Published:Updated:

`தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா; 1,372 ஆக அதிகரித்த எண்ணிக்கை!’ - அமைச்சர் விஜயபாஸ்கர் #NowAtVikatan

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

18-4-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Apr 2020 6 PM

தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா!

அமைச்சர் விஜயபாஸ்கர் பத்திரிகையாளர் சந்திப்பு! வீடியோ: பிரியங்கா. ப

Posted by Vikatan EMagazine on Saturday, April 18, 2020

தமிழகத்தில் கொரோனா அப்டேட் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது.

18 Apr 2020 5 PM

ஒரு மாத சம்பளத்தை நிவாரணத்துக்கு வழங்கிய நீலகிரி ஆட்சியர்!

cm relief fund for covid 19
cm relief fund for covid 19

கொரோனா வைரஸை எதிர்கொள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் பங்களிப்பை பல்வேறு வகைகளில் அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நீலகிரி மக்கள் முதல்வர் மற்றும் பிரதமரின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற தொகையை அளித்து வருகின்றனர்.

ஊட்டி நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிணைந்து ரூ.1 லட்சத்து 20,000 ரூபாயை வழங்கி அசத்தினர். இதேபோல் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தனது ஒருமாத சம்பளத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

நஞ்சநாடு பகுதியைச் சேந்த மருத்துவர் ஒருவர் முதல்வர் நிவாரணத்துக்கு 50,000, பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.50,000 என ஒரு லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். கோத்தகிரி பகுதியில் பணியாற்றும் மின்வாரிய ஊழியர் ஒருவர் ரூ.20,000 வழங்கியுள்ளார். நீலகிரி அ.தி.மு.க சார்பில் ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

18 Apr 2020 5 PM

இயல்புநிலை திரும்பும் வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க கூடாது!

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும் கொண்டு வரப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே மாதம் 3-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏப்ரல் 20 -ம் தேதிக்குப் பிறகு கொரோனா பாதிக்காத பகுதிகளில் சில தளர்வுகள் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுங்கக் கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பலரும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன், ``ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் 20-ம் தேதி முதல் சுங்கக்கட்டணம் மீண்டும் வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சியளிக்கிறது. பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள தற்போதைய நெருக்கடியான சூழலில் அத்தியாவசியப் பொருள்கள், அவசர மருத்துவ சேவை உள்ளிட்டவற்றுக்கான வாகனப் போக்குவரத்து தொழிலை மேற்கொண்டிருப்போருக்கு இதனால் பொருளாதார சுமை மேலும் அதிகமாகும். இதன் விளைவாக விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் பொதுமக்களும் பாதிப்புக்கு ஆளாவார்கள். எனவே, தற்போதைய உத்தரவை ரத்து செய்வதோடு, நாடு முழுவதும் இயல்புநிலை திரும்புகிற வரை சுங்கக்கட்டண வசூலை நிறுத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

18 Apr 2020 3 PM

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் காவலர் பலி!

இந்தியாவில், கொரோனா வைரஸால் பாதிப்படைபவர்களின் எண்ணிக்கையும் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. சுகாதாரத்துறை பணியாளர்களும் ஊரடங்கு தொடர்பாகப் பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களும் இந்த வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக வரும் தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் உதவி ஆணையர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் கொரோனா காரணமாக பலியான முதல் காவல்துறை அதிகாரி இவர் என்பது அதிர்ச்சி தரும் விஷயம்!

18 Apr 2020 10 AM

இந்தியாவில் 14,378 பேர் பாதிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,378ஆக அதிகரித்திருக்கிறது. அதேநேரம், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 480 ஆக உயர்ந்திருக்கிறது என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

கொரோனா ராட்சச ஓவியம்
கொரோனா ராட்சச ஓவியம்

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,50,000-ஐக் கடந்திருக்கிறது. அமெரிக்காவில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 7,00,000-த்தைக் கடந்தது. அங்கு 36,773 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். 193-க்கும் மேற்பட்ட நாடுகளில் 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தரவுகள் கூறுகின்றன.

கொரோனா மட்டும் வராமல் இருந்திருந்தால்..! - ஜாலியான ஒரு புத்தாண்டு ராசி பலன்! #MyVikatan
அடுத்த கட்டுரைக்கு