Published:Updated:

திருப்பூர் கொத்தடிமைக் கொடுமை!

பாதி சம்பளம்... பாதி சாப்பாடு... 14 மணி நேர வேலை

பிரீமியம் ஸ்டோரி

‘மூன்று வேளைச் சாப்பாட்டுடன் பணமும் கிடைக்கிறது!’ என்ற கவர்ச்சி வாக்கியம் தான் ஏழைகளைச் சுரண்டுவதற்கான, எப்போதைக்குமான ஆயுதம். கொரோனா ஊரடங்கால் பள்ளிக்குச் செல்லாத, வறுமை மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்த 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள் திருப்பூர் மில்களில் கடுமையான வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள். சமூக ஆர்வலர் ஒருவரின் முயற்சியால் 174 குழந்தைகள் அங்கிருந்து மீட்கப்பட்டிருக்கின்றனர். இது குறித்துத் தகவலறிய களத்தில் இறங்கினோம்.

இந்தக் குழந்தைகளை மீட்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவபாபுவிடம் பேசினோம். “கடலாடி கிராமத்திலிருந்து சின்னக் குழந்தைங்க நிறைய பேர் திருப்பூர் மில்லுக்கு அனுப்பப்பட்டிருப் பதாக ஒரு நண்பர் சொன்னார். என் நண்பரில் ஒருவரும்கூட அவரின் குழந்தையை அங்கு அனுப்பியிருப்பது தெரியவந்தது. அந்தக் குழந்தையை அழைத்துவர நண்பரும் நானும் திருப்பூர் போனோம். ‘சென்னியப்பா யார்ன் ஸ்பின்னர்ஸ் (பி) லிமிடெட்’ங்கிற மில்லிலிருந்து அவருடைய குழந்தையைக் கூட்டிட்டு வரும்போது மில் விவரங்களைச் சேகரிச்சிட்டு வந்தேன். அதில், ஆறு குழந்தைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை மீட்டுத்தரச் சொல்லி, வக்கீல் மூலமா சென்னை ஹைகோர்ட்ல வழக்கு போட்டேன்.

திருப்பூர் கொத்தடிமைக் 
கொடுமை!

நீதிபதி விசாரித்து உத்தரவிட்ட பிறகு திருப்பூர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மில்லில் ஆய்வு செஞ்சு 174 குழந்தைகளை மீட்டிருக்காங்க. பல மாவட்டங்களைத் தாண்டி, இ-பாஸ் இல்லாம இந்தக் குழந்தைகளை திருவண்ணாமலை யிலருந்து திருப்பூருக்கு அழைச்சுட்டுப் போயிருக்காங்க. அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடந்திருக்குமா? கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங் களிலுள்ள மில்கள், கம்பெனிகள்ல இதுபோல 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் வேலையில அமர்த்தப் பட்டிருக்காங்க. அவர்களையும் மீட்டெடுக்கணும்னு நீதிமன்றத்தில் கேட்டிருக்கோம். ‘சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, ஆகஸ்ட் 20-ம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிபதியும் உத்தரவிட்டிருக்கிறார்” என்றார்.

குழந்தைகள் மீட்பு ஆபரேஷனில் இருந்த அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “சென்னியப்பா மில்லில் முதல் ரெய்டு ஜூலை 29-ம் தேதி நடந்தது. ‘ரெய்டு வர்றதா’ அதிகாரி ஒருவரே மில்லுக்குச் சொல்ல, மில்லில் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளை வேன் மூலமாக வெளியே அனுப்பியுள்ளனர். அதனால், அன்று 40 குழந்தைகளை மட்டுமே மீட்க முடிந்தது. நீதிமன்றம் அழுத்தம் கொடுத்த பிறகுதான் மீண்டும் ஆகஸ்ட் 6-ம் தேதி மாலை அதிகாரிகள் அந்த மில்லுக்கு சர்ப்ரைஸ் விசிட் செய்தார்கள். அப்போதுதான் 18 வயதுக்கு உட்பட்ட 134 குழந்தைகள் மீட்கப்பட்டார்கள். மீட்கப்பட்ட 174 பேரில், சுமார் 10 பேர்தான் ஆண் குழந்தைகள். மீதமுள்ள 164 பேரும் பெண் குழந்தைகள். மில்களில் பெண் குழந்தைகளை ஏன் அதிக எண்ணிக்கையில் வேலைக்கு எடுக்கிறார்கள் என்கிற கோணத்திலும் விசாரணை செய்ய வேண்டும்” என்று கொந்தளித்தார்.

திருப்பூர் கொத்தடிமைக் 
கொடுமை!

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் பிரேமலதா சொன்ன விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை. “குழந்தைங்க, ‘கால் வலிக்குது’னு சொல்லியும் 14 மணி நேரம் வரை நிக்கவெச்சு வேலை வாங்கியிருக்காங்க. வார்டன் ஃபோன்ல ஸ்பீக்கர் போட்டுத்தான் வீட்ல பேசவே அனுமதிச்சிருக்காங்க. இதனால, தங்களோட கஷ்டத்தைப் பெத்தவங்க கிட்ட சொல்ல முடியாம குழந்தைங்க தவிச்சிருக்காங்க. ‘நிறைய சாப்பிட்டா வேலை செய்ய முடியாது’னு சொல்லி சாப்பாடே குறைவாத்தான் கொடுத்திருக்காங்க. 8,000 ரூபாய் சம்பளம்னு சொல்லி கூட்டிட்டு வந்து பாதியைத் தான் கையில கொடுத் திருக்காங்க” என்றார் ஆதங்கத்துடன்.

இது குறித்து திருப்பூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் (சரகம்-1) ரஹ்மானிடம் பேசினோம். “நாங்க ரெகுலராக ஆய்வு செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம். உடல்தகுதிச் சான்றிதழ், லைசென்ஸ் அனுமதிக்கு அதிகமாகத் தொழிலாளர்களைப் பயன்படுத்தியது குறித்து கம்பெனிக்கு நோட்டீஸ் கொடுத்திருக்கோம். மேலும், பல மில்களில் ஆய்வு மேற்கொள்ளவிருக்கிறோம்” என்றார்.

சென்னியப்பா யார்ன் ஸ்பின்னர்ஸ் (பி) லிமிடெட் நிறுவனத்தின் பொதுமேலாளர் மணிவண்ணனோ, “பெற்றோர்களின் ஒப்புதலுடன், குழந்தைகளின் விருப்பத்துடன் தான் வேலைக்குச் சேர்த்தோம். வளரிளம் சிறார்கள் வேலை செய்வதற்கான ஃபிட்னெஸ் சர்டிஃபிகேட்டுக்கு அப்ளை செய்திருந்தோம். கொரோனாவால் அது கிடைக்க தாமதமாகிவிட்டது. எங்கள் வாகனத்துக்கு இ-பாஸ் பெற்றுத்தான் குழந்தை களை அழைத்துவந்தோம். சட்டத்துக்கு உட்பட்டு முறையாகத்தான் இயங்கிவருகிறோம். குறைவான சம்பளம் கொடுத்ததாகச் சொல்வது உண்மையல்ல” என்றார்.

சிவபாபு , விஜயகார்த்திகேயன்
சிவபாபு , விஜயகார்த்திகேயன்

திருப்பூர் கலெக்டர் விஜய கார்த்திகேயன், “முக்கியச் சாலைகளில் வராமல், மாற்றுவழி மூலமாகக் குழந்தைகளைத் திருப்பூருக்கு அழைத்து வந்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின்மீது வழக்கு பதிவுசெய்யப் பட்டிருக்கிறது. லேபர் டிபார்ட்மென்ட் மட்டுமல்லாமல், தனியாக ஒரு குழு அமைத்து இது மாதிரியான கம்பெனிகளை சர்ப்ரைஸ் விசிட் அடித்து ஆய்வுசெய்யச் சொல்லியிருக்கிறேன்.” என்றார்.

கொரோனோ இன்னும் என்னென்ன கொடுமைகளை அரங்கேற்றப்போகிறதோ!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு