Published:Updated:

லாக் டௌன் 4.0ல் தமிழகத்தின் ஐந்து நகரங்களுக்கு விலக்கு இல்லை?! -வெளியான தகவல்கள் #NowAtVikatan

லாக் டௌன்
லாக் டௌன்

16-05-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

16 May 2020 9 PM

தமிழகத்தின் ஐந்து நகரங்களுக்கு விலக்கு இல்லை?

நான்காம்கட்ட ஊரடங்கு நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில் சென்னை, மும்பை, அஹமதாபாத், தானே, டெல்லி, இந்தூர், புனே, கொல்கட்டா, ஜெய்ப்பூர்,நாஷிக், ஜோத்பூர், ஆக்ரா, திருவள்ளூர், ஆரங்காபாத், கடலூர், ஹைதராபாத், சூரத், செங்கல்பட்டு, அரியலூர், ஹவுரா, குர்னூல், போபால், அம்ரிஸ்டர், விழுப்புரம், வதோதரா, உதைய்பூர், பால்கர், பார்ஹம்புர், சோலாபுர் மற்றும் மீரட் ஆகிய நகரங்களுக்கு இந்த ஊரடங்கில் விலக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தின், சென்னை, திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 5 மாநகராட்சி / நகராட்சிகளுக்கு ஊரடங்கில் விலக்கு இருக்காது.

16 May 2020 6 PM

இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இது அதிகம். தமிழகத்தில் இதுவரை 3538 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

16 May 2020 6 PM

மேலும் 477 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 477 பேரில் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 332 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 93 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது பாதிப்பு.

16 May 2020 5 PM

சுயசார்பு திட்ட 4ம் கட்ட அறிவிப்பு!

பிரதமர் மோடி அறிவித்த சுயசார்பு திட்டத்தின் கீழ் நான்காம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். ஏற்கனவே சிறு, குறு தொழில்துறையினர் விவசாயிகளுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இன்று பாதுகாப்புத்துறை குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில், பாதுகாப்புத்துறைக்கான உபகரணங்களை தயாரிக்க அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49% லிருந்து 74% வரை அதிகரிப்பு. இந்தியாவில் மேலும் 6 விமான நிலையங்கள் தனியார், அரசு பங்களிப்புக்காக ஏலம் விடப்படும். விமான நிலையங்களை மேம்படுத்துவதற்காக ரூ.2,300 கோடி ஒதுக்கீடு. நிலக்கரித்துறை தனியார் மயமாக்கப்படும். சந்தைத் தேவைகளை ஈடுசெய்ய நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்படும். வருவாய் பகிர்வு அடிப்படையில் நிலக்கரி, சுரங்கத் துறையில் வர்த்தக ரீதியிலான அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

16 May 2020 12 PM

முடிதிருத்துவோருக்கு நிவாரணம் அறிவித்தார் முதல்வர்!

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் தமிழக அரசு நிவாரண உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள சலூன் கடைகளுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னதாக முடிதிருத்துவோர் நலவாரிய உறுப்பினர்களுக்கு 2 தவணைகளாக ரூ. 2000 வழங்கப்பட்ட நிலையில் தற்போது நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்துவோருக்கும் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 May 2020 9 AM

சீனாவை முந்தியது இந்தியா!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது சீனாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இந்தியாவின் எண்ணிக்கை அதிகம்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இன்று காலை மத்திய சுகாதாரத்துறையின் கணக்குகளின் படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,940 -ஆக அதிகரித்திருக்கிறது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,941. இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,752 -ஆக அதிகரித்துள்ள நிலையில், 30,153 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.

16 May 2020 8 AM

மீண்டும் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள்

ஊரடங்கில் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. மேலும் உயர்நீதிமன்றத்தின் அனைத்து உத்தரவுகளுக்கும் தடை விதிக்கப்பட்டதால், மதுபான விற்பனையில் இருந்த கட்டுப்பாடுகளும் தானாகவே தளர்ந்தன. இதனால் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்பட உள்ளன.

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மதுபான விற்பனை தொடங்கப்படவுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளை முறையாகப் பின்பற்ற உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. 550 நபர்கள் மட்டுமே வரிசையில் நிற்க வேண்டும். டோக்கன் வழங்கப்பட வேண்டும். டோக்கன் தரும் இடம் தனியாக இருக்க வேண்டும். டோக்கன் வழங்கும் இடம் மற்றும் மதுபானம் வாங்கும் இடம் முதலியவற்றில் தனிமனித இடைவெளிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும், தனிமனித இடைவெளியில் எந்த சமரசமும் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

`நாளொன்றுக்கு 500 பேர்; 7 வண்ண டோக்கன்கள்!' -டாஸ்மாக் நிர்வாகத்தின் சிறப்பு ஏற்பாடு
அடுத்த கட்டுரைக்கு