தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்: முதல்வர், துணை முதல்வர், மருத்துவமனை வருகை! #NowAtVikatan

19-01-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்: முதல்வர், துணை முதல்வர், மருத்துவமனை வருகை!
உணவுத் துறை அமைச்சர் காமராஜ், கொரோனாத் தொற்று காரணமாகச் சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அமைச்சர் காமராஜ் அனுமதிக்கப்பட்டுள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு முதல்வர், துணை முதல்வர் வருகை தந்தனர். அமைச்சர் காமராஜுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி மருத்துவர்களிடம் முதல்வர், துணை முதல்வர் கேட்டறிந்தனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அமைச்சர் காமராஜுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை உறுதி!

வரும் 27ம் தேதி சசிகலா விடுதலை உறுதி!
வரும் 27ம் தேதி சசிகலா விடுதலையாவது உறுதியானதாக, அதிகாரப்பூர்வ கடிதம் கிடைத்திருப்பதாக வழக்கறிஞர் தகவல்
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா மீது குற்றப்பத்திரிகை!

குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, அண்ணாமலை இண்டஸ்ட்ரீஸ் நிறுவன உரிமையாளர் எஸ்.விக்னேஷ், தமிழக போலீஸ், உணவுப் பாதுகாப்புத் துறை, மாநில மற்றும் தேசிய ஜி.எஸ்.டி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.
அமைச்சர் காமராஜூக்குத் தீவிர சிகிச்சை!
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உணவுத் துறை அமைச்சர் காமராஜூக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உணவுத் துறை அமைச்சர் காமராஜ், கொரோனாத் தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் கடந்த 6-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவரை எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
`அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்!’
அடையாறு புற்றுநோய் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு ஆணிவேராக இருந்தவர் மருத்துவர் சாந்தா. வயோதிகத்தைக்கூடப் பொருட்படுத்தாமல், புற்றுநோய் நிறுவனத் தலைவராகப் பணியாற்றிவந்தார். கொரோனா சமயத்தில் பொதுமக்களுக்கு சிகிச்சையளிப்பதை மட்டும் தவிர்த்துவந்தார். தனது அலுவலக வீட்டில் இருந்தபடியே வழக்கமான நிர்வாகப் பணிகளை மேற்கொண்டுவந்தார். சாந்தாவுக்கு ஆஸ்துமா பாதிப்பு இருந்திருக்கிறது. அதனால் அவ்வப்போது சுவாசப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்துக்கொண்டுவந்தார். இந்தநிலையில், கடந்த சில நாள்களாக சாந்தாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.
ஞாயிற்றுக்கிழமை அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்குச் சில மருத்துவப் பரிசோதனைகள் நடந்திருக்கின்றன. பின்னர் வீடு திரும்பிய நிலையில், திடீரென நேற்று இரவு அவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று காலை 3:30 மணியளவில் மருத்துவர் சாந்தா காலமானார். அவருக்கு வயது 94.
மருத்துவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி முதல் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகிறார்கள். 1மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும்’ என முதல்வர் பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
பிரதமர், முதல்வர் சந்திப்பு!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாள்கள் சுற்றுப் பயணமாக டெல்லி சென்றிருக்கிறார். அவருடன் அமைச்சர் ஜெயக்குமாரும் சென்றிருக்கிறார். டெல்லியில் அ.தி.மு.க எம்.பி-க்கள் முதல்வரை வரவேற்றனர். நேற்று இரவு 7:30 மணிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இல்லத்துக்குச் சென்று அவரைச் சந்தித்தார் முதல்வர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், இன்று காலை முதல்வர், பிரதமர் மோடியை அவரின் இல்லத்தில் சந்தித்து பேசிவருகிறார். தமிழகத்தில் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், தமிழக அரசியல் களம் குறித்து விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஜெயலலிதா நினைவிடத் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு அரசு விழாக்களில் கலந்துகொள்ளவும் மோடிக்கு அழைப்பு விடுக்கவிருக்கிறார் முதல்வர் என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.