Published:Updated:

காவிரியில் அணை கட்டும் கர்நாடகா முயற்சியை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

Vikatan Correspondent
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா முயற்சியை தடுக்க வேண்டும்: ராமதாஸ்
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா முயற்சியை தடுக்க வேண்டும்: ராமதாஸ்
காவிரியில் அணை கட்டும் கர்நாடகா முயற்சியை தடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் கர்நாடக அரசின் மேகதாது மின் திட்டத்திற்கும், மூன்று அணைகளை கட்டும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் தரக்கூடாது என்றும், அதனை தடுக்க முயற்சி எடுக்க வேண்டும் என்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் நீர்மின் திட்டத்தை செயல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்திருப்பதாகவும், இதற்காக 50 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் மூன்று அணைகள் கட்டப்படும் என்றும் கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியிருக்கிறார்.

தமிழகத்திற்கான தண்ணீர் வரத்தை பாதிக்கும் இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். காவிரி ஆற்றின் குறுக்கே சிவசமுத்திரம், மேகதாது, ராசிமணல், ஓகனேக்கல் ஆகிய இடங்களில்  நீர்மின் நிலையங்களை அமைக்கும் திட்டம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே தயாரிக்கப்பட்டதாகும்.

இந்தத் திட்டங்கள் அனைத்தும் தேசிய நீர்மின் கழகத்தின் மூலமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே தமிழகம் வலியுறுத்தி வருகிறது. எனினும் இது தொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படாததால் இத்திட்டங்கள் கடந்த பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இடையிடையே மேகதாது மற்றும் சிவசமுத்திரம் திட்டங்களை செயல்படுத்த கர்நாடக அரசு முயலும் போதெல்லாம்  பாட்டாளி மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்பு காரணமாக இந்தத் திட்டங்கள் இன்று வரை செயல்படுத்தப்படவில்லை.

காவிரி பிரச்னையில் நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கி அது அரசிதழில் வெளியிடப்பட்டு விட்ட நிலையில், காவிரி ஆற்றின் குறுக்கே எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அது காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியத்தின் மூலமாகவே செயல்படுத்தப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, இரு மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகளின் குறுக்கே எந்த திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதற்கு கடைமடை மாநிலத்தின் ஒப்புதலை பெற வேண்டியது அவசியமாகும்.

ஆனால், கர்நாடக அரசு தன்னிச்சையாக இத்திட்டத்தை செயல்படுத்த துடிப்பது கண்டிக்கத்தக்கது. மேகதாது மின் திட்டத்திற்காக மூன்று அணைகளை கட்டி, அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்த பிறகு அந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு தான் திறந்து விடப்படும் என கர்நாடக அரசு கூறும்போதிலும், அதை நம்ப முடியாது. மூன்று அணைகளிலும் சேமிக்கப்படும் தண்ணீரை வேறு பயன்பாட்டிற்கு கர்நாடகா திருப்பி விட்டால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் வருவது பாதிக்கப்படும்.

##~~##
எனவே, தமிழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் மேகதாது மின் திட்டத்திற்கும், அதற்காக மூன்று அணைகளை கட்டும் திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் தரக்கூடாது. அதுமட்டுமின்றி நதிநீர் சட்டங்களை மதித்து நடக்கும்படி கர்நாடக அரசுக்கு அறிவுரை வழங்க வேண்டும். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன்படி காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கான காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி நீர் ஒழுங்கு முறை குழுவும் மே மாதத்திற்குள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த அமைப்புகளை மத்திய அரசு அமைக்காதது தான் இது போன்ற பிரச்னைகளுக்கு காரணமாகும். எனவே, காவிரி மேலாண்மை வாரியத்தையும், ஒழுங்கு முறைக்குழுவையும் மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.