Published:Updated:

ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி! - தமிழக அரசு அறிவிப்பு #NowAtVikatan

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி
வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி

16.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Jun 2020 6 PM

ராணுவ வீரர் பழனி குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடனான மோதலில் வீரமரணமடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி!
வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி!

மேலும், ராணுவ வீரர் பழனியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.

`கிரகப்பிரவேசம் முடிந்த 3 வது நாள்' - லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த தமிழக வீரர் பழனி
16 Jun 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 1,515 பேருக்குப் பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும்1,515 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,019 -ஆக உயர்ந்துள்ளது.

corona virus
corona virus

சென்னையில் மட்டும் இன்று 919 பேருக்குப் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,245 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 528-ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் 1,438 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,782 ஆக அதிகரித்திருக்கிறது.

16 Jun 2020 4 PM

மாஸ்க் கட்டாயம் - பிரதமர் மோடி!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி இன்று மற்றும் நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துக்கிறார். முதற்கட்டமாக இன்று கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களின் முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது முதல்வர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, `கொரோனா பரவலில் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெரிய பாதிப்பு இல்லை. கொரோனா தொற்று பரவலுக்கு முன்னரே இந்தியா முன்னெச்சரிக்கையாக இருந்தது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். வர்த்தகம் மீண்டும் வேகமடைய நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றார்.

16 Jun 2020 3 PM

வீர மரணமடைந்த தமிழக வீரர்!

லடாக் கல்வான் பள்ளதாக்குப் பகுதியில் நேற்று இந்திய சீன வீரர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மிகக் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்தியா தரப்பில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவரும் இரண்டு ராணுவ வீரர்களும் வீரமரணமடைந்தனர். எனினும் இரு நாட்டு வீரர்களுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாகத் தகவல்கள் இல்லை. இந்தியப் பகுதிக்குள் நுழைந்து இந்தத் தாக்குதலை சீன வீரர்கள் செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனா தரப்பில் 5 வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி!
வீரமரணமடைந்த ராணுவ வீரர் பழனி!

இந்திய ராணுவம் தரப்பில் வீர மரணமடைந்த வீரர்களில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனைப் பகுதியைச் சேர்ந்த பழனி என்னும் ராணுவ வீரரின் வீர மரணம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

16 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,424-லிருந்து 3,43,091 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 10,667 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 380 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,520-லிருந்து 9,900ஆக அதிகரித்திருக்கிறது.

16 Jun 2020 9 AM

மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய்!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``தமிழகத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை வைத்துள்ள 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு 1,000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

16 Jun 2020 9 AM

உலகளவில் கொரோனா - அப்டேட்!

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் 81,12,138 ஆக உயர்ந்திருக்கிறது. அதேநேரம் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் 42,13,226 ஆக அதிகரித்தது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,39,035 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் இதுவரை 21,82,950 பேருக்குக் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,18,283 ஆக இருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு