாத்திமா

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை நடத்திவந்தது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இதன்பின் பாத்திமா தந்தை லத்தீஃப் மோடி, அமித் ஷா உள்ளிட்டோரைச் சந்தித்திருந்தார். இந்த நிலையில் திடீரென வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.