அலசல்
Published:Updated:

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்! - எங்கே போச்சு 16,000 டன்?

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்
பிரீமியம் ஸ்டோரி
News
அம்மோனியம் நைட்ரேட் அபாயம்

ஒரு விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகுதான் அது பற்றிய எச்சரிக்கை உணர்வே அரசுக்கு ஏற்படுகிறது.

ஆந்திர மாநிலம், நெல்லூரில் செப்டம்பர் 2007-ல் நடந்த வெடிகுண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று அந்த மாநிலத்தையே அதிரவைத்தது. முன்னாள் முதல்வர் ஜனார்த்தன ரெட்டியைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலில் மூன்று பேர் பலியானார்கள். அதிர்ஷ்டவசமாக ஜனார்த்தன ரெட்டி உயிர்பிழைத்தார். மாவோயிஸ்ட்டுகளால் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, அம்மோனியம் நைட்ரேட்டால் தயாரிக்கப்பட்டிருந்தது.

வேளாண் உரப்பொருள் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருளான அம்மோனியம் நைட்ரேட்டை, மாவோயிஸ்ட்டுகள் வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படுத்துவதை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்தனர். அந்தச் சம்பவம் நடந்து மூன்று வருடங்கள் கழித்து, விசாகப்பட்டினத்திலிருந்து ராய்ப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட

16.5 டன் அம்மோனியம் நைட்ரேட் மாவோயிஸ்ட்டுகளால் கடத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மாவோயிஸ்ட்டுகளால் நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதல்கள் அனைத்திலும் அம்மோனியம் நைட்ரேட் கலந்திருந்தது. கடந்த ஆண்டு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் உயிர்களைப் பலி வாங்கிய கோரத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டும் அம்மோனியம் நைட்ரேட் கலவைதான். இப்படிப்பட்ட வேதிப் பொருளைத்தான் 37 கன்டெய்னர்களில் அடைத்து, ஐந்து வருடங்களாக மணலியில் ஓரங்கட்டி வைத்துள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள்.

தேவை முன்னெச்சரிக்கை!

ஒரு விவகாரம் பூதாகரமாக வெடித்த பிறகுதான் அது பற்றிய எச்சரிக்கை உணர்வே அரசுக்கு ஏற்படுகிறது. கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 94 குழந்தைகளை பலிகொடுத்த பிறகுதான் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள். ஸ்ரீரங்கம் திருமண மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டு 64 பேர் பலியானதைத் தொடர்ந்துதான், ‘மண்டபங்களில் இரண்டு வழிகளை அமைக்க வேண்டும்’ என்கிற விதிமுறையைக் கட்டாயமாக்கினார்கள். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி கொல்லப்பட்ட பிறகே அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

`இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல நூறு உயிர்களைப் பலி கொடுத்தால்தான் அரசுக்கு அக்கறை வருமா...’ என்கிற கேள்வியைப் பல ஆண்டுகளாக, பலரும் கேட்டுவருகிறார்கள். ஆனால், அரசிடம்தான் பதில் இல்லை; நடவடிக்கையும் இல்லை. லெபனானில் அம்மோனியம் நைட்ரேட் வெடி விபத்து மட்டும் நடக்கவில்லையென்றால், இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் தகவல் யாருக்கும் தெரிந்திருக்காது.

அம்மோனியம் நைட்ரேட் அபாயம்! - எங்கே போச்சு 16,000 டன்?

கரூர் `பகீர்’!

கரூர், ராயனூர் பகுதியிலிருக்கும் ஸ்ரீஅம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம், கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சிறிய அளவில் அம்மோனியம் நைட்ரேட்டை வாங்கி, பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்துவந்தது. இந்த நிலையில், கரூரைச் சுற்றிலும் கல் குவாரிகள் பெருகின. வெடிமருந்து தேவை அதிகரித்தது. இதற்காக அந்த நிறுவனம் அம்மோனியம் நைட்ரேட்டை அதிக அளவில் இறக்குமதி செய்ய முடிவெடுத்தது. கடந்த 2015-ம் ஆண்டு கொரியாவிலிருந்து 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்தது அந்த நிறுவனம்.

2012-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘அம்மோனியம் நைட்ரேட் சட்டத் திருத்த’த்தின்படி, இந்த வேதிப் பொருளை விற்பதற்கு ‘பி 3’ லைசென்ஸ் அவசியம். அதேபோல, இறக்குமதி செய்வதற்கு ‘பி 5’ லைசென்ஸ் கட்டாயம். 2014-ம் ஆண்டு ‘பி 3’ லைசென்ஸ் பெற்ற ஸ்ரீஅம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம், கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து அம்மோனியம் நைட்ரேட்டை இறக்குமதி செய்ய ஆர்டர் கொடுத்துள்ளது. அத்துடன் ‘பி 5’ லைசென்ஸுக்கும் விண்ணப்பித்திருக்கிறது.

இறக்குமதிக்கான லைசென்ஸ் கிடைக்காத நிலையில், விற்பனைக்கான லைசென்ஸ் மட்டுமே வைத்திருக்கும் நிறுவனத்தால் செப்டம்பர் 2015-ல் சென்னை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த அம்மோனியம் நைட்ரேட்டை வெளியே எடுக்க முடியவில்லை. மேலும், இந்த நிறுவனத்துக்கு ஏற்கெனவே அளித்திருந்த ‘பி 3’ லைசென்ஸையும் வெடி பொருள்கள் தலைமைக் கட்டுப்பாட்டாளர் ரத்து செய்துவிட்டார்.

மொத்தம் 37 கன்டெய்னர்களில் வந்த 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை நவம்பர் 2015-ல் பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், மணலியிலுள்ள கன்டெய்னர் சேமிப்புக் கிடங்குக்கு அதைக் கொண்டு சென்றனர். தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்த்து அந்த நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

16,000 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே?

இந்த வழக்கில் 2016-ம் ஆண்டு, ஆகஸ்ட் 11-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ‘2012-ம் ஆண்டு மட்டும் ஏறத்தாழ 4,000 டன் அம்மோனியம் நைட்ரேட் நாடு முழுவதும் காணாமல் போயிருப்பதை மத்திய உளவுத்துறை உறுதிப்படுத்தி யிருக்கிறது. மேலும், ‘2013-ம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 16,000 டன் அம்மோனியம் நைட்ரேட் எங்கே சென்றது எனத் தெரியவில்லை. 20 கிலோ அம்மோனியம் நைட்ரேட்டிலிருந்து 20 வெடிகுண்டுகள் சுலபமாகத் தயாரிக்க முடியும். அரசு ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு மெத்தனமாக இருக்கிறது?’ என்று நீதிமன்றம் கண்டித்த விஷயம் நாடு முழுவதும் `பகீர்’ கிளப்பியது. ‘இவ்வளவு சீரியஸான விஷயத்தில் அரசுத்துறை அதிகாரிகள்தான் முடிவெடுக்க வேண்டும். ‘பி 5’ லைசென்ஸ் வழங்குவது குறித்து நாங்கள் எதுவும் சொல்ல முடியாது’ என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இந்த வழக்கு 2019-ம் ஆண்டு மேல்முறையீட்டுக்குச் சென்றபோதும் பழைய தீர்ப்பையே உயர் நீதிமன்றம் உறுதிசெய்தது.

மேற்கண்ட விவகாரம் குறித்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். “பெயர் வேண்டாம்” என்கிற நிபந்தனையுடன் பேசியவர், “740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஏலத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு 200 டன் விற்கப்பட்டுள்ளது. விரைவில் மீதமுள்ள அம்மோனியம் நைட்ரேட்டும் அப்புறப்படுத்தப்படும்” என்றவரிடம் “சுமார் 43 டன் அம்மோனியம் நைட்ரேட் சென்னை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறுகிறார்களே?” என்று கேட்டோம். “அது வதந்தி” என்று முடித்துக்கொண்டார் அந்த அதிகாரி.

பாலு
பாலு

கரூர், ஸ்ரீஅம்மன் கெமிக்கல்ஸ் கம்பெனியின் குடோனுக்கு விசிட் அடித்தோம். கட்டடத்துக்கு வெளியில் நின்ற டெம்போ வேன்கள் துருப்பிடித்துப்போயிருந்தன. குடோனுக்குள் எதுவும் இல்லை. ஆள் அரவமற்ற சூழல் நிலவியது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான குமரேசனைத் தொடர்புகொள்ள முயன்றோம். பலமுறை தொடர்புகொண்டும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. இது குறித்து விளக்கம் அளிக்கும்பட்சத்தில் அவரது விளக்கமும் பிரசுரிக்கப்படும்.

இதுகுறித்து மாசுக்கட்டுபாடு வாரியத்தின் கரூர் மாவட்டப் பொறியாளர் ரவிச்சந்திரனிடம் பேசினோம். “என்னையும் உயரதிகாரிகள் இது குறித்து விசாரிக்கச் சொன்னார்கள். அவர்கள் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தால், ஸ்ரீஅம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம், அங்கு செயல்பட்டு வந்ததே ­­­­­பலருக்கும் தெரியவில்லை. இருந்தாலும் தொடர்ந்து விசாரித்துவருகிறோம்” என்றார்.

மத்திய அரசும் தமிழக அரசும் உடனடியாக ஒரு குழு அமைத்து, இது போன்ற அபாயகரமான ரசாயனங்கள் குவித்துவைக்கப்பட்டுள்ள இடங்களை ஆய்வு செய்து, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

`வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்’ என்ற திருக்குறளை அரசும் அதிகாரிகளும் அவசியம் வாசிக்க வேண்டும்.

காத்திருக்கும் ஆபத்துகள்!

அம்மோனியம் நைட்ரேட் மட்டுமல்ல... இதைப்போல மக்களின் உயிருக்கு, சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக, தமிழகத்தில் காத்திருக்கும் ஆபத்துகள் ஏராளம்.

ஈரோடு டு பங்களாதேஷ்

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சுபி.தளபதி அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தைச் கூறினார். “கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷில் 20 டன் ‘வொயிட் பொட்டாஷ்’ பயங்கரவாதிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டது. அந்த மூட்டைகளிலிருந்த பார்கோடை வைத்துப் பார்த்தபோது ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் உரக்கடையிலிருந்து அது அனுப்பப்பட்டது தெரியவந்தது. வொயிட் பொட்டாஷைப் போல நாம் விவசாயத்துக்குப் பயன்படுத்தும் பல பொருள்களை இப்படி முறைகேடாக அதிக அளவில் பதுக்கி அனுப்புகிறார்கள். இவையெல்லாம் பெரும் விளைவுகளை உண்டாக்கக்கூடும். எனவே, இதை அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும்” என்றார்.

அச்சுறுத்திய அரவங்காடு!

நீலகிரி மாவட்டத்திலிருக்கும் அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலையில் ராணுவ தளவாட உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆலையில் இருந்து கழிவுநீர் நேரடியாக அருகிலுள்ள ஓடையில் கலக்கப்பட்டு, அந்த நச்சுக் கழிவு பவானியில் கலப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் விளைவாக, பன்னாட்டு வன உயிர் நிதியம் (WWF) இந்த ஓடையின் நீரை ஆய்வு செய்து, மாசு கலக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து அறிக்கையைச் சமர்ப்பித்தது.

அச்சுறுத்தும் குரோமியக் கழிவுகள்

ராணிப்பேட்டை சிப்காட்டில் நிரந்தரமாக மூடப்பட்டுள்ள தமிழ்நாடு குரோமியத் தொழிற்சாலையில் 2.27 லட்சம் மெட்ரிக் டன் குரோமியக் கழிவுகள் மலைபோல் தேங்கிக் கிடக்கின்றன. இதனால், 3,500 வகையான ரசாயன மாசு நேரடியாக நிலம், நீர், காற்று ஆகியவற்றில் கலந்து மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடைக்கானல் மெர்க்குரி ஆபத்து!

கொடைக்கானல் தனியார் ஆலையில் பாதரசக் கழிவு டன் கணக்கில் குவிந்திருக்கிறது. இடையில் கடந்த

2019-ம் ஆண்டு கழிவுகளை அகற்றுவதாக ஆலைத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், கழிவுகள் அகற்றப்பட்டதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை. சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தி செய்யப்பட்ட பாதரசக் கழிவுகள் அங்கு குவிக்கப்பட்டிருப்பதால், சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

கோவையில் குவியும் மருத்துவக் கழிவுகள்

கோவை சுற்றுவட்டாரங்களில் வாளையார், வேலந்தாவளம், சி.கோபாலபுரம் ஆகிய மூன்று பகுதிகளில் கேரளாவிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதற்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் ம.தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஈஸ்வரன், “இப்போது இருக்கும் சட்டத்தை வைத்துக்கொண்டு இந்தக் குற்றங்களைக் குறைக்க முடியாது. சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும்” என்றார்.

மேட்டுப்பாளையம் விஸ்கோஸ் கழிவுகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியில் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் விஸ்கோஸ் ஆலை இயங்கிவந்தது. பவானி ஆற்றில் நச்சுக்கழிவுகள் கலந்ததை அடுத்து, கோவை மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். அவற்றைத் தொடர்ந்து, கடந்த 2001-ம் ஆண்டு அந்த ஆலை நிரந்தரமாக மூடப்பட்டது. அந்த ஆலை சல்ஃபர் ரசாயனத்தை அதிகமாகப் பயன்படுத்தியதால், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல் அடித்த எச்சரிக்கை பெல்!

வேலூர், காட்பாடி அருகே ஆந்திர மாநில எல்லையில் அமைந்திருக்கிறது, தமிழ்நாடு அரசின் ‘டெல்’ வெடிமருந்து நிறுவனம். கல்குவாரி, நிலக்கரி சுரங்கம், கடலுக்கு அடியில் பாறைகளைத் தகர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் 15 வகை அபாயகரமான வெடிமருந்துகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன.

2001-ல் தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 24 தொழிலாளர்கள் உடல் சிதறி இறந்தனர். பலர் கை கால்களை இழந்தனர். அதன் பிறகு இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட பவர் ஃபுல்லான ‘டைனமிக்’ என்னும் நைட்ரோ கிளிசரின் வெடிமருந்தை கள்ளச்சந்தையில் நக்சலைட்டுகள் வாங்கி, தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். தேசப் பாதுகாப்பு கருதி நைட்ரோ கிளிசரின் உற்பத்திக்குத் தடை விதித்தது மத்திய அரசு. இதற்கு பதிலாக திரவத்தைப் போலிருக்கும் ‘எம்.எம்.ஏ.எம்’ என்ற வெடிமருந்து தயாரிக்கப்பட்டது.