Published:Updated:

`மறைந்த எழுத்தாளர் கி.ரா-வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும்!’- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு #NowAtVikatan

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

18-05-2021 | இன்றைய முக்கியச் செய்திகளின் தொகுப்பு..!

18 May 2021 2 PM

`மறைந்த எழுத்தாளர் கி.ரா-வுக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்கப்படும்!’

எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னதாக இரங்கல் தெரிவித்தவர், அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் எனவும் தெரிவித்தார். இந்தநிலையில் தற்போது ட்விட்டரில் ஸ்டாலின், ``தமிழ் இலக்கியத்துக்குச் செழுமை சேர்த்த கரிசல்காட்டு எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களுக்கு கோவில்பட்டியில் தமிழக அரசு சார்பில் சிலை அமைக்கப்படும். மேலும், அவர் படித்த இடைசெவல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுப்பிக்கப்பட்டு அங்கு அவருடைய புகைப்படங்கள், படைப்புகள் வைக்கப்படும்" என்றார்.

18 May 2021 1 PM

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 17-ம் தேதி வரையிலும் 69 கோடி ரூபாய் நிதி வந்திருக்கிறது!

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு 17-ம் தேதி வரையிலும் 69 கோடி ரூபாய் நிதி வந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வாங்க 25 கோடியும், திரவ ஆக்ஸிஜனை வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருவதற்காக 25 கோடியும் ஒதுக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

அறிவிப்பு
அறிவிப்பு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. புதிதாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, தடுப்பு நடவடிக்கைகளை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தற்போது ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், பல்வேறு நபர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு நிவாரணங்களை வழங்கிவருகின்றனர்.

திரைப் பிரபலங்கள் தொடங்கி தொழிலதிபர்கள், சாதாரண பொதுமக்கள், சிறுவர், சிறுமியர்கள் எனப் பலரும் கொரோனா தடுப்பு நிவாரண நிதியை வழங்கிவருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``17-5-2021 வரையில் இணையவழியாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக, 39.55 கோடி ரூபாயும் என மொத்தம் 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாக பெறப்பட்டுள்ளது.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள் கொரோனோ நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதி அளித்தவாறு இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து ரெம்டெசிவிர் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து ஆக்ஸிஜனை ரயில் போக்குவரத்து மூலம் கொண்டு வருவதற்குத் தேவையான கன்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18 May 2021 1 PM

`தமிழகத்திலேயே கொரோனா தடுப்பூசி, ஆக்ஸிஜன் உற்பத்தியைத் தொடங்க நடவடிக்கை!’

`ஆக்ஸிஜன் தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகளைத் தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். 50 கோடி ரூபாய் முதலீட்டுடன் உள்ள தனியார் நிறுவனங்களோடு, டிட்கோ நிறுவனம் இணைந்து கூட்டாண்மை அடிப்படையில் இந்த ஆலைகளை அமைக்க விருப்ப கருத்துகளைக் கோரியிருக்கிறது தமிழக அரசு.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்களைத் தொடங்க முதல்வர் ஆணையிட்டிருக்கிறார். இது மட்டுமன்றி மருத்துவம் சார்ந்த உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டிருக்கிறா.

அறிவிப்பு
அறிவிப்பு

இதனடிப்படையில், தொழில்துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், மேற்காணும் அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும் உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து விருப்ப கருத்துகளை 31 -5 -2021-க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்ப கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்ஸிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 May 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 2,63,533 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,52,28,996 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா ஸ்வாப் டெஸ்ட்
கொரோனா ஸ்வாப் டெஸ்ட்

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 4,329. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 2,78,719-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,15,96,512 -ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 33,53,765 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 4,22,436 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 18,44,53,149 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

18 May 2021 9 AM

`அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும்!’

கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

எழுத்தாளர் கி.ரா மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், `` `கரிசல் குயில்' கி.ரா அவர்களின் மறைவால் தமிழ்த்தாய் தன் அடையாளங்களுள் ஒன்றை இழந்து தேம்புகிறாள்! கரிசல் இலக்கியமும், இந்த மண்ணும், தமிழும் உள்ளவரை அவரது புகழ் வாழும்! அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும். குடும்பத்தினர் - வாசகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” எனத் தெரிவித்திருக்கிறார்.

18 May 2021 9 AM

இணையதளம் மூலம் ரெம்டெசிவிர்!

ரெம்டெசிவிர் மருந்து
ரெம்டெசிவிர் மருந்து

தமிழகத்தில் இணையதளம் மூலம் ரெம்டெசிவிர் பெற பதிவு செய்வதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து பெற பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தின் http://tnmsc.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் எனவும், பதிவு செய்த மருத்துவமனைகளில் பிரதிநிதிகளை அனுப்பி மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 May 2021 9 AM

`காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல இ-பதிவு அவசியம்!'

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுவருகின்ரன. இந்தநிலையில் இன்று முதல் சென்னையில், மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காலை 10 மணிக்கு மேல் வெளியே செல்ல கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும். காலை 10 மணிக்கு மேல் இ-பதிவு இல்லாமல் பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு காவல் நிலைய எல்லைக்குச் சென்றாலே இ-பதிவு செய்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு