Published:Updated:

`ஊர்ப் பெயர் மாற்ற அரசாணை வாபஸ்!’- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் #NowAtVikatan

அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

18.6.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

18 Jun 2020 9 PM

ஊர்ப் பெயர் மாற்ற அரசாணை வாபஸ்!

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்த அரசாணை திரும்பப் பெறப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். மேலும், இதுதொடர்பாக துறைசார் வல்லுநர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு புதிய அரசாணை இரண்டு அல்லது 3 நாள்களில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

18 Jun 2020 8 PM

இறைச்சி, மீன் கடைகளை மூட உத்தரவு!

இறைச்சிக் கடை
இறைச்சிக் கடை

கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு நள்ளிரவு (ஜூன் 19 - நள்ளிரவு 12.00 மணி) முதல் அமலுக்கு வருகிறது. இது வரும் 30ம் தேதி வரை அமலில் இருக்கும். சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

18 Jun 2020 7 PM

இரண்டாவது நாளாக 2,000-த்தைக் கடந்த #Corona பாதிப்பு!

தமிழகத்தில் இன்று மட்டும் 2,141 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,334 -ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 1,373 பேருக்குப் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,070 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா
சென்னையில் மீண்டும் ஊரடங்கு... ஊரைக் காலி செய்யும் மக்கள்... தலைநகரில் குறையுமா கொரோனா?

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 49 அதிகரித்த நிலையில், மொத்த எண்ணிக்கை 625-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,017 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,641 ஆக அதிகரித்துள்ளது.

18 Jun 2020 3 PM

பரனூர் சுங்கச் சாவடியில் சுங்கக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தம்!

சுங்கச் சாவடி
சுங்கச் சாவடி

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருக்கிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணி முதல் 12 நாள்கள் முழு ஊரடங்கு அமலாக இருக்கிறது. இந்தநிலையில், பரனூர் சுங்கச்சாவடியில் 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. இதையடுத்து, சுங்கக் கட்டண வசூலைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க எஸ்.பி கண்ணன் உத்தரவிட்டிருக்கிறார்.

18 Jun 2020 2 PM

சிறப்பு அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மாவட்டங்களுக்குச் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக, முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

18 Jun 2020 2 PM

காவேரி நீர் தஞ்சை வந்தடைந்தது!

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவேரி நீர் தஞ்சை வந்தடைந்தது.

Posted by Vikatan EMagazine on Wednesday, June 17, 2020

டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடி பாசனத்திற்காக கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட காவேரி நீர், தஞ்சை வந்தடைந்தது.

18 Jun 2020 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

கொரோனா
கொரோனா

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,54,065 -லிருந்து 3,66,946 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 12,881 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்றால் 24 மணி நேரத்தில் மட்டும் 334 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,903 -லிருந்து 12,237 ஆக அதிகரித்திருக்கிறது.

18 Jun 2020 8 AM

உலகளவில் கொரோனா! - அப்டேட்ஸ்

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83,92,582 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் தற்போது வரை 4,50,452 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கையும் 44,07,778 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா
கொரோனா

உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட அமெரிக்காவில் ஒரே நாளில் 26,065 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு அந்த நாட்டில் 22,34,465 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 809 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா பலி எண்ணிக்கை 1,19,941 ஆக அதிகரித்துள்ளது.

18 Jun 2020 8 AM

ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம்! #NowAtVikatan

எல்லையில் நடந்த சண்டையில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்த சம்பவம் நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. வீர மரணம் அடைந்தவர்களில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கடுக்கலூரைச் சேர்ந்த பழனியும் ஒருவர். இருபது வருடத்துக்கு மேல் ராணுவத்தில் பணியாற்றி வரும் பழனிக்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

நள்ளிரவில் ராணுவ ஹெலிகாப்டரில் மதுரை வந்த வீரர் பழனியின் உடல் விமான நிலைய வளாகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. சரவணன், மதுரை கலெக்டர் வினய், காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள், பல்வேறு அமைப்பினரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். அதன் பின் ராணுவ மரியாதையுடன் உடல் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலை அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணுவ வீரர் பழனியின் மரணம், ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தேசம் காக்கப் புறப்பட்டு இந்திய சீன எல்லையில் தன் நாட்டுக்காக தன்னுயிர் ஈந்த இராணுவ வீரர் பழனியின் உடல் அவரது சொந்த ஊரான...

Posted by Vikatan EMagazine on Wednesday, June 17, 2020
அடுத்த கட்டுரைக்கு