Published:Updated:

`கீமோ பாலின் கடைசி நேர அதிரடி; கீளின் போல்ட்டாக்கிய ஷமி'- 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #NowAtVikatan

இந்தியா வெற்றி!
இந்தியா வெற்றி!

18.12.2019 இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

18 Dec 2019 9 PM

இந்தியா வெற்றி!

குல்தீப்பின் ஹாட்ரிக் விக்கெட்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியின் பால் சிறிது நேரம் வான வேடிக்கை காண்பித்தார். 46 ரன்கள் எடுத்த அவரை இந்திய பௌலர் ஷமி கடைசி விக்கெட்டாக வீழ்த்தி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் 43.3 ஓவரிலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியை 107 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா. இந்திய அணி தரப்பில் ஷமி, குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர். வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற சம நிலையில் உள்ளன.

18 Dec 2019 8 PM

குல்தீப் யாதவ் `ஹாட்ரிக்'!

குல்தீப் யாதவ்
குல்தீப் யாதவ்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ஹோப், ஹோல்டர், ஜோசப் என அடுத்தடுத்தது மூவரையும் ஆட்டமிழக்க வைத்தார் குல்தீப். தற்போது 36.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் விளையாடி வருகிறது.

18 Dec 2019 8 PM

பாட்னர்ஷிப்பில் சதம் அடித்த ஹோப் - பூரான்!

ஹோப்
ஹோப்

388 ரன்கள் டார்கெட்டை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கடந்த முறையை போல ஓப்பனிங் ஜோடி ஓரளவு கைகொடுத்தாலும் லீவிஸ் 30 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் ஹெட்மேயர், சேஸ் என அந்த அணியின் இரண்டு தூண்களையும் அடுத்தடுத்து இந்திய வீரர்கள் நடையைகட்ட வைத்தனர். இதன்பின் ஜோடி சேர்ந்த ஹோப் - பூரான் இணை இந்திய பந்துவீச்சாளர்களை கதற விட்டனர்.

நாலாபுறமும் பவுண்டரி சிக்ஸர் என விளாசிய இருவரும் அரைசதம் கடந்தனர். 76 பந்துகளை சந்தித்த இந்த இணை பாட்னர்ஷிப்பில் சதம் அடித்தது இந்திய வீரர்கள் இவர்களை பிரிக்க எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது. எனினும் நம்பிக்கை விலகாமல் போராடிய இந்திய அணி பூரானை 75 ரன்களில் வெளியேற்றியது.

18 Dec 2019 5 PM

வெஸ்ட் இண்டீஸ்க்கு 388 ரன் டார்கெட்!

வெஸ்ட் அணிக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 387 ரன்கள் குவித்துள்ளது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடினர். ரோஹித் 159 ரன்களும், ராகுல் 102 ரன்களும் எடுத்து வெளியேறினர். இந்த ஜோடி 200 ரன்களை விளாசியது. கேப்டன் கோலி டக் அவுட் ஆனாலும் இறுதிக்கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயருடன் சேர்ந்து ரிஷப் பான்ட்டும் தன் பங்குக்கு வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்களும், ரிஷப் பான்ட் 39 ரன்களும் எடுத்து கடைசி கட்டத்தில் அவுட் ஆக, இறுதி ஓவரில் கேதர் ஜாதவ் மூன்று பவுண்டரிகள் விளாசி இந்திய அணி 387 ரன்கள் குவிக்க உதவினார்.

18 Dec 2019 5 PM

மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த கமல்!

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுபட்டுவரும் சென்னை பல்கலைக்கழக மாணவர்களுடன் கமல்ஹாசன் சந்திப்பு

Posted by Vikatan EMagazine on Wednesday, December 18, 2019

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வரும் வேளையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மாணவர்களை சந்தித்து தனது ஆதரவை தெரிவிப்பதற்காக சென்னைப் பல்கலைக்கழகம் சென்றுள்ளார். ஆனால் அவரை கல்லூரிக்குள் செல்ல அனுமதிக்காத நிலையில் கேட்டில் இருந்தே தனது ஆதரவை மாணவர்களிடம் தெரிவித்து வருகிறார்.

18 Dec 2019 4 PM

ரோஹித்; ராகுல் ஆன் ஃபயர்!

`கீமோ பாலின் கடைசி நேர அதிரடி; கீளின் போல்ட்டாக்கிய ஷமி'- 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி #NowAtVikatan

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது. இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. தொடக்க வீரர்களான கே.எல்.ராகுல், ரோஹித் ஷர்மா சிறப்பாக ஆடி வருகின்றனர். ரோஹித் ஷர்மா தனது 28வது சர்வதேச சதத்தை பதிவு செய்துள்ளார். இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 215 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

18 Dec 2019 1 PM

விரைவில் தூக்கு?

நிர்பயா வழக்கு குற்றவாளிகள், தங்கள் தண்டனையைக் குறைக்கும்படி தாக்கல் செய்த கடைசி சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லி மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டது. 2013-ம் ஆண்டு சிறையில், ராம்சிங் என்ற குற்றவாளி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 18 வயதை எட்டாத ஒருவர் 3 ஆண்டுகள் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்தார். தண்டனைக் காலம் முடிந்த பிறகு, அவர் விடுவிக்கப்பட்டு விட்டார். எஞ்சியுள்ள நான்கு குற்றவாளிகளான அக்ஷய் குமார் சிங், முகேஷ், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகியோர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Twitter

இதில், அக்ஷய் குமார் சிங் தவிர மற்றவர்களின் மறுசீராய்வு மனு கடந்த ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தநிலையில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்ய வேண்டும் என அக்ஷய் குமார் சிங் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், குற்றவாளிகள் தரப்பு வாதங்கள், விசாரணை நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திலும் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதை இப்போது அனுமதிக்க முடியாது என்றும் குறிப்பிட்டது.

இதையடுத்து, கருணை மனுத் தாக்கல் செய்ய இரண்டு வாரம் அனுமதியளிக்கக் கோரி அக்ஷய் குமார் சிங் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சட்டப்படி 7 நாள்கள் மட்டுமே அனுமதியளிக்க வேண்டும் என அரசு தரப்பில் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. அக்ஷய் குமார் சிங் தரப்பு வாதத்தை ஏற்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது. இதனால், நிர்பயா வழக்கு குற்றவாளிகள் விரைவில் தூக்கிலிடப்படலாம் என்று தெரிகிறது.

18 Dec 2019 1 PM

இந்திய அணி பேட்டிங்!

இந்திய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது.

விராட் கோலி - பொல்லார்ட்
விராட் கோலி - பொல்லார்ட்
BCCI
`விக்டோரியா ஹாஸ்டலுக்குச் சென்ற பந்து?!' - சேப்பாக்கத்தில் கலக்கிய வெஸ்ட் இண்டீஸ் #INDvWI

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி, வெற்றிபெற்றால் தொடரையும் வெல்லும். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது. இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஷிவம் துபேவுக்குப் பதிலாக ஸ்ரதுல் தாக்கூர் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் சுனில் அம்பரீஷ் மற்றும் ஹெய்டன் வால்ஷ் ஜூனியர் ஆகியோருக்குப் பதிலாக எவின் லூவிஸ் மற்றும் காரி பியரி ஆகியோர் களம்காண்கின்றனர். இந்தப் போட்டி மூலம், வெஸ்ட் இண்டீஸ் வீரர் பியரி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார்.

18 Dec 2019 11 AM

இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது தி.மு.கதான்!

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்தியர்களுக்குப் பாதிப்பில்லை என பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விளக்கமளித்துவிட்டதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சேலம் விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ``இலங்கைத் தமிழர்களுக்கு அ.தி.மு.க துரோகம் செய்துவிட்டதாக ஸ்டாலின் கூறுவது பொய். தி.மு.க தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். இலங்கைத் தமிழர்களுக்குத் துரோகம் செய்தது தி.மு.கதான். 13 ஆண்டுகளாக மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க, இலங்கைத் தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை பெற்றுத் தரவில்லை? இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க வேண்டும் என்பதுதான் அ.தி.மு.கவின் நிலைப்பாடு. இதை நாடாளுமன்றத்திலும் அ.தி.மு.க எம்.பிக்கள் வலியுறுத்தியிருக்கின்றனர். குடியுரிமைச் சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் எந்த மதத்தினருக்கும் எந்தப் பிரச்னையுமில்லை'' என்றார்.

18 Dec 2019 12 PM

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம்.!

18 Dec 2019 11 AM

பார்சலில் வந்த ராணுவ கையெறி குண்டுகள்!

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து சென்னைக்கு பார்சலில் வந்த ராணுவ கையெறி குண்டுகள், கடந்த 6 மாத காலமாக ரயில்வே குடோனில் இருந்தது தெரியவந்துள்ளது.

ராணுவ கையெறி குண்டுகள்
ராணுவ கையெறி குண்டுகள்

சங்கமித்ரா ரயில் மூலம் கடந்த ஏப்ரலில் சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் வந்த ஒரு பார்சலுக்கு யாரும் உரிமை கோரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, அதை ஏலம் விடுவதற்காக சோதனை செய்தபோது, அதில் ராணுவத்தில் பயன்படுத்தப்படும் கையெறி குண்டுகள் இருப்பது தெரியவந்தது. அந்த பார்சலில், அந்தமானில் இருக்கும் 172வது பட்டாலியன் என்று குறிப்பிடுவதற்குப் பதில், 72வது பட்டாலியன் (சென்னை) எனக் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனாலேயே அந்த பார்சல் சென்னைக்கு வந்ததாகத் தெரிகிறது.

18 Dec 2019 12 PM

தைப்பூச தெப்பத்திருவிழாவிற்காக வேகமாக தண்ணீர் நிரப்பப்படும் மதுரை மாரியம்மன் தெப்பக்குளம். வீடியோ: என்.ஜி.மணிகண்டன்

18 Dec 2019 9 AM

சந்திரயான் -3க்கு புதிய திட்ட இயக்குநர்!

சந்திரயான் - 3 திட்ட இயக்குநராக வீர முத்துவேலை இஸ்ரோ நியமித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் - 2, நிலவின் மேற்பரப்பில் திட்டமிட்டபடி சாஃப்ட் லேண்டிங் ஆகவில்லை. கடந்த செப்டம்பர் 7ம் தேதி நடைபெற்ற இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சந்திரயான் - 2 திட்ட இயக்குநராக இருந்த வனிதா மாற்றப்பட்டிருக்கிறார். அவரது மாறுதலுக்கு இஸ்ரோ அதிகாரபூர்வமாக காரணங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

18 Dec 2019 8 AM

நள்ளிரவிலும் தொடர்ந்த மாணவர்களின்  போராட்டம்!

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்களை போலீஸார் விடுவித்தனர்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்
க.பாலாஜி

மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சென்னைப் பல்கலைக்கழகத்துக்கு இன்று முதல் 23-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இன்று முதல் 23-ம் தேதி வரை நடைபெறவிருந்த வகுப்புகள் மற்றும் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

18 Dec 2019 8 AM

பிரிக்கப்படுகிறதா அண்ணா பல்கலைக்கழகம்?

அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கத் தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக 5 பேர் கொண்ட அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

தற்போதைய பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரித்து ஒன்றை ஆய்வுப் பல்கலைக்கழகமாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதுதொடர்பான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவே அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு