Published:Updated:

‘அரசியல் வேண்டாம் என்றார் ’ - மும்பையில் அமிதாப் அறிவுரைகளை பட்டியலிட்ட ரஜினி #NowAtVikatan

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

16.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

16 Dec 2019 9 AM

ஜார்க்கண்டில் நான்காம் கட்ட வாக்குப்பதிவு!

ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு
ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு
ANI

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. 15 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20 வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ம் தேதி எண்ணப்பட்டு அன்றே, முடிவுகளும் அறிவிக்கப்படவிருக்கின்றன.

16 Dec 2019 9 AM

வேட்மனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு!

மாநிலத் தேர்தல் ஆணையம்
மாநிலத் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ளது. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (டிசம்பர் 17) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் டிசம்பர் 19 என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் 19ம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் பணிகளைக் கண்காணிக்க மாவட்டத்துக்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி வீதம் 27 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

16 Dec 2019 9 AM

தாக்குதல் வேதனையளிக்கிறது!

மாணவர்கள் மீதான தாக்குதல் வேதனையளிப்பதாக டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.

நஜ்மா
நஜ்மா
Twitter

இதுகுறித்து பேசிய அவர், ``என்னுடைய மாணவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. எந்தவொரு அனுமதியும் இல்லாமல் டெல்லி போலீஸார், பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்திருக்கிறார்கள். மாணவர்கள் மீது அவர்கள் லத்தி சார்ஜ் செய்ததை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற கடினமான சூழலில் நீங்கள் மட்டும் தனியாகப் போராடவில்லை என்பதை மாணவர்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியிருக்கிறார். வன்முறை மற்றும் போராட்டம் காரணமாக ஜே.எம்.இ பல்கலைக்கழகம் வரும் ஜனவரி 5ம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறத் தொடங்கியிருக்கின்றனர்.

16 Dec 2019 10 AM

புதிய உச்சம்தொட்ட பங்குச்சந்தை!

மும்பைப் பங்குச்சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், திங்கள்கிழமை காலை வர்த்தகத்தில் 175 புள்ளிகள் அதிகரித்து 41,185.03 என்ற புள்ளியில் வர்த்தகமானது. சென்செக்ஸ் வரலாற்றில் இது புதிய உச்சமாகும். கோடாக் மஹிந்திரா, ஹெச்.சி.எல் டெக், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், பஜாஜ் ஆட்டோ மற்றும் எஸ்.பி.ஐ நிறுவனப் பங்குகள் வர்த்தகத் தொடக்கத்தில் ஏற்றம் கண்டன.

16 Dec 2019 10 AM

உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் வழக்கு!

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்தநிலையில், அந்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. இதை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று குறிப்பிடவுள்ளது. குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது மக்கள் நீதி மய்யமும் வழக்குத் தொடர்ந்துள்ளது.

16 Dec 2019 12 PM

லக்னோவில் மாணவர்கள் போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக லக்னோவின் நட்வா கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸாரை நோக்கிச் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரியின் வாயிலை வெளிப்புறமாக போலீஸார் பூட்டினர். டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாகவும் அவர்கள் கோஷமிட்டனர்.

இதுகுறித்து பேசிய லக்னோ எஸ்.பி கலாநிதி நைதானி, ``கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தின்போது கூடிய 150க்கும் மேற்பட்டோர் ஏறக்குறைய 30 விநாடிகளுக்குக் கல்வீச்சில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்'' என்றார்.

16 Dec 2019 12 PM

ரசிகைக்கு வளையல் அணிவித்த ரஜினி!

ரசிகைக்கு வளையல் அணிவிக்கும் ரஜினி
ரசிகைக்கு வளையல் அணிவிக்கும் ரஜினி

நிறைமாத கர்ப்பிணியான ராகவா விக்னேஷ் என்பவரின் மனைவி ஜெகதீஷ்வரி ஆசையை ஏற்று தந்தை ஸ்தானத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் வளையல் அணிவித்தார்.

16 Dec 2019 4 PM

மாங்ரோவ் காடுகளில் உல்லாச பயணம்...சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி...புதுச்சேரியில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பகுதியை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம்.

16 Dec 2019 1 PM

தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும் என நேற்று டெல்லி ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்கள் மீது தடியடி நடத்தியதால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. பின்னர் ஜேஎம்இ மாணவர்களுக்கு ஆதரவாகவும் காவலர்களுக்குக் கண்டனம் தெரிவித்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற பல இடங்களில் மாணவர்கள் சாலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

16 Dec 2019 4 PM

கேரளாவில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்க்கு எதிராக ஓரே மேடையில் இணைந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி தலைவர்கள்..!!

16 Dec 2019 3 PM

எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி

உன்னாவ் பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் அறிவித்துள்ளது. தண்டனை விவரம் டிசம்பர் 19-ம் தேதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 Dec 2019 4 PM

மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக வழக்கு!

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 -ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் மாநில தேர்தல் ஆணையருக்கு எதிராக தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையர் பின்பற்றவில்லை என இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

16 Dec 2019 4 PM

பிரியங்கா காந்தி தர்ணா!

குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள், மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டகாரர்களுக்கு எதிராக போலீஸார் தடியடி நடத்தியதும், பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் டெல்லி இந்தியா கேட் பகுதியில் உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

16 Dec 2019 8 PM

மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்!

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நீடித்து வரும் நிலையில், சட்டம் ஒழுங்கை காக்க அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் சட்ட ஒழுங்கை சீர்குலைக்க முயற்சிப்பவர்களுக்கும் வதந்திகளை பரப்புபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

16 Dec 2019 9 PM

அரசியல் வேண்டாம் என்றார்!

தர்பார் பட டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினி “ அமிதாப் பச்சன் மூன்று விஷயங்களை கடைபிடிக்கும்படி எனக்கு அறிவுரை வழங்கினார். உடற்பயிற்சி செய்ய வேண்டும். எப்போதும் பிஸியாக இருக்க வேண்டும், அரசியலில் நுழையக்கூடாது. முதல் இரண்டு அறிவுரைகளை நான் பின்பற்றுகிறேன். சில காரணங்களால் மூன்றாவது விஷயத்தை என்னால் பின்பற்ற முடியவில்லை என்றார்.

அடுத்த கட்டுரைக்கு