Published:Updated:

`தவானின் க்ளாஸ்; ராகுலின் மாஸ்!’- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 340 ரன்கள் குவித்த இந்தியா #NowAtVikatan

ராகுல்
ராகுல்

17.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

17 Jan 2020 5 PM

ஜல்லிக்கட்டு அப்டேட்ஸ்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை தழுவிய ரஞ்சித்துக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டுள்ளது. 14 காளையை தழுவிய கார்த்திக்குக்கு 2-வது பரிசும் 13 காளைகளை தழுவிய பிரவீனுக்கு 3 -வது பரிசும் கிடைத்துள்ளது. கருப்பன் காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டது. ராவணன் காளைக்கு 2வது இடம் கிடைத்தது.

17 Jan 2020 5 PM

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 340 ரன்கள் குவித்த இந்தியா

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் எடுத்துள்ளது. இறுதிக்கட்டத்தில் ராகுலின் அதிரடியான ஆட்டம் காரணமாக இந்திய அணி இந்த ஸ்கோரை எட்டியது. ராகுல் 52 பந்துகளில் 80 ரன்கள் குவித்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். முன்னதாக தவான் 96 ரன்னிலும், கோலி 78 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய அணி இந்த இமாலய இலக்கை சேஸ் செய்து தொடரை வெல்லுமா இல்லை இந்திய அணி கம்பேக் கொடுத்து தொடரை சமன் செய்யுமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்!

17 Jan 2020 5 PM

பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணி!

நிர்பயா வழக்கில் சிறையில் உள்ள குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகேஷின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட ஆவணம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திகார் சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து புதிய தேதியை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

17 Jan 2020 12 PM

முகேஷ் சிங்கின் கருணை மனு நிராகரிப்பு!

நிர்பயா வழக்கு விவகாரத்தில் தனக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங், குடியரசுத் தலைவருக்குக் கருணை மனு எழுதியிருந்தார். அந்த மனுவை உள்துறை அமைச்சகம் இன்று காலை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தது. இந்நிலையில் முகேஷ் சிங்கின் கருணை மனுவைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வரும் 22-ம் தேதி நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு நிச்சயம் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக கூறபடுகிறது.

17 Jan 2020 9 AM

`அதி சக்திவாய்ந்த செயற்கைக் கோள்!'

ஜிசாட்-30
ஜிசாட்-30

இந்தியாவில் ஒளிபரப்பு மற்றும் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு பயன்படும் வகையில், இன்சாட்-4ஏ செயற்கைக் கோள் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது அதற்கு பதிலாக ஜிசாட்-30 செயற்கைக் கோளை இஸ்ரோ இன்று அதிகாலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. பிரான்ஸ் நாட்டின் தென்அமெரிக்காவில் உள்ள கயானா ஏவுதளத்தில் இருந்து அதிகாலை 2.35 மணி அளவில் ஜிசாட்-30 செயற்கைக் கோள் விண்ணில்செலுத்தப்பட்டது. இந்த ஜிசாட்-30 செயற்கைக் கோள் அதி சக்திவாய்ந்தது எனச் சொல்லப்படுகிறது. ஏரியேன்-5 ராக்கெட் மூலம் சுமார் 38 நிமிடத்தில் ஜிசாட்-30 விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

17 Jan 2020 9 AM

தமிழகத்தின் அடுத்த பா.ஜ.க தலைவர்?

தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு, அடுத்த பா.ஜ.க தலைவர் யார் என்ற அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. இதற்காக நிறைய ஆலோசனைகள், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடந்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாகும்.

பாஜக அலுவலகம்
பாஜக அலுவலகம்

இந்நிலையில் நேற்று ஒடிஷா, மேற்குவங்கம், புதுச்சேரி மற்றும் உத்தரகாண்ட ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க மாநில தலைவர்கள் தேர்வாகியுள்ளனர். இதனையடுத்து இன்று தமிழக பா.ஜ.க தலைவரும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன் இறுதி பட்டியலில் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, எஸ்.வி சேகர், குப்புராமு, சீனிவாசன் போன்றவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

17 Jan 2020 7 AM

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உற்சாகத்துடன் தொடங்கியது!

உலகப் பிரசித்திபெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், காணும் பொங்கலான இன்று காலை 7:30 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் காளைகளுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் 2 கார்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது. பிரபலமான ஜல்லிக்கட்டுப் போட்டி என்பதால் இதைப் பார்ப்பதற்காகப் பல்வேறு ஊர்களிலிருந்து சுமார் பத்தாயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு
File Photo

அதனால் பார்வையாளர்களுக்காக சிறப்பு கேலரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணிகளில் மட்டும் 2000 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்கிவைத்தனர். இந்தப் போட்டியில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் ‘சின்ன கொம்பன்’ காளையும் சீறிப் பாயவுள்ளது. இதனால் மொத்த அலங்காநல்லூரும் களைகட்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு