Election bannerElection banner
Published:Updated:

`முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி’ - ஏ.என்.ஐ தகவல் #NowAtVikatan

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்

19-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

19 Apr 2021 7 PM

மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி!

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

வரும் மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்டமாக இந்த அறிவிப்பினை மத்திய அரசு அறிவித்துள்ளது.

19 Apr 2021 6 PM

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா! -ஏ.என்.ஐ தகவல்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதால் அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

19 Apr 2021 6 PM

11 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் வாரம் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா தொற்று, நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,941 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3,347 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 44 பேர் உயிரிழந்துள்ளனர்.

19 Apr 2021 12 PM

டெல்லியில் ஒரு வாரம் லாக்டெளன்!

ஊரடங்கு
ஊரடங்கு
Representational Image

இந்தியத் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அந்த மாநிலத்தில் ஒரு வாரகால லாக்டெளனை அறிவித்திருக்கிறார் மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். இன்று இரவு தொடங்கும் ஊரடங்கு, அடுத்த வாரம் திங்கள்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும். ஏற்கெனவே டெல்லியில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாள்களில் ஊரடங்கு ஆகியவை அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த முழு ஊரடங்கு நாள்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கான போக்குவரத்து இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் போன்ற ஏற்கெனவே திட்டமிட்ட நிகழ்வுகள் தகுந்த ஏற்பாடுகளுடன் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 Apr 2021 11 AM

பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தைத் தொடுகிறது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறை, படுக்கை பற்றாக்குறை போன்ற புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. கடந்த ஆண்டைவிட பாதிப்பு அதிக அள்வில் இருப்பதால், நிலவரம் மக்களை கவலைகொள்ளச் செய்திருக்கிறது. இந்தநிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11:30 மணிக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான அவரச ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

19 Apr 2021 10 AM

மருத்துவமனையில் முதல்வர் அனுமதி:

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். இந்தநிலையில், இன்று அவர் சென்னை அமைந்தகரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சைக்கு முன்னதாக அவருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததால், தற்போது அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

19 Apr 2021 9 AM

ஒரே நாளில் 2,73,810 பேருக்குத் தொற்று!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் மேலும் புதிதாக 2,73,810 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு 1,50,61,919 என்ற எண்ணிக்கையை எட்டியிருக்கிறது.

கொரோனா சோதனை
கொரோனா சோதனை

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,619. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 1,78,769-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 1,29,53,821-ஆக இருக்கிறது. தற்போது மருத்துவமனைகளில் 19,29,329 பேர் சிகிசையில் இருக்கிறார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு