Published:Updated:

`தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... வண்ணாரப்பேட்டை தடியடி!' - ஐபிஎஸ் அதிகாரியைச் சுட்டிக்காட்டிய கனிமொழி #NowAtVikatan

கனிமொழி
கனிமொழி

இன்றைய (15.2.2020) முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

15 Feb 2020 10 PM

சட்டசபை முற்றுகைப் போராட்டம்!

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நேற்று சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். இதைத்தொடர்ந்து இன்று மாநிலம் முழுவதும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்தவர்கள் போலீஸாரின் தடியடியைக் கண்டித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று ஜவாஹிருல்லா உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் காவல் ஆணையர ஏ.கே.விஸ்வநாதனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜவாஹிருல்லா, ``வரும் பிப்ரவரி 19-ம் தேதி சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம். தமிழக முதல்வர் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் ஆகிய சட்டங்களை நிறைவேற்ற மாட்டோம் எனச் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தால், சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தைக் கைவிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

15 Feb 2020 9 PM

4 வயதுச் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை!

`தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... வண்ணாரப்பேட்டை தடியடி!' - ஐபிஎஸ் அதிகாரியைச் சுட்டிக்காட்டிய கனிமொழி #NowAtVikatan

ஹரியானா - இமாசலப் பிரதேச மாநில எல்லையில் அமைந்துள்ள பஞ்சகுலா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 வயதுச் சிறுமி ஒருவர் படித்து வந்துள்ளார். பள்ளிப் பேருந்தில் நேற்று வழக்கம்போல பள்ளிக்குச் சென்றுள்ளார். பின்னர் மாலையில் சிறுமி வீட்டுக்குத் திரும்பி வந்தபோது பேருந்தில் நடந்த மோசமான விஷயங்களைக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் சிறுமிக்கு சிறார் வதை நடந்துள்ளதை உறுதி செய்துள்ளனர். உடனடியாக இதுதொடர்பாகக் காவல்துறைக்கும் புகார் அளித்துள்ளனர்.

மருத்துவமனைக்கு வந்த அப்பகுதியின் காவல்துறை அதிகாரிகள், ``ஓட்டுநரை கைது செய்ய காவலர்கள் சென்றுள்ளனர். போக்ஸோ சட்டத்தின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

15 Feb 2020 8 PM

இரவிலும் தொடரும் போராட்டம்!

`தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு... வண்ணாரப்பேட்டை தடியடி!' - ஐபிஎஸ் அதிகாரியைச் சுட்டிக்காட்டிய கனிமொழி #NowAtVikatan

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதைக் கண்டித்து மதுரையில் இரவு நேரத்திலும் போராட்டம் தொடர்கிறது.

15 Feb 2020 2 PM

ஐபிஎஸ் அதிகாரியைச் சுட்டிக்காட்டிய கனிமொழி!

சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீஸார் தடியடி நடத்தியதற்கு தி.மு.க எம்.பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். ``சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராக நடந்த போராட்டங்களை உரிய முறையில், சரியாக கையாண்டிருந்தால் மக்கள் மீதான வன்முறையை தவிர்த்திருக்கலாம். சென்னை வடக்கு இணை ஆணையர் கபில் குமார் சரத்கர், ஐ.பி.எஸ் நிலைமையை தவறாக கையாண்டதாலேயே, அங்கு வன்முறை வெடித்தது. தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 உயிர்கள் பலியானபோது, திருநெல்வேலி சரக டி.ஐ.ஜியாக இருந்தவர் கபில்குமார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக கபில்குமார் மீது சிபிஐ மற்றும் ஒரு நபர் நீதி ஆணைய விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த விசாரணை முடியும் வரை அவர் சட்டம் ஒழுங்கு பணியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாது. ஆனால் அவருக்கு சென்னை வடக்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் பதவி என்ற பரிசை வழங்கியுள்ளது அ.தி.மு.க அரசு. வண்ணாரப் பேட்டையில் நேற்று நடந்த வன்முறைக்குக் காரணமான, கபில் குமார் சரத்கர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். இந்த வன்முறை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்” என கனிமொழி தெரிவித்துள்ளார்.

15 Feb 2020 10 AM

முறைகேடுகளை தடுக்க டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் புதிய மாற்றம்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப் 4 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பது சமீபத்தில் அம்பலமானது. டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு முறைகேடுகள் விவகாரம் பூதாகரமான நிலையில் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படுவதற்காக அரசாணை சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் முறைகேடுகளை தடுப்பதற்காக தேர்வுகளில் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகள் முதனிலை, முதன்மை தேர்வுகள் என இரு பிரிவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

15 Feb 2020 9 AM

இஸ்லாமியர்கள் மீதான தடியடிக்கு ஸ்டாலின் கண்டனம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் நடத்திய தடியடி சம்பவத்துக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள ஸ்டாலின், “ CAA-வுக்கு எதிராக அமைதி வழியில் போராடிய மக்கள்மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தி, பிப். 14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துக்கொள்கிறேன். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதுடன், அவர்கள் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

15 Feb 2020 7 AM

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசை அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மண்ணடியில் போராட்டம்
மண்ணடியில் போராட்டம்
எஸ்.ஏ.எம். பரக்கத் அலி
வண்ணாரப்பேட்டையில் சிஏஏவுக்கு எதிராக போராட்டம்.. போலீஸ் தடியடி.. திடீர் பரபரப்பு! #NowAtVikatan

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி போராட்டத்தைப் போலவே சென்னையிலும் பெண்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். வண்ணாரப்பேட்டையில் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு `சென்னையின் ஷாஹீன் பாக்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

பின் செல்ல