Election bannerElection banner
Published:Updated:

தமிழகத்தில் 8,000-ஐ தாண்டிய ஒருநாள் கொரோனா பாதிப்பு! - 13,000-ஐ கடந்த மொத்த உயிரிழப்பு #NowAtVikatan

கொரோனா
கொரோனா

16-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Apr 2021 6 PM

தமிழகத்தில் 8,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரம் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,448 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 2,636 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 97,201 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 9,71,384 நபர்களுக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 8,96,759 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 13,032 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக 2,09,76,696 RT-PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

16 Apr 2021 6 PM

`தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல!’

நடிகர் விவேக் இன்று காலை திடீர் நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்தநிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ``எக்மோ உதவியுடன் உள்ள நடிகர் விவேக்கின் உடல்நிலை 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. நடிகர் விவேக்குக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து இதயக்குழாய் அடைப்பு நீக்கப்பட்டது. விவேக் உடல்நலக்குறைவுக்கு, தடுப்பூசி போட்டுக்கொண்டது காரணமல்ல” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 Apr 2021 10 AM

ஒரே நாளில் 2.17 லட்சம் பேருக்குத் தொற்று!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,17,353 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,42,91,917 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல்
கொரோனா பெருந்தொற்றுப் பரவல்
Pixabay

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,185. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,74,308-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,25,47,866 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 15,69,743 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 11,72,23,509 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

16 Apr 2021 9 AM

மேலும் சில கட்டுப்பாடுகள்! - தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. மாநில அரசு சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், பாதிப்புகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்தநிலையில், இன்று காலை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

கொரோனாகால கட்டுப்பாடுகள்
கொரோனாகால கட்டுப்பாடுகள்
மாதிரிப் படம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படவிருக்கும் நிலையில், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது. இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது, வார இறுதி நாள்களில் ஊரடங்கைக் கடைப்பிடிப்பது போன்ற கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் எனறு தெரிகிறது. ஒருபுறம் கட்டுப்பாடுகளை அதிகரித்து, மறுபுறம் தடுப்பூசிப் பணிகளையும் துரிதப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு