Published:Updated:

கொரோனா எதிரொலி - தமிழகத்தில் மார்ச் 31-ம் தேதி வரை கோயில்களில் சாமி தரிசனம் ரத்து #NowAtVikatan

கோயில்கள்
கோயில்கள்

19.3.2020 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Mar 2020 8 PM

பெரிய கோயில்களில் சாமி தரிசனம் ரத்து!

கொரோனா எதிரொலியாக தமிழகத்தில் உள்ள அனைத்து வாரச்சந்தைகளையும் மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவு. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ‘தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் பெரிய நகைக்கடைகள், பெரிய ஜவுளிக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் நாளை முதல் மூடப்படும். தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களில் நாளை முதல் மார்ச் 31-ம் தேதி வரை சாமி தரிசனம் ரத்து.

பெரிய தேவாலயங்கள் மற்று மசூதிகளுக்கு மக்கள் வருவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களை விற்கும் மளிகை, மருந்தகங்கள், காய், கனி கடைகள், உணவகங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்படும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களுக்கான சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்படும்’ என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 Mar 2020 5 PM

இந்தியாவில் 4  ஆக உயர்ந்த உயிரிழப்பு!

கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 -ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்திருந்தனர். இந்தியாவில் இதுவரை 167 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 25 பேர் வெளிநாட்டினர்.

19 Mar 2020 4 PM

தமிழகத்தில் உயர்ந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருவருக்குப் பாதிப்பு இருந்தது அதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி விட்டார், மற்றொருவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மூன்றாவதாக 21 வயது நிரம்பிய இளைஞருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

தற்போது அந்த இளைஞர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 17-ம் தேதி அயர்லாந்திலிருந்து சென்னை திரும்பிய அவர் தனக்கு வைரஸ் தொற்று அறிகுறி இருப்பதாக நேற்று ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு அவருக்கு நடப்பட்ட சோதனையில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த இளைஞரின் உடல்நிலை சீராக இருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

19 Mar 2020 4 PM

திருப்பதி கோயிலுக்குப் பக்தர்கள் வரத் தடை!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் இந்த சூழலில் திருப்பி ஏழுமலையான் கோயிலுக்குப் பக்தர்கள் வரத் தற்காலிக தடை விதித்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பதி
திருப்பதி

மலைப்பாதை அடைக்கப்பட்ட நிலையில், கோயிலில் அர்ச்சகர்கள் மட்டும் ஆறு கால பூஜை நடத்தத் தேவஸ்தானம் பரிசீலனை செய்துவருகிறது. தற்போதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 150-ஐ தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

19 Mar 2020 2 PM

மத்திய அரசு புதிய அறிவிப்பு!

50 சதவிகிதம் B, C பிரிவு ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்தால் போதும். எஞ்சிய 50 சதவிகிதம் B, C மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்துள்ளது மத்திய அரசு.

19 Mar 2020 1 PM

மத்திய அமைச்சரிடம் திமுக எம்பிக்கள் மனு!

திமுக எம்பிக்கள்
திமுக எம்பிக்கள்

பிலிப்பைன்ஸில் இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் மற்றும் ஈரானில் தவிக்கும் மீனவர்களை தனிவிமானம் மூலம் இந்தியா அழைத்து வரவேண்டுமென வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை தி.மு.க எம்.பிக்கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். இந்தக் குழுவில் டி.ஆர்.பாலு, கனிமொழி, தயாநிதி மாறன், ஆ.ராசா உள்ளிட்ட திமுக எம்பிக்கள் இருந்தனர்.

19 Mar 2020 10 AM

168 ரயில்களின் சேவை ரத்து!

கொரோனா அச்சம் காரணமாக பயணிகள் வருகை குறைந்ததால் நாடு முழுவதும் 168 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்புதிவு செய்திருந்த பயணிகள், டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததால் நாளை முதல் வரும் 31ம் தேதி வரை இயக்கப்படவிருந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.

பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க அற்புதம்மாள் கோரிக்கை!

‘29 ஆண்டு நெடிய சிறைவாசம் தந்த மன அழுத்தம் BP, மூட்டு வீக்கம் தொடங்கி 2015 முதல் சிறுநீரக கிருமித் தொற்று எனத் தொடர் சிகிச்சையில் இருக்கும் பேரறிவாளனை COVID19 எளிதில் தொற்ற வாய்ப்புள்ளதால் அறிவு உட்பட வயதான மற்றும் நோயாளி சிறையாளிகளுக்கு உடனடியாக விடுப்பு வழங்குக’ என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்துள்ளார்.

19 Mar 2020 9 AM

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை 151 ஆக இருந்த நிலையில் இன்று 15 பேருக்கு உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனினும், கொரோனா உறுதியான 166 பேரில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 15 பேர் குணமாகியுள்ளனர் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பும் அதை எதிர்கொள்வது குறித்தும் நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார். இதை பிரதமர் அலுவலகம் ட்விட்டர் பதிவு மூலம் தெரிவித்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு