Election bannerElection banner
Published:Updated:

மேட்டுக்குப்பம்: காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது! #NowAtVikatan

விவேக்
விவேக்

17-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Apr 2021 6 PM

காவல்துறை மரியாதையுடன் நடிகர் விவேக் உடல் தகனம்!

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள், கையில் மரக்கன்றுகள் ஏந்தி வந்து அஞ்சலி செலுத்தினர்.

நடிகர் விவேக்
நடிகர் விவேக்

மாலை 4:30 மணி அளவில் இறுதி ஊர்வலம் தொடங்கிய நிலையில், மாலை 6 மணி அளவில், மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது

17 Apr 2021 4 PM

மறைந்த நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம்!

17 Apr 2021 1 PM

நடிகர் விவேக்கின் இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும் - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசு அறிவிப்பு

மாரடைப்பால் இன்று காலை மறைந்த நடிகர் விவேக்குக்கு, காவல்துறை மரியாதை அளிக்க, தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்தது தமிழக அரசு. இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், ``தமிழ்த் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் `சின்ன கலைவாணர்’ என்று அழைக்கப்படுபவர், தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிப்பால் புகழ்பெற்றவரும், தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு விருதுகளை பெற்றவரும், தனது ஈடு இணையற்ற கலைச் சேவையாலும் சமூக சேவையாலும் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்தவரும், தமிழ்நாடு மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பிடித்த விவேக் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அன்னாரின் கலை மற்றும் சமூக சேவையை கௌரவிக்கும்விதமாகவும் அன்னாரின் இறுதிச்சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

17 Apr 2021 12 PM

நடிகர் விவேக் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்குத் திரை உலகினர் மட்டுமல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில், ``பிரபல நடிகர் விவேக்கின் மரணம் பலரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வும், புத்திசாலித்தனமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. அவரின் படங்களிலும், வாழ்க்கையிலும், சுற்றுச்சூழல் மற்றும் சமுதாயத்தின் மீதான அவரின் அக்கறை பிரகாசமாகத் தெரியும். அவரின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துகொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பலர் தங்களின் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.

17 Apr 2021 10 AM

கும்பமேளா: பிரதமர் மோடி கோரிக்கை!

கொரோனா இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் வேளையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடக்கும் கும்பமேளாவில் பல லட்சம் பேர் பங்கேற்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. 14-ம் தேதி ஒரு நாள் மட்டும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பலரையும் கலங்கடித்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அங்கே ஒன்று கூடுவதால் அதன் மூலம் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பரவல் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மோடி
மோடி

இந்தநிலையில் பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பதிவில், ``ஆச்சார்யா சுவாமி அவ்தேஷானந்த் கிரி ஜி-யிடம் இன்று தொலைபேசியில் பேசினேன். அனைத்து சாதுக்களின் ஆரோக்கியம் குறித்து விசாரித்தேன். இந்த விவகாரத்தைச் சீராக நடத்துவதற்கு அனைத்து சாதுக்களும் நிர்வாகத்துக்கு ஆதரவை வழங்குகிறார்கள், அதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்தேன். இப்போது இரண்டு புனித நீராடல் நடந்துவிட்டது. கொரோனா வைரஸ் நெருக்கடியால் கும்பமேளாவைப் பெயரளவில் மட்டும் நடத்திக்கொள்ளுமாறு அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன். இது வைரஸுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்துக்கு பலம் தரும்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தநிலையில் சுவாமி அவ்தேஷானந்த் தனது ட்விட்டர் பதிவில், ``பிரதமரின் அழைப்பை நாங்கள் மதிக்கிறோம். உயிரைப் பாதுகாப்பது ஒரு பெரிய நல்லொழுக்கம். கொரோனா சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் புனித நீராட வர வேண்டாம். விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

17 Apr 2021 9 AM

ஒரே நாளில் 2,34,692 பேருக்கு தொற்று!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,45,26,609 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா
கொரோனா

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,341. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,75,649-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 16,79,740 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.

17 Apr 2021 7 AM

சட்டப்பேரவைத் தேர்தல் மறுவாக்குப்பதிவு!

 வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு
மாதிரிப் படம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது. அன்றைய தினம், சென்னை வேளச்சேரி தொகுதியில் 92-வது எண் ஆண்கள் வாக்குச்சாவடியிலிருந்து இரண்டு மின்னணு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒரு விவி பாட் இயந்திரத்தை விதிகளை மீறி இருசக்கர வாகனத்தில் ஊழியர்கள் எடுத்துச் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பழுதடைந்த இயந்திரங்களை எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்டாலும், அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த வாக்குச்சாவடியில் மட்டும் 17-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரையில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

17 Apr 2021 7 AM

நடிகர் விவேக் காலமானார்!

விவேக்
விவேக்

திடீர் நெஞ்சுவலி காரணமாக நடிகர் விவேக் நேற்று காலை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மாரடைப்பு என மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் இன்று அதிகாலை நடிகர் விவேக் காலமானார். இன்று அதிகாலை 4:30 மணிக்கு உயிர் பிரிந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது அவரது உடல், அஞ்சலி நிகழ்வுக்காக சென்னை சாலிகிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விவேக்கின் மறைவு திரை உலகினர் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் விவேக் காலமானார்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு