Published:Updated:

“எம் மவ உடம்பு நோவுல சாகலை... மனசு நோவுல செத்துட்டா!”

ஃபேஸ்புக்
பிரீமியம் ஸ்டோரி
News
ஃபேஸ்புக்

சிறுமியைத் தவிர இன்னும் சிலரை தீரன், ஃபேஸ்புக் மூலம் பாலியல்ரீதியாக ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்திருக்கிறது.

வாழ்நாளைக்குமான ஆறாத ரணங்களை ஏற்படுத்தி விடுகிறது துரோகம். அதிலும் காதலின் பெயரில் நிகழ்த்தப்படும் துரோகத்தின் வலியிலிருந்து மனதிடம்கொண்டவர்கள் மட்டுமே மீள முடிகிறது. இப்படித்தான், காதல் எனும் பெயரால் தனக்கு இழைக்கப்பட்ட துரோகத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத 16 வயது சிறுமி, விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். ‘இந்தக் காட்சியாவது அவனது மனசாட்சியை உலுக்கட்டும்’ என்று நினைத்தாரோ என்னவோ... விஷம் குடிக்கும்போது அதை வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பியிருக் கிறார். அப்போதும் அவன் கண்டுகொள்ள வில்லை. இதற்கிடையே, மகள் தற்கொலை செய்துகொண்டதையே அறியாத பெற்றோர், உடல்நலக்குறைவால் இறந்ததாகக் கருதி, குடும்ப வழக்கப்படி தகனம் செய்துவிட்டனர்.

“எம் மவ உடம்பு நோவுல சாகலை... மனசு நோவுல செத்துட்டா!”

பிறகு, யதேச்சையாக மகளின் செல்போனை ஆராய்ந்தபோது, அவளது இறப்புக்கான காரணம் தெரிந்து அதிர்ந்தவர்கள், அது குறித்து காவல் நிலையத்தில் சொல்லவே... தற்கொலையை மறைத்து, உடலை எரித்ததற்காக தந்தையைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். செய்வதறியாது தவித்த தாய், மாவட்ட எஸ்.பி அரவிந்தனிடம் அழுது புலம்பி மனு அளித்ததைத் தொடர்ந்து தற்கொலைக்குக் காரணமான இளைஞரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். அவன், இந்தச் சிறுமி மட்டுமன்றி இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் குடித்தனம் நடத்தி ஏமாற்றிய தகவலும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது!

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டையில் வசித்துவந்தது அந்தச் சிறுமியின் குடும்பம். பெற்றோர் இருவரும் விவசாயக் கூலிகள். சிறுமியை இழந்தநிலையில், பெற்றோர் இருவருமே பேசக்கூடிய மனநிலையில் இல்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த ஆர்.கே.பேட்டை போலீஸார் நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார்கள்...

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“அந்தம்மா மனு கொடுக்க வந்தப்பவே பித்து பிடிச்ச மாதிரி இருந்தாங்க. எஸ்.பி-கிட்ட மனுவைக் கொடுத்து, கதறியழுது சொன்ன விஷயங்களைக் கேட்டு நாங்களே ரொம்ப கலங்கிட்டோம். அந்தம்மா எங்ககிட்ட, ‘16 வயசு பச்சை மண்ணுங்க என் புள்ளை. அரசுப் பள்ளியில 11-ம் கிளாஸ் படிச்சுது. வீட்டு வேலையெல்லாம் இழுத்துப் போட்டு செய்வா. `அம்மா நான் நல்லா படிச்சு, வேலைக்குப் போய் நம்ம குடும்ப கஷ்டம் எல்லாத்தையும் தீர்ப்பேன்மா’னு அடிக்கடி சொல்லுவா. கண்ணுக்குக் கண்ணா எங்களைத் தாங்கின புள்ளைங்கய்யா அவ...

தீரன்
தீரன்

அன்னிக்கு வயலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தப்ப, மூலையில சுருண்டு படுத்துக்கிடந்தா. ரெண்டு மூணு நாளைக்கு முன்னாடிதான், நெஞ்சு வலிக்குதுன்னு சொல்லியிருந்தா. உடம்பு நோவுல தூங்கிட்டாளோனு நினைச்சோம். திரும்பவும் சாப்பிடுறதுக்காக எழுப்பறப்பதான், அவ உடம்பெல்லாம் ஜில்லுன்னு இருந்துச்சு. தலையைத் தூக்கிப் பார்க்குறேன்... தலை தொங்கிருச்சு. அவளுக்கு நெஞ்சுவலினு சொன்னப்பவே ஆஸ்பத்திரிக்குப் போயிருக்க லாமேனு நானும் என் புருஷனும் தலையில அடிச்சிக்கிட்டு அழுதோம். அப்புறம் எங்க குடும்ப வழக்கப்படி பொண்ணோட உடம்பை சுடுகாட்டுல தகனம் செஞ்சுட்டோம்.

அப்புறமாதான் பொண்ணுக்கு ஆன்லைன் கிளாஸுக்காக வாங்கிக் கொடுத்திருந்த செல்போனு கண்ணுல பட்டுச்சு. அதை எடுத்துப் பார்த்தப்பதான், எங்க பாப்பாவை இதே ஊரைச் சேர்ந்த தீரன்கிறவன் காதலிச்சு, ஏமாத்தியிருக்கான்; அதனாலதான் என் மவ விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாங்கிற விஷயமே தெரிஞ்சுது. தீரனும் அவனோட ஃப்ரெண்டுகளும் என் மகளோட போட்டோவை கம்ப்யூட்டர்ல ஆபாசப் படங்களா மாத்தி, அதை அவளுக்கு அனுப்பி மிரட்டியிருக்கானுங்க. அதைத் தாங்க முடியாமதான் அவ விஷம் குடிச்சிருக்கா. அவ விஷம் குடிக்குறப்ப, அதை வீடியோ எடுத்தும் அந்தப் படுபாவிக்கு அனுப்பியிருக்கா. அந்த வீடியோவும் அவளோட செல்போன்ல இருக்குது. அய்யா... எம் மவ உடம்பு நோவுல சாகலை... மனசு நோவுல செத்துட்டா. அவளை அநியாயமா கொன்னுட்டானுங்க. அவனுங்களைத் தண்டிச்சு, என் மவ சாவுக்கு நியாயம் தேடித் தரணுங்கய்யா...’னு கதறி அழுதுச்சு அந்தம்மா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆனாலும், சட்டத்தை மீறக்கூடாதுங்கிறதுக்காக பொண்ணு இறந்த தகவலை மறைச்சு, உடம்பை எரிச்சதுக்காக அந்தம்மாவோட புருஷனை அரெஸ்ட் பண்ணிட்டோம். இப்ப அவர் ஜாமீன்லயும் வந்துட்டாரு” என்றவர்கள், குற்றம்சாட்டப்படும் தீரனைப் பற்றிய விவரங்களையும் கூறினார்கள்.

“எம் மவ உடம்பு நோவுல சாகலை... மனசு நோவுல செத்துட்டா!”

“இது சம்பந்தமா விசாரிச்சப்ப, இலங்கையில இருக்குற இளம்பெண் ஒருத்தரும் தீரனால் ஏமாற்றப்பட்டிருந்தது தெரிஞ்சுது. உடனே இலங்கைக்குப் போய் அந்தப் பொண்ணைச் சந்திச்சோம். அந்தப் பொண்ணு எங்ககிட்ட, ‘ஃபேஸ்புக்லதான் தீரன் எனக்கு அறிமுகமானான். காதலிக்குறதா சொல்லி உருகினான். எப்படியோ அவனோட வலையில விழுந்துட்டேன். அவன் இலங்கைக்கே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான். சில மாதங்கள் தனி வீடு எடுத்து என்னோட குடும்பம் நடத்தினவன், லட்சக்கணக்குல பணத்தையும் நகைங்களையும் எடுத்துட்டு ஓடிட்டான்.

இந்தநிலையிலதான், என்னை வெறுப்பேத்து றதுக்காக, அந்தச் சின்னப் பொண்ணு அவனை லவ் பண்றதை நிரூபிக்கிறதுக்காக அவளோட கையை பிளேடால கிழிச்சுக்கிட்ட படத்தையும், அந்தப் பொண்ணோட மார்பிங் பண்ணப்பட்ட படங்களையும் எனக்கு அனுப்பினான். நான் அவன்கிட்ட ‘வேணாம்டா... என்னை ஏமாத்தின மாதிரி அந்தச் சின்னப்புள்ளையை ஏமாத்தாதே’னு அவனுக்கும் அவனோட ஃப்ரெண்ட்ஸுக்கும் சொன்னேன். அந்தப் பொண்ணுகிட்டயும் சொல்ல முயற்சி பண்ணிணேன். ஆனா, அந்தப் பொண்ணோட நம்பரு கிடைக்கலை’னு சொன்னுச்சு. அதுக்கப் புறம் தீரனை நாங்க அரெஸ்ட் பண்ணினோம்” என்றார்கள்.

சிறுமியைத் தவிர இன்னும் சிலரை தீரன், ஃபேஸ்புக் மூலம் பாலியல்ரீதியாக ஏமாற்றி நகை, பணத்தைப் பறித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிந்திருக்கிறது. தன்னை போலீஸ் நெருங்கு வதை உணர்ந்த தீரன், தனது செல்போனை எங்கேயோ பத்திரப்படுத்திவிட்டார். அதைத் தேடிவரும் போலீஸார், தீரனின் நண்பர்கள் சிலரிடமும் விசாரித்துவருகிறார்கள்.

சட்டம் ஒருபக்கம் இப்படியான கொடூரர் களைத் தண்டித்தாலும், இவனைப் போன்றவர் களால் பாதிக்கப்பட்டவர்கள், ‘பெருவாழ்வென’ வாழ்ந்துகாட்டுவதே, துரோகிகளுக்கான உண்மையான தண்டனையாக இருக்கும்.