Published:Updated:

`ஊழியர் ஒருவரின் தவறு அது!' - சர்ச்சைக்கு வெங்கய்ய நாயுடு விளக்கம் #NowAtVikatan

16.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

வெங்கய்ய நாயுடு
வெங்கய்ய நாயுடு
16 Jan 2020 11 AM

நமச்சிவாயம் மீண்டும் தேர்வு!

புதுச்சேரி பா.ஜ.க தலைவராக நமச்சிவாயம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். மத்திய அமைச்சர் பிரகலாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு முதல் புதுச்சேரி பா.ஜ.க தலைவராக நமச்சிவாயம் இருந்துவந்த நிலையில், தற்போது மீண்டும் அவரே தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நியமன எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார்.

16 Jan 2020 11 AM

பாலமேட்டில் களைகட்டும் ஜல்லிக்கட்டு!

மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்துவருகிறது.

ஆண்டுதோறும் தை முதல் நாளில் அவனியாபுரத்திலும் தை இரண்டு மற்றும் மூன்று ஆகிய நாள்களில் முறையே பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், தை முதல்நாளான நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு சீரும் சிறப்புமாக நடந்து முடிந்தது. தை இரண்டாவது நாளான இன்று மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் 700 காளைகளும், 936 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

படங்கள்: என்.ஜி.மணிகண்டன், ஆர்.எம்.முத்துராஜ்

16 Jan 2020 1 PM

பா.ஜ.க தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு?

பா.ஜ.க தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு வரும் 20ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.

பா.ஜ.க தேசியத் தலைவராக உள்துறை அமைச்சர் அமித் ஷா இருந்து வருகிறார். இந்தநிலையில், பா.ஜ.க செயல்தலைவராக இருக்கும் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, விரைவில் பா.ஜ.க தேசியத் தலைவராகத் தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு வரும் 20ம் தேதி வெளியாகும் என்றும், கட்சியின் தேசியத் தலைவராக அவர் வரும் 22ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் என்றும் பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது.

16 Jan 2020 3 PM

`ஜல்லிக்கட்டு' - தமிழக பா.ஜ.கவின் ட்வீட் சர்ச்சை

ஜல்லிக்கட்டு இந்துக்கள் பண்டிகை என தமிழக பா.ஜ.கவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. தை முதல் நாளில் அவனியாபுரம், இரண்டாவது நாளான இன்று பாலமேடு என ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டி வருகின்றன.

இந்தநிலையில், தமிழக பா.ஜ.கவின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில், ``அர்ச்சுனன் வீரத்தை சோதிக்க சிவன் வேடுவன் வடிவத்தில் அர்ச்சுனனுடன் மல்யுத்தம் செய்யும்போது இறைவனை தழுவுகின்ற வாய்ப்பு அர்ச்சுனனுக்கு கிட்டுகிறது. இந்த நிகழ்வை கொண்டு சிவனின் வாகனமாகிய நந்தியின் அம்சமான காளையோடு ஏறுதழுவுதலை ``இந்துக்கள்" பின்பற்றி வருகின்றனர்'' என்று பதிவிடப்பட்டிருக்கிறது.

16 Jan 2020 5 PM

`ஊழியர் ஒருவரின் தவறு அது!'

திருவள்ளுவர் காவி உடையில் இருப்பது போன்று துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர், அந்த ட்வீட் நீக்கப்பட்டது.

இந்தநிலையில், இதுகுறித்து துணை ஜனாதிபதி அலுவலகம் விளக்கமளித்திருக்கிறது. இதுதொடர்பாக தனது அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில், ``துணை ஜனாதிபதி அலுவலக ஊழியர் ஒருவர் தவறுதலாக அந்த ட்வீட்டைப் பதிவு செய்துவிட்டார். அது கவனத்துக்கு வந்ததும் உடனடியாக நீக்கப்பட்டது'' என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.