Published:Updated:

சென்னை: மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? - உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் #NowAtVikatan

மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை

18-11-2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Nov 2020 1 PM

டிசம்பர் முதல் வாரத்துக்குள் முடிவு!

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில் சென்னை மெரினா கடற்கரை பொதுமக்கள் பார்வையிட இன்னும் திறக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது நீதிமன்றம், மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது எனக் கேள்வி எழுப்பியதுடன், தமிழக அரசு மெரினாவைத் திறக்கத் தவறினால், நீதிமன்றமே திறக்கும் என்று தெரிவித்தது. இந்தநிலையில் நீதிமன்றத்தில் பதிலளித்த தமிழக அரசு, ``மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும்” என தெரிவித்திருக்கிறது.

18 Nov 2020 11 AM

கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா!

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி., `விஜய் மக்கள் இயக்கம்’ என்கிற அமைப்பைத் தொடங்கி, சமீபத்தில் அதை தேசியக் கட்சியாக டெல்லி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய விண்ணப்பித்தார். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் என்ற ராஜாவை மாநிலத் தலைவராகக்கொண்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால், தந்தையின் இந்த அரசியல் நடவடிக்கை பிடிக்காத நடிகர் விஜய் 'தனக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லை" என்று அறிவித்தார். அந்தக் கட்சியில் பொருளாளராக நியமிக்கப்பட்ட விஜய்யின் தாயார் ஷோபாவும் கட்சியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார்.

எஸ்.ஏ.சி - விஜய்
எஸ்.ஏ.சி - விஜய்

இந்தநிலையில், `தான் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்துவருவதாகவும், தனக்கோ தனது குடும்பத்தாருக்கோ ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் புஸ்ஸி ஆனந்த்தான்’ என்று வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பத்மநாபன் என்ற ராஜா. இந்தநிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு