Published:Updated:

`விவாதங்கள் வந்து வந்து செல்லும்; ரஜினியின் ஒப்பீடு தவறு!’- ஸ்டாலினை சந்தித்த கே.எஸ். அழகிரி! #NowAtVikatan

கே.எஸ். அழகிரி
கே.எஸ். அழகிரி

18.01.2020 - இன்றைய முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!

18 Jan 2020 7 AM

மோடி பாணியில் ட்ரம்ப்!

இந்தியப் பிரதமர் மோடி, கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஹெளடி மோடி நிகழ்ச்சியில் பேசினார். அந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் கலந்துகொண்டு பேசினார். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். அப்போதே, அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக ட்ரம்ப் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. அமெரிக்கத் தேர்தலில், அங்கு வாழும் இந்தியர்களின் வாக்குகளை ட்ரம்ப் கவர்வதற்காக, மோடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், ட்ரம்ப் அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போவதாகத் தகவல்கள் வெளியாகி, முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக, ட்ரம்ப்பின் பயணத் திட்டங்களும் இறுதிசெய்யப்பட்டுவருகிறது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடத்திய ஹெளடி மோடி நிகழ்ச்சியைப் போன்று இந்தியாவில் ஒரு நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளாராம் ட்ரம்ப். இதன்மூலம், அமெரிக்காவில் வாழும் இந்தியர்களை இன்னும் நெருங்க முடியும் எனத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இந்தக் கூட்டம் நடைபெறலாம் என்றும் ட்ரம்ப், டெல்லி அல்லாத ஒரு நகருக்கும் ஒருநாள் செல்வார் என்றும் அது, அகமதாபாத் தான் எனவும் கூறப்படுகிறது.

18 Jan 2020 10 AM

ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க இடையேயும், தி.மு.க-காங்கிரஸ் இடையேயும் கூட்டணி சிக்கல்கள் எழுந்தன. இதற்கு, உள்ளாட்சி அமைப்பில் போதிய இடங்களை மாநிலக் கட்சிகள் வழங்கவில்லை என தேசிய கட்சிகள் தெரிவித்தது முக்கியக் காரணமாகக் கூறப்பட்டது.

தி.மு.க கூட்டணி தொடர்பாக கே.எஸ் அழகிரி விடுத்த அறிக்கையும் சர்ச்சையானது. இந்த நிலையில், டெல்லியில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தும் தி.மு.க அந்த கூட்டத்தைப் புறக்கணித்தது. இதன் காரணமாக, காங்கிரஸ் - தி.மு.க இடையேயான விரிசல் அதிகமானதாகக் கூறப்பட்டது.

ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி
ஸ்டாலின், கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மதியம் 12 மணிக்கு கே.எஸ்.அழகிரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுவதால், அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

18 Jan 2020 1 PM

`சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும்!’

`விவாதங்கள் வந்து வந்து செல்லும்; ரஜினியின் ஒப்பீடு தவறு!’- ஸ்டாலினை சந்தித்த கே.எஸ். அழகிரி! #NowAtVikatan

சென்னை அண்ணா அறிவாலயத்தில் மதியம் 12 மணியளவில் கே.எஸ்.அழகிரி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும் உடன் இருந்தனர். சந்திப்பு முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே. எஸ் அழகிரி, ``தி.மு.க காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை. சட்டமன்ற தேர்தலிலும் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடரும். இந்த கூட்டணியில் ஆரோக்கிய விவாதங்கள் வந்து செல்லும். தி.மு.க காங்கிரஸ் இடையேயான பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தொடர்பாக பேசியுள்ளோம். காங்கிரஸ் தலைமை எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளது. துக்ளக் -உடன் முரசொலியை ரஜினி ஒப்பிட்டு பேசியது தவறு” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு