Published:Updated:

`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி

JAYAVEL B
`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி
`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி

தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள கடுமையான தண்ணீர்ப் பஞ்சத்தால் உணவகங்கள், மால்கள், மென்பொருள் நிறுவனங்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்கள் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துவருகிறார்கள். இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றும் மாணவர்களுக்கு அரைநாள் மட்டுமே வகுப்பு நடைபெறும் என அறிவித்திருக்கிறது. தகவல் அறிந்து வந்த காஞ்சிபுரம் மாவட்ட கல்வி அதிகாரி, பள்ளியை ஆய்வுசெய்து விசாரணை நடத்தியுள்ளார்.

`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி

தமிழகம் முழுவதும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவுகிறது என்றாலும், அதிக மக்கள் தொகையைக் கொண்ட சென்னை மாநகராட்சியின் நிலை பரிதாபமாக இருக்கிறது. சென்னையின் தண்ணீர் தேவையை தமிழக அரசால் பூர்த்திசெய்ய இயலவில்லை. காஞ்சிபுரம், திருவள்ளூர் என சுற்றுவட்டார மாவட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு பல மில்லியன் லிட்டர் தண்ணீர் தினமும் உறிஞ்சப்பட்டு லாரிகளில் சென்னைக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. காஞ்சிபுரம் பகுதியில் ஏற்கெனவே நிலத்தடி நீர் உள்ளே சென்றுவிட்ட நிலையில், தண்ணீர் லாரிகளால் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்துவருகிறது.

`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி

காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவில் இயங்கிவரும் கத்ரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் குடிநீர் மற்றும் பிற தேவைக்காக ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீரை எடுத்துப் பயன்படுத்திவந்தனர். இந்த நிலையில் ,அந்தப் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. 400 அடிக்கு மேல் ஆழ்துளைக் கிணறு அமைத்தும் தண்ணீர் வரவில்லை. இதன் காரணமாக, பள்ளி மாணவர்களின் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்காகத்  தனியார் மற்றும் நகராட்சியிடம் இருந்து குடிநீரைப் பெற்றுவந்தனர். குடிநீருக்கான கட்டணம் அதிகரித்துவிட்ட நிலையில், மாணவர்களின் குடிநீர் தேவையை அந்தப் பள்ளியால் பூர்த்திசெய்ய முடியவில்லை. இதனால், அந்தப் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலையில் மட்டும் வகுப்புகள் நடைபெறும் என்றும்,  மதியம் விடுமுறை விடப்பட்டுள்ளதாகவும் இன்று பள்ளி தரப்பில் அறிவிப்புப் பலகை வைத்தனர். இது, சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பானது.

`தண்ணீர்ப் பிரச்னை எதிரொலி!'- அரைநாள் விடுமுறை அளித்த காஞ்சிபுரம் தனியார் பள்ளி

தகவல் அறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமையில், அதிகாரிகள் அந்தப் பள்ளியை ஆய்வுசெய்தனர். எவ்வித முன்னனுமதியும் பெறாமல் தன்னிச்சையாக முடிவெடுத்த பள்ளி நிர்வாகத்தை அதிகாரிகள் கண்டித்தனர். மேலும், 6000 லிட்டர் கேன் பள்ளி தரப்பில் வாங்கப்பட்டு, அதில் தினமும் 6000 லிட்டர் அளவிற்கு காஞ்சிபுரம் நகராட்சி மூலமாகத் தண்ணீர் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வழக்கம்போல் பள்ளி இயங்கும் என  உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என கல்வி அதிகாரி மகேஸ்வரி, பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Vikatan