Published:Updated:

மாணவர்கள் போராட்டம் எதிரொலி - சென்னை பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை #NowAtVikatan

 சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்

17.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

17 Dec 2019 2 PM

நிர்பயா வழக்கு விசாரணை - நீதிபதி பாப்டே திடீர் விலகல்!

டெல்லி நிர்பயா வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே திடீரென விலகியுள்ளார். டெல்லி நிர்பயா பாலியல் வன்கொடுமை குற்றவாளி அக்ஷய் குமார் சிங் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நாளை காலை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நீதிபதி பாப்டே விலகியுள்ளார். மேலும் நாளை காலை 10.30 மணிக்கு வேறுஒரு அமர்வு சீராய்வு மனுவை விசாரிக்கும் என்றும் தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார்.

17 Dec 2019 5 PM

சென்னை பல்கலைக்கழகத்துக்கு திடீர் விடுமுறை

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு நாளை முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் நாளை முதல் 23-ம் தேதி வரை நடைபெறவிருந்த வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

17 Dec 2019 4 PM

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு!

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து ஒன்றை ஆய்வு பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய 5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அமைச்சர்கள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கும். 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவில் செங்கோட்டையன், தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், அன்பழகன் உள்ளனர்.

17 Dec 2019 3 PM

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

போராட்டம்
போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மற்றும் உத்திரப்பிரதேசத்தின் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுடைய உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ள நிலையில் செமஸ்டர் விடுமுறையை உடனடியாக அமல்படுத்திய பல்கலைக் கழக நிர்வாகம் 24 மணி நேரத்திற்குள் மாணவர்கள் பல்கலைக்கழகத்தைவிட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.

17 Dec 2019 2 PM

`மத்தியில் நடப்பது கொடுமையான ஆட்சி'!

ஸ்டாலின்
ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. காஞ்சிபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், மத்திய அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். அதில், ``மக்களுக்கு பாதகம் செய்யும் ஆட்சியே பா.ஜ.க ஆட்சி. நாட்டு மக்களுக்காக பா.ஜ.க ஆட்சி செய்யவில்லை என்பதை உணர முடிகிறது. மக்களை பற்றி கவலைப்பட்டிருந்தால் பொருளாதாரத்தை உயர்த்தி இருப்பார்கள்.

எதையும் செய்யும் முடியாத கொடுமையான ஆட்சி மத்தியில் நடைபெறுகிறது. இஸ்லாமியர்களை நசுக்குவதே பா.ஜ.க-வின் நோக்கமாக உள்ளது. காஷ்மீரில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. பல 100 ஆண்டுகளாக வேற்றுமை இல்லாமல் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். அந்த ஒற்றுமையில் விஷம் கலக்கின்றது பா.ஜ.க அரசு" என ஆவேசமாக பேசினார். இதுகுறித்து உங்கள் கருத்துக்களை கீழே உள்ள ஆர்ட்டிகளில் பதிவு செய்யலாம்!

மத்திய ஆட்சி பற்றி மு.க.ஸ்டாலினின் கருத்துக்கு மக்களின் ரியாக்‌ஷன் என்ன? #VikatanPollResults
17 Dec 2019 12 PM

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பத்திரிகையாளர் சந்திப்பு

17 Dec 2019 12 PM

முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை!

முஷாரப்
முஷாரப்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேச துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இந்த தண்டனையை அறிவித்துள்ளது.

76 வயதாகும் முஷாரப் மீதான தேச துரோக வழக்கை மூன்று நீதிபதிகள் அடங்கிய சிறப்பு நீதிமன்ற அமர்வு விசாரித்தது. ராணுவ புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்த முஷாரப் 2007- ம் ஆண்டு அதிபாரக இருந்த போது அவசர நிலை பிரகடனம் செய்ததற்கு எதிராக 2013ம் ஆண்டு தேச துரோக வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் துபாய் மருத்துவமனையில் முஷாரப் சிகிச்சை எடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

17 Dec 2019 12 PM

அப்பன் வீட்டு சொத்து கிடையாது!

கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் ``இந்த பூமி எவனுக்கும் , அவன் அப்பன் வீட்டு சொத்து கிடையாது. இந்தியா மதசார்பற்ற நாடாக இருக்க குடியுரிமை சட்டம், என்ஆர்சி மற்றும் மாணவர்கள் மீதான போலீஸ் வன்முறைக்கு நோ சொல்லுங்கள்" என்று பேட்ட, பீட்சா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் ட்விட் செய்துள்ளார்.

17 Dec 2019 11 AM

தமிழகம் முழுவதும் தி.மு.க போராட்டம்!

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று தமிழகம் முழுவதும் தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

தி.மு.க போராட்டம்
தி.மு.க போராட்டம்

இதில் சட்டம் கொண்டுவந்த மத்திய அரசுக்கு எதிராகவும், அதற்கு ஆதரவு அளித்த அ.தி.மு.கவைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த போராட்டத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின், கனிமொழி, திருச்சி சிவா போன்ற பலர் கலந்துகொண்டுள்ளனர். மேலும் குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து தி.மு.க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

17 Dec 2019 10 AM

`துப்பாக்கிச்சூடு நடத்தவேயில்லை!'

குடியுரிமை போராட்டம்
குடியுரிமை போராட்டம்
AP

ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்திவெளியிட்டுள்ளது. மேலும் மாணவர்கள் போராட்டத்தில் வெடித்த வன்முறை தொடர்பாக ஏற்கெனவே 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும், சமூக விரோத கூறுகள் கண்காணிக்கப்படுகின்றன பல்கலைக்கழக வன்முறையில் அரங்கேறியதா என்பது கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

17 Dec 2019 10 AM

விண்ணை முட்டும் அளவுக்கு ராமர் கோயில்!

அமித் ஷா
அமித் ஷா

பகூர் நகரில் நடைபெற்றக் கூட்டத்தில் அமித் ஷா ராமர் கோயில் தொடர்பாக பேசினார். “உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி விட்டது. இன்னும் 4 மாதங்களில் விண்ணை முட்டும் அளவுக்கு பிரமாண்டமான ராமர் கோயில் கட்டும்பணி அயோத்தியில் கட்டப்படும்" என்றார்.

17 Dec 2019 9 AM

10 ரவுடிகள் கைது!

குடியுரிமை போராட்டம்
குடியுரிமை போராட்டம்
AP

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் 15ம் தேதி நடந்த வன்முறை தொடர்பாக ரவுடிகள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் மாணவர்கள் யாரும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படவில்லை. ஏற்கனவே வன்முறை தொடர்பாக வெளிவந்த புகைப்படங்களில் போலீஸுக்கும், மாணவர்களுக்கும் சம்பந்தம் இல்லாத வகையில் ஜீன்ஸ் உடையில் சிலர் மாணவர்களை தாக்கும் காட்சிகள் வெளியாகி இருந்தநிலையில் 10 ரவுடிகளை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ``கைது செய்யப்பட்ட 10 பேரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள். இதில் மாணவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை" என்று டெல்லி போலீஸ் அறிவித்துள்ளது.

17 Dec 2019 8 AM

பிரணாப் முகர்ஜி பேச்சு!

பிரணாப் முகர்ஜி
பிரணாப் முகர்ஜி

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்று நிர்மலா சீதாராமன் குற்றம் சாட்டியிருக்கிறார். இதற்கிடையே, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி குடியுரிமைச் சட்டத்துக்குப் பதிலளிக்கும்விதமாகப் பேசியுள்ளார். டெல்லியில் நடந்த விழா ஒன்றில் பேசிய அவர், ``பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்று நினைக்கக் கூடாது. மக்கள் விருப்பத்துக்கு மாறாக அரசு நடந்து, அதற்கான தண்டனையும் அடுத்த தேர்தலில் மக்கள் வழங்கியுள்ளனர். வாக்களித்த மக்கள் மட்டுமன்றி வாக்களிக்காத மக்களின் கருத்துகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" எனக் கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு