Published:Updated:

வாடகை பாக்கி: `நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டும்!’ -லதா ரஜினிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை #NowAtVikatan

லதா ரஜினிகாந்த்
லதா ரஜினிகாந்த்

16-12-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!

16 Dec 2020 9 AM

லதா ரஜினிகாந்துக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

லதா ரஜினிகாந்த் செயலாளராக இருக்கும் ஆஸ்ரம் பள்ளி, வாடகை பாக்கி வைத்திருப்பதாக பள்ளி வளாக நில உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். பள்ளிக்கான வாடகைத் தொகையை சரிவரத் தராமல் ரூ11 கோடி வரை நிலுவையில் இருப்பதாக மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

வழக்கு விசாரணையில், பள்ளி வளாகத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் காலி செய்ய உயர் நீதிமன்றம் கெடு விதித்திருக்கிறது. உத்தரவின்படி காலி செய்யத் தவறினால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டுமென்றும் உயர் நீதிமன்றம் எச்சரித்திருக்கிறது. மேலும், `இதே பள்ளி முகவரியில் அடுத்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது’ என்றும் ஆஸ்ரம் பள்ளிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா பரவல் காரணமாக வளாகத்தை காலி செய்ய முடியவில்லை என லதா ரஜினிகாந்த் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.

16 Dec 2020 9 AM

திறந்தவெளியில் அரசியல், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி!

எடப்பாடி  பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவில், தற்போது பல்வேறு கட்டங்களாக தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. ஏற்கெனவே அரங்குகளில் 50% பங்கேற்பாளர்களுடன் அரசியல், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, வரும் 19-ம் தேதி முதல் திறந்தவெளியிலும் அரசியல், மதக் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், 50% பங்கேற்பாளர்களுக்கு மிகாமல் கூட்டம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

16 Dec 2020 9 AM

`அரையாண்டுத் தேர்வு ரத்து!’ - செங்கோட்டையன்

பள்ளி மாணவர்கள்
பள்ளி மாணவர்கள்
representative image

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், ஆன்லைன் மூலமும், கல்வி தொலைக்காட்சி மூலமும் மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டுவருகிறது. இந்தநிலையில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்ற சந்தேகம் இருந்துவந்த நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு அரையாண்டுத் தேர்வுகள் நடத்தப்படாது எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். மேலும், தனியார் பள்ளிகள் விரும்பினால், அரையாண்டுத் தேர்வை, ஆன்லைனில் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு