Published:Updated:

தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு தடுப்பூசி: `பக்கவிளைவு இல்லை!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி
கோவிட்ஷீல்டு கொரோனா தடுப்பூசி

16-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Jan 2021 6 PM

தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி!

தடுப்பூசித் திட்டம்! - பிரதமர் மோடி
தடுப்பூசித் திட்டம்! - பிரதமர் மோடி

இந்தியா முழுவதும் இன்று காலை முதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியது. தமிழகத்தில் இன்று 2,783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் யாருக்கும் பக்கவிளைவு ஏற்படவில்லை. நாளை முதல் முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணி தொடரும்” என்றார்.

16 Jan 2021 1 PM

தனியார் மருத்துவமனையில் துரைமுருகன்!

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் தொடர்ந்து அவதிப்பட்டுவருகிறார். கட்சி பொதுக்கூட்டங்களில் துரைமுருகன் தொடர்ந்து பங்கேற்றுவந்தாலும், அவ்வப்போது மருத்துவமனையில் உடல்நிலை பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் சுற்றுப்பயணத்தின்போது, உடல்நலம் பாதிக்கப்படவே திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

துரைமுருகன்
துரைமுருகன்

இந்தநிலையில், இன்று மீண்டும் உடல்நலக் குறைவு காரணமாக வேலூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது துரைமுருகனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், இன்று ஒரு நாள் கண்காணிப்பில் இருக்குமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவிலிருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டார் எனறு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

16 Jan 2021 9 AM

`ஜல்லிக்கட்டு நாயகன்' - முதல்வர் புகழாரம்

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அகியோர் தொடங்கிவைத்தனர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், ``உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு என்றால் அது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுதான். நமது பாரம்பர்யத்தை, கலாசாரத்தைக் காக்கக்கூடிய இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டை அ.தி.மு.க அரசுதான் நிலை நிறுத்தியது. காளைகளை அடக்க வந்திருக்கும் இளைஞர்களுக்கும், காளைகளை வளர்த்த விவசாயிகளுக்கும் வாழ்த்துகள்” என்றார். முன்னதாக விழாவுக்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசிய முதல்வர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தைக் குறிப்பிடுகையில் 'ஜல்லிக்கட்டு நாயகன்' எனக் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டுரைக்கு