Published:Updated:

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு நிறைவடைந்தது. #NowAtVikatan

ஸ்டாலின்
ஸ்டாலின்

17-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Jun 2021 5 PM

பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சந்திப்பு நிறைவடைந்தது.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்தார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். டெல்லி தமிழ்நாடு இல்லத்துக்குச் சென்ற ஸ்டாலினை தி.மு.க எம்.பி- க்கள் வரவேற்றனர். அதன் பிறகு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். அதன் பிறகு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் வழங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சந்திப்பு 25 நிமிடங்கள் நடந்துள்ளது.

17 Jun 2021 12 PM

முன்ஜாமீன் கேட்ட மதன்... கண்டித்த நீதிமன்றம்!

யூடியூபர் மதன் `பப்ஜி’ விளையாட்டில் தொடர்ந்து ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இந்தப் புகார் எழுந்தநிலையில் மதன் தலைமறைவானார். தொடர்ந்து புகார் வந்த நிலையில், மதனை போலீஸார் தேடிவந்தனர். இந்தநிலையில், மதன் தன் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார்.

யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்
யூடியூபர் 'டாக்ஸிக்' மதன்

மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ``மதனுக்கு எதிராக, சக போட்டி யூடியூபர்களே புகார் தெரிவித்துள்ளார்கள். பாதிக்கப்பட்டதாக யாரும் புகார் அளிக்கவில்லை” என வாதாடினார். எனினும், மதனுக்கு முன்ஜாமீன் கொடுக்கக் கூடாது என காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இந்தநிலையில் நீதிமன்றம், ``வீடியோக்களில் மதனின் பேச்சுகளைக் காது கொடுத்து கேட்க முடியவில்லை. குழந்தைகளைக் கெடுக்கும்விதத்திலும், பெண்களைக் கொச்சைப்படுத்தும்விதத்திலும் அவர் பேசியிருக்கிறார். மதனின் பேச்சைக் கேட்டுவிட்டு வாருங்கள்” என கண்டனம் தெரிவித்தது. இந்தநிலையில், மதன் இன்று சரணடையலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

17 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 67,208 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் தொடர்ந்து பத்தாவது நாளாக கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,97,00,313 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,330. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,81,903-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,84,91,670 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 8,26,740 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 1,03,570 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 26,55,19,251 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

17 Jun 2021 9 AM

சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவலில் எடுக்க தீவிரம்!

பாலியல் புகாரில் தேடப்பட்டுவந்த சிவசங்கர் பாபா, நேற்று டெல்லியில் கைதுசெய்யப்பட்டார். பின்னர் அவரை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.சி.ஐ.டி போலீஸார், நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர். தொடர்ந்து சென்னை எழும்பூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து சிவசங்கர் பாபாவிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இன்று காலை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை ஆஜர் செய்துவிட்டு, சி.பி.சி.ஐ.டி காவலில் எடுக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.

சிவசங்கர் பாபா
சிவசங்கர் பாபா

இதற்கிடையே சிவசங்கர் பாபாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக்கொண்டதும் உண்மை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

17 Jun 2021 7 AM

மோடியைச் சந்திக்க புறப்பட்டார் ஸ்டாலின்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று டெல்லியில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். முதல்வராகப் பதவியேற்ற பிறகு முதன்முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்தச் சந்திப்பின்போது, தமிழகத்தில் நீட் தேர்வு, ஜி.எஸ்.டி., காவிரி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பான கோரிக்கை மனுவையும் வழங்குவார். சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீட்டிலிருந்து காலை 7 மணிக்கு புறப்பட்ட ஸ்டாலின், விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார்.

ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடி

டெல்லியில், தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுக்கும் ஸ்டாலின், மாலையில் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார். சந்திப்பு முடிந்த பின்னர் மீண்டும் இரவில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குகிறார். பின்னர் நாளை தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் ஸ்டாலின். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஸ்டாலின் சந்திக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது!

அடுத்த கட்டுரைக்கு