Published:Updated:

Tamil News Today: சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசப் பேச்சு... தொடர் புகார்கள்! - சிக்கினார் `யூடியூபர்’ மதன்

யூடியூபர் மதன்
யூடியூபர் மதன்

18-06-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Jun 2021 12 PM

பதவியேற்ற 2-வது நாள்... கொரோனா வார்டில் ஆய்வு!

ஈரோடு மாவட்ட கலெக்டராக இருந்த கதிரவன் பணிமாறுதல் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக கிருஷ்ணனுண்ணி ஈரோடு மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஜூன் 16-ம் தேதியன்றுதான் ஈரோடு கலெக்டராக கிருஷ்ணனுண்ணி பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்றதிலிருந்தே ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டும், அதிகாரிகளைச் சந்தித்தும் பம்பரமாகச் சுழன்றுவருகிறார்.

கொரோனா வார்டில் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி
கொரோனா வார்டில் ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி

அந்தவகையில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக 910 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டுவரும் ‘ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை’யில் நேற்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக் கூடங்கள், ஆக்சிஜன் வசதியுடன் புதிதாக கட்டப்பட்டுவரும் கட்டடங்கள் போன்றவற்றைப் பார்வையிட்டவர், நோயாளிகளுக்குக் கொடுக்கப்படும் சிகிச்சை, வழங்கப்படும் உணவு, ஆக்சிஜன் இருப்பு, மருத்துவ வசதிகள் போன்றவை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அதையடுத்து திடீரென ‘கொரோனா நோயாளிகளைச் சந்திக்க வேண்டும்’ என அங்கிருந்த மருத்துவ அதிகாரிகளிடம் சொல்ல, அதிகாரிகளோ ‘எதுக்கு சார் ரிஸ்க்... வேணாமே!’எனச் சொல்லியிருக்கின்றனர். கலெக்டர் உறுதியுடன் நிற்க, மருத்துவர்கள் பாதுகாப்புக் கவச உடையுடன் கலெக்டரை கொரோனா வார்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கொரோனா வார்டுக்குள் சென்ற கலெக்டர் சிகிச்சை பெற்றுவருபவர்களின் அருகில் சென்று ‘ஏதேனும் உதவி தேவைப்படுகிறதா’, ‘சிகிச்சைகளில் ஏதேனும் குறை இருக்கிறதா’ எனக் கேட்டதோடு ‘சீக்கிரம் குணமாகி வந்துடுவீங்க. கவலைப்படாதீங்க’ என ஆறுதல் கூறியிருக்கிறார்.

- நவீன்

18 Jun 2021 10 AM

யூடியூபர் மதன் கைது!

ஆன்லைனில் `பப்ஜி’ கேம் விளையாடும்போது சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக யூடியூபர் மதனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தமிழகம் முழுவதிலுமிருந்து பல புகார்கள் வந்த நிலையில் மதனை போலீஸார் தீவிரமாகத் தேடிவந்தனர். இந்தநிலையில், திடீரெனத் தலைமறைவானார் மதன்.

Tamil News Today: சிறுவர், சிறுமிகளிடம் ஆபாசப் பேச்சு... தொடர் புகார்கள்! - சிக்கினார் `யூடியூபர்’ மதன்

இதைத் தொடர்ந்து மதனின் மனைவி மற்றும் குடும்பத்தினரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவந்தனர். இந்த சேனலின் நிர்வாகியாக செயல்பட்டதன் காரணமாக, மதனின் மனைவி கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகிறார். இதற்கிடையே மதன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. தீவிரமாகத் தேடப்பட்ட வந்த யூடியூபர் மதன் தருமபுரியில் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். விரைவில் அவர் சென்னைக்கு அழைத்துவரப்பட்டு விசாரிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது

18 Jun 2021 10 AM

ஸ்டாலின் - சோனியா - ராகுல் காந்தி சந்திப்பு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். டெல்லியில் நேற்று மாலை பிரதமர் மோடியைச் சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை மோடியிடம் வழங்கினார். அதில் முல்லைப்பெரியாறு அணை பிரச்னை, நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும், புதிய கல்விக் கொள்கை ரத்து உள்ளிட்ட 25 அம்சக் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன.

துர்கா ஸ்டாலின்- ஸ்டாலின் - சோனியா காந்தி - ராகுல் காந்தி
துர்கா ஸ்டாலின்- ஸ்டாலின் - சோனியா காந்தி - ராகுல் காந்தி

இந்தநிலையில், இன்று தனது பயணத்தின் இரண்டாம் நாளில், காங்கிரஸ் கட்சியின் தற்காலிகத் தலைவரான சோனியா காந்தியை சந்தித்துப் பேசிவருகிறார். தமிழக முதல்வரான பிறகு முதன்முறையாக டெல்லி சென்ற ஸ்டாலின், நேற்று பிரதமர் மோடி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார். இன்று சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்துப் பேசிவருகிறார்.

18 Jun 2021 9 AM

இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், மேலும் புதிதாக 62,480 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,97,62,793 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,587. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 3,83,490-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 2,85,80,647-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 7,98,656 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். ஒரே நாளில் 88,977 பேர் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.

இந்தியாவில் இதுவரை 26,89,60,399 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது.

18 Jun 2021 9 AM

முன்னாள் அமைச்சர் மணிகண்டனைப் பிடிக்க போலீஸார் தீவிரம்!

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டன்மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தநிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து தலைமறைவாக இருக்கும் மணிகண்டனைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டிவந்தனர்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு - புகாரளித்த நடிகை சாந்தினிக்கு மருத்துவப் பரிசோதனை

துணை நடிகை அளித்த புகார் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் மணிகண்டனைப் பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படைகள் தற்போது மதுரைக் சென்று, மணிகண்டனைப் பிடிக்க தீவிரம் காட்டிவருகின்றன.

அடுத்த கட்டுரைக்கு