Published:Updated:

முதல்வரைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்! #NowAtVikatan

 ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

17-05-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 May 2021 12 PM

முதல்வரைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்!

தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த் . மேலும் , "தமிழக அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாடுகளை கடைபிடித்தால்தான் கொரோனாவை ஒழிக்க முடியும். அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும்" என பொது மக்களுக்கு கோரிக்கை வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்.

17 May 2021 11 AM

புதிய கல்விக் கொள்கை - புறக்கணித்தது தமிழக அரசு!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, இன்று அனைத்து மாநில கல்வித்துறை செயலர்களுடன் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்துகிறார். இதில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் கல்வித்துறையில் ஏற்படுத்திய தாக்கம் குறித்தும் கருத்து கேட்டு ஆய்வு செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

இணையவழி நடைபெறும் கூட்டத்தில் (Virtual Meeting), புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்துவது மற்றும் இணையவழி கல்வி கற்றலை (Online Education) மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து திறனாய்வு செய்யும்விதமாக கலந்தாலோசனைக் கூட்டம் அமையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஏற்கெனவே திட்டமிட்டபடி மத்திய அமைச்சர் ஆலோசனைக் கூட்டத்தைத் தொடங்கினார். இந்தநிலையில், இந்தக் கூட்டத்தை தமிழகம் புறக்கணித்திருக்கிறது. முன்னதாக மாநில கல்வி அமைச்சர்களுடன் ஆலோசிக்க வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கோரிக்கை விடுத்திருந்தார். புதிய கல்விக் கொள்கையை எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில் அமல்படுத்த முடியாது என தமிழக அரசு முடிவு செய்திருந்த நிலையில் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருக்கிறது தமிழக அரசு.

17 May 2021 10 AM

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார் காலமானார்!

தஞ்சை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார், வயது மூப்பு காரணத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93.

முதல்வரைச் சந்தித்து கொரோனா நிவாரண நிதி வழங்கினார் நடிகர் ரஜினிகாந்த்! 
#NowAtVikatan

அவரது உடல் சொந்த ஊரான தஞ்சை பூண்டிக்கு கொண்டுவரப்படுகிறது. 1991 முதல் 1996-ம் ஆண்டு வரை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். `பூண்டி புஷ்பம்’ என்ற பெயரில் கல்லூரி நடத்தி சோழ மண்டலத்தில் ஏழை மாணவர்களின் கல்விக் கண்ணைத் திறந்தவர் என்பதால், `கல்விக் காவலர்’ என்றே தஞ்சை மக்களால் அழைக்கப்பட்டார்.

17 May 2021 10 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்! 

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,81,386 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,49,65,463 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,106. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,74,390-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,11,74,076-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 35,16,997 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 3,78,741 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,29,26,460 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது

17 May 2021 9 AM

`2-டிஜி கொரோனா தடுப்பு மருந்து!’ -இன்று முதல் விநியோகம்!

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ)-அமைப்பின் ஆய்வகமான இன்ஸ்டிட்யூட் ஆஃப் நியூக்ளியர் மெடிசன் அண்ட் அலைடு சயின்சஸ் (ஐஎன்எம்ஏஎஸ்), டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனத்துடன் இணைந்து டி-டியோக்ஸி டி-குளூக்கோஸ் (2-டிஜி) கொரோனா தடுப்பு மருந்து தயாரித்துள்ளது.

இந்தநிலையில் கடந்த 1-ம் தேதி டிஆர்டிஓ தயாரித்த 2-டிஜி மருந்தை அவசரகாலத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள டிசிஜிஐ அனுமதி அளித்துள்ளது. இந்த மருந்து உடலில் சென்று வைரஸால் பாதிக்கப்பட்ட செல்களை அடையாளம் கண்டுபிடித்து ஒருங்கிணைத்து, புதிதாக எந்த செல்லும் பாதிக்கப்படாமல் தடுத்து, வைரஸ் வளர்ச்சியையும் தடுக்கும் எனச் சொல்லப்படுகிறது.

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து
மாதிரி படம்

இந்தியாவில் இந்த மருந்து இன்று வெளியாகிறது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இதை வெளியிடுகின்றனர். முதலில் 10,000 பாக்கெட்டுகள் விநியோகிக்கப்படும் எனச் சொல்லப்படுகிறது.

சிறிய பாக்கெட்டில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வரும் 2டிஜி கொரோனா தடுப்பு மருந்தைத் தண்ணீரில் கலந்து நோயாளிகள் குடிக்கலாம். இதன் மூலம் ஆக்ஸிஜன் உதவியோடு இருக்கும் கொரோனா நோயாளிகள் விரைவில் அதிலிருந்து மீள முடியும் என்கிறார்கள் மருத்துவத்துறை சார்ந்த சிலர்.

அடுத்த கட்டுரைக்கு