முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் - தேர்வு முடிவை நிறுத்திவைத்த அண்ணா பல்கலைக்கழகம்? #NowAtVikatan

18-10-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு...!
தேர்வு முடிவை நிறுத்திவைத்த அண்ணா பல்கலைக்கழகம்?!
ஆன்லைனில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியானது. இந்தநிலையில், ஏராளமான பொறியியல் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து சர்ச்சை தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா கடந்த வாரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அன்றைய தினமே, இறுதி செமஸ்டர் தேர்வு குறித்து பல்கலைக்கழகம் தரப்பில் ஒரு கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆன்லைன் தேர்வில் கலந்துகொண்ட மாணவர்கள் பலர், புத்தகத்தைப் பார்த்துக்கொண்டும், படுக்கையில் படுத்துக்கொண்டும், டீ குடித்தவாறும் தேர்வு எழுதியதுடன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்பட்டது. அந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், அவர்களுக்கு ஆப்சென்ட் வழங்கப்படும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகம் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு - 26 பேரைக் கைதுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார்
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக மேலும் 26 பேரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்தனர்.
டி.என்.பி.எஸ்.சி நடத்திய வி.ஏ.ஓ தேர்வு, குரூப் 4, குரூப் 2ஏ ஆகிய மூன்று தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இடைத்தரகர்கள், உதவியவர், தேர்வு எழுதியவர்கள், அரசு அதிகாரிகள் 97 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். கைதுசெய்யப்பட்ட அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீஸார் பரிந்துரை செய்துவருகிறார்கள். வி.ஏ.ஓ தேர்வு முறைகேடு தொடர்பாக 90 சதவிகிதம் பேர் கைதுசெய்யப்பட்டிருப்பதாகவும், குரூப் 4, குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக கைது எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் சி.பி.சி.ஐ.டி போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 40 பேர் வரை கைதுசெய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. கைதுசெய்யப்பட்டவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படுகின்றனர்.