Published:Updated:

காவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

Vikatan Correspondent
காவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!
காவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!
காவிரியின் குறுக்கே அணை: தடுக்க மத்திய அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்!

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு ஆலோசித்தால், அதனை உடனடியாக தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என்று கருணாநிதி, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி, -பதில் வடிவில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வல்லூர் அனல்மின் நிலையத்தின் 2-வது அலகு இன்னும் இரண்டொரு மாதங்களில் செயல்பாட்டிற்கு வந்து விடும் என்று கூறப்படுகிறதே?

தமிழ்நாடு மின்சார வாரியமும், தேசிய அனல் மின் கழகமும் இணைந்து பொன்னேரிக்கு அருகில் உள்ள வல்லூரில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தலா 500 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளை அமைக்க தி.மு.க. ஆட்சியில் முடிவு செய்து, 2008-ஆம் ஆண்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. கடந்த டிசம்பர் மாதத்தில் வல்லூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகு செயல்பாட்டிற்கு வந்தது. அங்கு தற்போது 300-350 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2-வது அலகில் கடந்த மார்ச் மாதமே சோதனை ஓட்டம் நடைபெற்றபோதிலும், சிறு சிறு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால், இன்னும் இரண்டொரு மாதங்களில் அந்தப்பணிகளும் முடிவுற்று மின் உற்பத்தி தொடங்கும். அதன் தொடர்ச்சியாக 3-வது அலகும் செயல்பாட்டிற்கு வந்துவிடும். ஆனால் இந்த திட்டங்கள் மூலமாக மின்சாரம் கிடைக்க தொடங்கிவிட்டால் தமிழகத்தில் மின்வெட்டு இருக்காது.

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பின்படி, தூக்கு தண்டனை கூடாது என்ற உங்கள் கருத்தினை பலர் ஆதரித்ததாக செய்தி வந்ததே?

ஆமாம், இந்திய வாக்காளர்களில் பெரும் பகுதியினர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். 18 மாநிலங்களில் உள்ள 267 தொகுதிகளை சேர்ந்த சுமார் இருபதாயிரம் பேரிடம் இந்த “சர்வே” நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, அகில இந்திய அளவில் 40 சதவிகிதத்தினர் முழுவதுமாகவோ, ஓரளவிற்கோ தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட வேண்டுமென்றும், ஆயுள் தண்டனையே போதும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

தனியார் துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிப்பது பற்றி மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதே?

மத்திய சமூக நீதித்துறை மந்திரி குமாரி செல்ஜா மக்களவையில் கூறும்போது, “வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு தொடர்பாக தனியார் துறையினருடன் மத்திய அரசு ஆலோசித்து வருகிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

2006- ஆம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையில் “தனியார் துறைகளிலும், மேலும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத ஏனைய அரசு துறைகளிலும், நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்துவோம்” என்று குறிப்பிட்டிருந்ததை நினைவுபடுத்துவதோடு, மத்திய மந்திரி நாடாளுமன்றத்தில் தற்போது அறிவித்திருப்பதை தி.மு.க சார்பில் வரவேற்று, அதனை நடைமுறைப்படுத்த விரைந்து ஆவன செய்ய வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா 1-9-2013 அன்று வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு பிரச்னையில் நீங்கள் துரோகம் இழைத்து விட்டதாகக் குற்றஞ்சாட்டியிருக்கிறாரே?

கச்சத்தீவு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், கச்சத்தீவு இலங்கையின் பகுதியில் உள்ளது என்று தெரிவித்ததும், அதிர்ச்சி அடைந்து கச்சத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களையெல்லாம் எடுத்துக்காட்டி நான் அறிக்கை விடுத்திருந்தேன்.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலேயே மத்திய மந்திரிகளாக இருக்கும் ஜி.கே.வாசன் இதைப்பற்றி பிரதமரிடம் நேரில் பேசுவதாகவே பேட்டியளித்திருக்கிறார். தமிழகத்தை சேர்ந்த வேறு சில கட்சிகளும் மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறானது என்பதை எடுத்துக்காட்டி அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.

மாநிலங்களவையிலே கூட, தி.மு.க., அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, பா.ஜ.க., போன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்து பேசியிருக்கிறார்கள். ஆனால் இதற்காக முதலில் பதைபதைத்து அறிக்கை விட வேண்டிய தமிழக அரசும், அதன் முதல்-அமைச்சரும் இந்த நேரம் வரை வாய் திறக்கவில்லை என்பதில் இருந்தே கச்சத்தீவு பிரச்சினையில் உண்மையில் துரோகம் இழைப்பவர்கள் யார் என்று தெரியவில்லையா?

##~~##
கர்நாடக அரசு மேகதாது என்ற இடத்தில் நீர் மின் நிலையம் அமைக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்த மாநில சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் விரிவாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு, தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்படி எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றக்கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறாரே?
கர்நாடக அரசு அப்படிப்பட்ட முயற்சிகளில், அதாவது 3 அணைகளை கட்டுவதற்கான ஏற்பாட்டில் ஈடுபடுமேயானால் அது கடுமையாக எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவாறு மத்திய அரசு இன்னமும் காவிரி மேலாண்மை வாரியத்தையே அமைக்கவில்லை.
கர்நாடக அரசு தற்போது அணைகளை கட்டுவதற்கு ஆலோசிக்குமேயானால் மத்திய அரசு உடனடியாக அதிலே கவனம் செலுத்தி அந்த எண்ணத்தை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். நாடாளுமன்றத்தில் தி.மு.க.வின் இந்த கருத்தை வலியுறுத்தும்படி நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்திருக்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.